மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீஅரவிந்த அன்னை

இந்தப் பிரபஞ்சம் தனக்குத் தேவையானதை தானே உருவாக்கிக் கொள்கிறது. அது மலராக இருந்தாலும் சரி... மகானாக இருந்தாலும் சரி!

மதியமும் மாலையும் சந்திக்கும் அந்த நான்கு மணி வெயிலில் தங்கள் மீது தூவலாய் விழும் நீர்த் திவலைகளை சிணுங்கலோடு அனுமதித்தன செடிகள். இலைகளில் விழும் துளிகள் மெல்ல திரண்டு இலையின் நுனி வழியே வழிவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மதில்தா. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போதெல்லாம் குழந்தைக்கு பாலூட்டும் பரவசம் அவளுக்கு. பாரீஸ் நகரத்தில் வாழும் செல்வாக்கு மிக்க பிரபல வங்கி அதிபர் மோரிஸ் அல்ஃபாஸாவின் மனைவி என்கிற அந்தஸ்து தராத திருப்தி, இந்தச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது ஏற்படுவதாக பலமுறை மோரிஸிடம் சொல்லி இருக்கிறாள்.

சின்னதாய் ஒரு பொய்க் கோபத்தோடு அதைக் கடந்துவிடுவது மோரிஸின் வழக்கம். ‘‘இந்தச் செடிகள்தானே எனக்குப் போட்டி...’’ என அவற்றை அடிப்பது போன்று கை ஓங்குவார். அலட்சியமாய் சிரித்தபடி பார்க்கும் மனைவியின் புன்னகையில் நெகிழ்ந்து, ‘‘பிழைத்துவிட்டுப் போ’’ எனச் செல்லமாய் செடியைத் தட்டுவார். அந்த தருணங்களில் எல்லாம் மதில்தா ஆனந்தத்தின் உச்சியில் நிற்பாள். தங்கள் இருவருக்கும் இடையேயான அன்பை அந்தச் செடிகள் வளர்ப்பதாக நம்புவாள்.

தன் அன்பை ஒரு செடியிடம் பங்கு போடுவதைக்கூட தாங்கிக்கொள்ள மோரிஸால் முடிவதில்லை. செடிகள் மீது தனக்கு இருக்கும் பிரியத்தால் அதையும் அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதை மதில்தா உணர்ந்தே இருந்தாள். இது மோரிஸ் வரும் நேரம்தான். வந்தவுடன் நிச்சயம் திட்டப் போகிறார். ‘‘ஏன் இதெல்லாம் செய்யற? வீட்ல எத்தனை வேலையாட்கள் இருக்காங்க... அவங்க பாத்துக்க மாட்டாங்களா’’ என கடிந்து கொள்வார்.

வாசலின் மரக்கதவு திறக்கும் சப்தம் கேட்டது. ‘‘அப்பா...’’ என்றபடி மத்தயோ வாசலை நோக்கி ஓடினான். ஓடி வந்த மகனை மோரிஸ் தூக்கிக்கொண்டார். மத்தயோ அப்பாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டான். முத்தம் என்ற பெயரில் கன்னத்தை எச்சில் படுத்தினான். பதிலுக்கு முத்தம் கேட்ட மகனை இறுக அணைத்து முத்தமிட்டார். தனக்கு தந்தை என்கிற அந்தஸ்து வழங்கிய எஜமானன் என்கிற நன்றி உணர்ச்சி அந்த முத்தத்தில் தெரிந்தது. 

‘‘அம்மா எங்க?’’
பதிலாய் கை நீட்டி சுட்டினான் மத்தயோ...
‘‘வந்துட்டீங்களா?’’ என்றவள்... ‘‘இறங்குடா... அப்பா இப்பதானே வந்தார். உடை மாற்றிட்டு வரட்டும்’’ என்றாள்.

‘‘என் மேல கரிசனம் இருக்கட்டும். எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டியா? ஒன்பது மாத கர்ப்பிணி மாதிரியா நடந்துக்கற. வயித்துல இருக்கற குழந்தைக்காகவாவது நல்லா ஓய்வு எடுத்துக்க வேண்டாமா? சரி, சாப்ட்டியா?’’மோரிஸின் வார்த்தைகளை புன்னகையால் எதிர்கொண்டாள் மதில்தா.‘‘எவ்வளவு நேரங்க சும்மா உட்கார்ந்திருக்கறது? இப்பதான் தண்ணீர் விட ஆரம்பிச்சேன்’’ என்றவளை அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தார் மோரிஸ்.இரவு.

நடுவில் தூங்கும் மகன், மனைவி மீது கால் போட, தூக்கி தன் பக்கத்தில் படுக்க வைக்க முயன்றார் மோரீஸ். சிணுங்கி அழுதான் மத்தயோ. ‘‘இருக்கட்டுங்க... பரவாயில்லை’’ என்றாள் மதில்தா.

‘‘இல்லம்மா, வாயும் வயிறுமா இருக்க. அவனுக்கு என்ன தெரியும். தொப்பு தொப்புன்னு காலத் தூக்கிப் போடுவான். ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா...’’

‘‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க’’ என்றவளின் தலையைத் தடவினார். நெற்றியை வருடினார். ‘‘இன்னும் ரெண்டு, மூணு வாரத்துல பிரசவமாயிடும்னு டாக்டர் சொல்லி இருக்கார். கவனமா இரு. தேவையானதெல்லாம் தயார் பண்ணிக்கணும். உதவிக்கு உன் தோழிங்க யாரையாவது வரச் சொல்லி இருக்கிறாயா?’’ - கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார் மோரிஸ்.‘‘நீங்க இருக்கும்போது எதுக்குங்க..?’’ - பேசிக் கொண்டிருந்தவள் தூங்கிப் போனாள்.

நடு இரவு. திடீரென கண் விழித்துப் பார்த்த மோரிஸுக்கு ஆச்சரியம். மதில்தா முகம் வெகு பிரகாசமாக இருந்தது. ஒரு ரம்மியமான ஒளி அவள் உடல் முழுதும் வியாபித்திருந்ததைப் பார்த்தார். ஒருவேளை ஜன்னல் வழியாக நிலவு வெளிச்சம் வந்து இப்படித் தெரிகிறதா? கவனித்தார். இல்லை, ஜன்னல்கள் எல்லாம் மூடி இருக்கின்றன; ஜனவரி பனி... ஜன்னலைத் திறந்தார். பனிப்பொழிவுக்கு மத்தியில் இரவு விளக்கு உயர்ந்த கோபுரத்தில் எரிந்து கொண்டிருந்தது. வானத்தில் முழு நிலவு இருந்தது.

அதன் கிரணங்களை பனி வெகுவாக மட்டுப்படுத்தி இருப்பதை கவனித்தார்.மதில்தாவைப் பார்த்தார். அந்த வெளிச்சம் அப்படியே இருந்தது. மூத்த மகனை வயிற்றில் சுமந்திருந்தபோது மதில்தா அனுபவித்த சிரமங்கள் அதிகம். அடிக்கடி எரிந்துவிழுவாள். சோர்வாகி விடுவாள். ஆனால், இம்முறை முகத்தில் சோர்வு இல்லை. கர்ப்பத்துக்கான எந்த அவஸ்தையும் காணோம். எப்பொழுதும் புன்னகையோடு இருக்கிறாள். புதிதாக இப்படி ஒரு ஒளி அவளைச் சூழ்ந்துள்ளது.

ஆச்சரியத்துடன் கவனித்த மோரிஸின் மனதில் ஒரு குரல் கேட்டது: ‘மோரிஸ்... மகத்தான ஒரு காரியம் உங்கள் மூலம் நிகழ உள்ளது. உன் மகள் தெய்வீகக் குழந்தை. உலகை அன்பில் மலர்த்தப் போகிறவள். மதில்தாவா ஒளிர்கிறாள் என்று நினைக்கிறாய்..? இல்லை... அவள் மணி வயிற்றில் இருக்கும் மாணிக்கம் ஒளிர்கிறது. காலம் தாண்டியும் நீயும் மதில்தாவும் புகழுடன் வாழப் போகிறீர்கள். இது பல ஜென்மங்களாக நீங்கள் செய்த வழிபாட்டின் பயன். மேற்கு உலகத்தையும் கிழக்கு உலகத்தையும் இணைக்கப் போகிற மிகப் பெரிய பிரபஞ்ச சக்தி மலரப் போகிறது. நீ கருவி... மகிழ்ச்சியோடு இரு. அமைதியாக இரு. ஆதூரமாகப் பார்த்துக் கொள்’ என்றது.

மோரிஸ் முகம் வியர்த்தது. மனசு குதூகலமாக இருந்தது. தெய்வீகத்தின் கொடை நம் மூலம் உலகத்திற்கு வருகிறது என்கிற பெருமிதம் பொங்க வானம் பார்த்து மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து விட்டார். எவ்வளவு நேரம் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்பது தெரியவில்லை. வைகறை பறவைகள் குரலெழுப்ப, மெல்ல விடியத் தொடங்கியது.
ஒரு தேவதையை எதிர்கொள்ளப் போகிற பொன்னான விடியல் அது.

1878, பிப்ரவரி 21. மதில்தா மோரிஸை அழைத்தாள்.
‘‘இன்று குழந்தை பிறந்துவிடும்’’ என்றாள்.
‘‘எப்படிச் சொல்ற?’’

‘‘ஆமாம்... எனக்கு அப்படித்தான் தோணுது’’ என்றாள்.
சொல்லிய நொடிகளுக்குள்ளாக வலியெடுக்க, மருத்துவர்கள் அழைக்கப் பட்டார்கள்.
பரபரப்பான நொடிகளின் செலவுக்குப் பிறகு, புத்தம் புது பூ பூத்தது.

ஆம்! அந்த தெய்வீகக் குழந்தை வீறிட்டு அழுதது. உலகை மகிழ்ச்சியாக்குவதற்காகவும், இனி யாரையும் துயரில் தவிக்க விடக்கூடாது என்பதற்காகவும் ஒலித்த அழுகை அது என்பது காலம் மட்டும் அறிந்த ரகசியம்.மோரிஸ் மனைவி இருந்த அறைக்குள் சென்றார். மதில்தா வாடிக் கிடந்தாள். அவளது நெற்றியை அழுத்தி நீவினார். கண் திறந்து பார்த்தவளின் காதில், ‘‘நன்றி’’ என்றார். புறங்கையில் முத்தமிட்டார். தலை திருப்பி மகளைப் பார்த்தார்கள்.

 கண் மூடி தியானிப்பது போல படுத்திருந்த மகள் தேவதை என்பது அவருக்குத் தெரியும். அவளுக்கும் உணர்த்தப்பட்டது. மெல்ல அந்த தேவதை என்கிற உணர்வு மறைந்து, பெற்றவர்கள் என்கிற மனசு மலர்ந்தது. மாயை தனது வலிமையான கரங்களால் அவர்களைத் தழுவிக் கொண்டது.‘‘என்ன பெயர் வைக்கலாம் மோரிஸ்?’’ மதில்தா கேட்டாள்‘‘நீயே சொல்’’மிரா....மோரிஸ், மிரா... மிரா... மிரா... என சொல்லிப் பார்த்தார்.உலகம் சிலிர்த்துக்கொண்டது போன்ற உணர்வு... சொன்னவருக்கும் கேட்டவளுக்கும்!

தோட்டத்தில் இரண்டு பூக்கள் பேசிக்கொண்டன... இந்தியாவில் மீரா என்றொருவள் இருந்தாள். அவள் கண்ணனுக்காகவே வாழ்ந்தாள் என்று.அது தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இந்த மிராவின் காதுகளிலும் விழுந்திருக்கும் போலும்; கண் திறந்து சிரித்தாள்! அது கவிதை போலிருந்தது!

மலர் போல மனம் மலர....

ஸ்ரீஅரவிந்த அன்னை தாயன்பு கொண்டவர். கேட்கும் எதையும் உடனே கொடுத்தருளும் பேரன்பு அவருடையது. நமது நியாயமான பிரார்த்தனைகளை மலர்கள் அவரிடம் துரிதமாகக் கொண்டு செல்கின்றன. அதேபோன்று அன்னையிடமிருந்து அருளை நமக்குக் கொண்டு வந்தும் சேர்க்கின்றன. அன்னை அவர்கள் 898 வகையான மலர்களின் ஆன்மிக குணத்தை வகைப்படுத்தித் தந்திருக்கிறார். அந்த மலர்களை அன்னையிடம் சமர்ப்பித்து நமக்கு வேண்டியதை நாம் பெற முடியும்.

அதேபோன்று அன்னைக்கு சமர்ப்பிக்க விரும்பும் மலரை அழகான தட்டுகளில் பக்தியோடு அடுக்கி அன்னையின் முன்பு வைத்து, நமது கோரிக்கைகளை அன்னையிடம் மனமுருக சொல்ல, மலர் போல நம் மனம் மலர்ந்துவிடும்.

அன்னையின் கருணை, மழை போல நமக்குள் பொழிந்துவிடும்.ஒவ்வொரு விதமான பிரச்னைக்கும் ஒவ்வொரு விதமான மலரை அன்னை பரிந்துரைத்துள்ளார். அதன்படி வழிபட்டு நமக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம். நமக்காக மாத்திரம் அல்லாமல், நமக்குத் தெரிந்தவர்களுக்காகவும் பிரார்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
(பூ மலரும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்