இந்த உலகத்தையே காதல்தான் இயங்க வைக்குது!



இலியானா ஃபீலிங்

டோலிவுட், கோலிவுட்டை தொடர்ந்து இப்போது பாலிவுட்டில் பறந்து கொண்டிருக்கிறார் இடுப்பழகி இலியானா. அவரது ‘ஹேப்பி எண்டிங்’ பட ஹீரோ சயிஃப் அலிகான், ‘‘இந்த உலகம் அழியப்போகும் சமயத்தில் கூட ஒரு ஜோக் சொல்லி, அடுத்தவங்களை சிரிக்க வச்சு சந்தோஷப்படுத்தும் குணம் இலியானாவுக்கு இருக்கு...’’ என சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கிறார். எப்பவும் மகிழ்ச்சி துள்ளும் இலியானாவிடம் எதைப் பற்றியும் கேட்கலாம். தயங்காமல், தாராளமாக, தைரியமாகப் பேசுவதே அவரின் ப்ளஸ்!

‘‘இந்தியில் நாலு வருஷம் முன்னாடி அறிமுகமானீங்க... இதுவரை 4 படங்கள்தானே பண்ணியிருக்கீங்க..?’’ ‘‘ஆமாம். எனக்கு நம்பர்ஸ் முக்கியமில்லை. சில நல்ல படங்கள் வரும்போது நான் மும்பையில் இல்லாததால், அந்த சான்ஸை மிஸ் பண்ணியிருக்கேன். ‘நல்ல ரோல்களுக்காக காத்திருக்கேன்’னு நடிகைகள் சொன்னால், அவங்களுக்கு எந்த ஆஃபரும் வர்றதில்லைனு நினைப்பாங்க. அது எனக்குத் தெரியும். நிறைய படங்கள் வரலைன்னு கவலைப்படுற ஆளும் நான் கிடையாது!’’
‘‘நீங்க எப்படிப்பட்ட பொண்ணு?’’

‘‘எனக்கு தன்னம்பிக்கை அதிகம். மத்தவங்க என்னை விமர்சிக்கிறதுக்கு முன்னாடி, என்னைப் பத்தி நானே அலசி ஆராய்ந்து சுய பரிசோதனை பண்ணிக்குவேன். எல்லோரும் என்னை ஸ்வீட் அண்ட் இன்னசன்ட் பொண்ணா பாக்குறாங்க. பட், நான் ஒண்ணும் 3 வயசு குழந்தை இல்ல. என்னை இலியானாவா பார்த்தாலே போதும்னு நினைக்கிறேன்!’’
‘‘நீங்க இதுவரை செய்யாத... ஆனா, செய்ய விரும்புற விஷயம் என்ன?’’

‘‘ஐ லவ் சிங்கிங். ஒரு நல்ல பாடகியாகவும் பெயரெடுக்க விரும்புறேன். ஆனா, பாடுறதுக்கு வெட்கமா இருக்கு. என்னோட ஃபேமிலி மெம்பர்ஸ் முன்னாடி கூட நான் பாடினது கிடையாது. ஆனா, ஒயின் குடிச்சா இந்த வெட்கம் பறந்திடும். கரோகி நைட்ல கூட அப்படித்தான் பாடியிருக்கேன்!’’

‘‘காலேஜ் படிக்கறப்ப ஏதாவது லவ்..?’’

‘‘சான்ஸே இல்ல. ‘லவ்னாலே சுத்த டைம் வேஸ்ட்... லவ் பண்ணினா சந்தோஷம் போயிடும், வாழ்க்கையில செட்டில் ஆக முடியாது’ன்னு நினைச்சிருந்தேன். காலேஜ் முடிச்ச பிறகு தான், இந்த உலகத்தையே காதல்தான் இயங்க வைக்குதுன்னு உணர்ந்தேன். இப்போ நான் முன்ன மாதிரி இல்லை. நான் ரொமான்டிக் பைத்தியம். எமோஷனல் ஆகிடுறேன்!’’

‘‘இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?’’

‘‘நமக்கான இணையை நாம சந்திக்கும்போது இந்த மாற்றங்கள் தானாவே நிகழும். அந்த ரைட் பர்சன் அப்படி உணர வைக்கிற ஆளா இருந்தால், நம்ம இதயத்தை தாராளமா அவன்கிட்ட கொடுத்திடலாம். என்னோட வாழ்க்கையில எல்லாமும் இனி அவன்தான்னு நம்மளை நம்ப வைக்கணும். நம்மளை பொயட்டிக்கா, அந்த வானத்து நட்சத்திரங்களுக்கே அழைச்சிட்டு போய் மறுபடியும் யதார்த்தத்துக்கு கூட்டிட்டு வந்து விடற மனிதர்தான் நம்ம மனசுக்கு பிடிச்சவரா இருக்க முடியும். லவ்லதான் இப்படி இருக்கும்னு சொல்லிட முடியாது. ஃப்ரெண்ட்ஷிப்ல... நல்ல ஒரு நட்புல கூட இது சாத்தியம்தான். என் லைஃப்ல இப்படி ஒரு தடவை நடந்திருக்கு. உடனே அவர் யாருனு கேட்காதீங்க!’’

‘‘ஆன்ட்ரூ நீபோன் என்பவர்தான் உங்க லவ்வர்னு சொல்றாங்களே?’’

‘‘இல்லை. ஆனா, அவர் என் லைஃப்ல ரொம்ப ஸ்பெஷலானவர். இதை ஃப்ரெண்ட்ஷிப்னும் சொல்ல முடியாது. ரிலேஷன்ஷிப்னும் சொல்ல முடியாது. ஆனா, அவரை லவ் பண்றேன்னு எப்பவும் நான் சொன்னதில்லை!’’

‘‘ஒரு பர்ஃபெக்ட் டேட் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?’’

‘‘அழகான ஒரு கடற்கரை... மணற்பரப்பில் ஒரு பிக்னிக் டென்ட்... சிலுசிலு காத்து, வெதுவெதுப்பா அனல் மூட்டும் ஒரு தணல். வெட்ட வெளியில் வானைப் பார்த்து ரசித்தபடி மனசுக்கு பிடிச்ச மனிதரோடு பேசிக்கிட்டே இருக்கணும். கூடவே ரசனையான சாப்பாடு... கொஞ்சம் ஒயின். அதுக்கப்புறம்... வேறென்ன? ஒரு கவித்துவமான செக்ஸ்!’’

‘‘அப்போ இந்த கேண்டில் லைட் டின்னர்லாம் சாப்பிடுற சைவப் பொண்ணு இல்லையா நீங்க?’’

‘‘அதுவும் நல்லாதான் இருக்கும். ஆனா, கஷ்டப்பட்டு டிரஸ் பண்ணி அங்கே போறதை விட, ஒரு கான்ஜி டாப்ஸ் குட்டி ஷார்ட்ஸ்னு கேஷுவலா இருக்குறதுதான் எனக்கு வசதி!’’

‘‘ஒரு ரிலேஷன்ஷிப்ல செக்ஸ் எவ்வளவு முக்கியமானது?’’

‘‘இந்தக் கேள்வியை எனக்குள்ள நானே பல முறை கேட்டிருக்கேன். ஒரு மனிதர்கிட்ட இப்போ இருக்குற அழகும் கவர்ச்சியும் இல்லாம போயிட்டா, பெரிய நோய் வந்து முடங்கிட்டா கூட அவரை இதே மாதிரி நேசிப்போமான்னு யோசிச்சுப் பாருங்க. பதில், ‘யெஸ்’னா அதுதான் உண்மையான லவ். மற்றபடி செக்ஸுக்கும் லவ்வுக்கும் சம்பந்தமே இல்ல!’’

‘‘ஒரு பையன்கிட்ட ஒரு பொண்ணு எதிர்பார்க்கக்கூடிய தகுதிகள் என்னென்ன?’’

‘‘நோட் பண்ணிக்குங்க. எப்பவும் சிரிக்க வைக்கிறவனா இருக்கணும். எல்லா நேரங்கள்லயும் உண்மையானவனா இருக்கணும். பாஸிட்டிவ் விஷயங்களை தைரியமா வெளிப்படுத்துற அதே தில்லோடு, அவனது பலவீனங் களையும் தைரியமா ஷேர் பண்றவனா இருக்கணும். இந்தத் தகுதிகள் போதும், ஒரு பொண்ணு மனசில் இடம் பிடிக்க!’’

-மை.பாரதிராஜா