பற்றி எரியுது பெற்ற மனம்!



பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தையென்றால் குளிருக்கும் வெயிலுக்கும் காட்டாமல் பராமரிப்பார்கள். அப்படியொரு பிஞ்சுத் தளிரின் உடலில் தீப்பிடித்து எரிகிறதென்றால்..! சென்னை கே.எம்.சி மருத்துவமனையே கலங்கி நிற்கிறது.

தங்கள் குழந்தையின் உடலில் மர்மமான முறையில் தீப்பிடிப்பதாகச் சொல்லி கதறும் கருணாகரன் - ராஜேஸ்வரியும் ஆற்ற முடியாத துயரத்தில். கடந்த 2013ம் வருடம் இதே பிரச்னையோடு இவர்களின் மூத்த மகன் ராகுல் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அந்தத் தீக்காய வடுக்கள் இன்னும் கூட அவனுக்கு மறையவில்லை. அதற்குள் தம்பிக்கு!

‘‘எங்களுக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்குதுன்னு தெரியலை...’’ என தேம்பியபடி ஆரம்பித்தார் குழந்தையின் தந்தை கருணாகரன். “எனக்கு சொந்த ஊர் திண்டிவனம் பக்கத்துல இருக்கிற டி.பரங்கனி கிராமம். 8வது வரை படிச்சிருக்கேன். கூலி வேலை பார்க்குறேன். என் மனைவி ராஜேஸ்வரிக்கு நெடிமோழியனூர் கிராமம். 2010ம் வருஷம் எங்களுக்கு கல்யாணமாச்சு. அவங்களுக்கு அப்பா இல்லாததால நாங்க அங்கேயே தங்கிட்டோம். முதல் குழந்தை நர்மதா பிறந்தப்ப எந்தப் பிரச்னையுமில்ல.

ஆனா 2013ல ராகுல் பிறந்து 9வது நாள்ல திடீர்னு உடம்பு முழுக்க தீப்பிடிச்சு எரிஞ்சது. எங்களுக்கு எதுவுமே புரியல. உடனே குழந்தையை தூக்கிட்டு ஊர்ல இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போனோம். அப்புறம் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு வந்தபிறகுதான் சரியாச்சு. ஆனாலும் ஏன் அப்படி தீப்பிடிச்சுதுன்னு காரணம் தெரியல. அப்புறம் ராகுலுக்கு எந்தப் பிரச்னையும் வரலை. நல்லாயிருக்கான். நாங்களும் ஒன்றரை வருஷம் நிம்மதியா இருந்தோம். அடுத்ததா இப்ப பையன் பிறந்து ஒரு வாரத்துல அவனுக்கும் உடம்பு தீப்பிடிச்சு எரிஞ்சுடுச்சு’’ என்கிறார் அவர் அதிர்ச்சியோடு!

அவரைத் தொடர்ந்து நீண்ட தயக்கத்திற்குப் பிறகு பேசுகிறார் ராஜேஸ்வரி. ‘‘ஜனவரி 9ம் தேதி பையன் பிறந்தான். அடுத்த வாரம், பொங்கல் அன்னைக்கு வீட்டுக்கு வெளியே பாத்திரம் தேய்ச்சுட்டு இருந்தேன். எங்கம்மா காலையிலயே ஆடு மேய்க்க போய்ட்டாங்க. இவரு, ராகுலைத் தூக்கிட்டு வெளியே போய்ட்டார். நர்மதாவும் கூடவே போய்ட்டா. வீட்டுக்குள்ள தூங்கிட்டு இருந்த குழந்தை அழுற சத்தம் கேட்டுச்சு. உள்ளே வந்து பார்த்தப்ப, இரண்டு காலிலும் தீ பிடிச்சு எரிஞ்சிட்டு இருந்துச்சு. உடனே, தண்ணியை எடுத்து அணைச்சுட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனேன். அப்புறமா இங்க தூக்கி வந்தோம். ஒண்ணுமே புரியமாட்டேங்குது!’’

இவர்கள் வாழும் நெடிமோழியனு£ர் கிராமத்துக்கும் மர்ம நெருப்புக்கும் ஏற்கனவே விட்ட குறை இருந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன் கிராமத்தில் தாமாக வீடுகள் தீப்பற்றி எரிவதாக இம்மக்கள் மீடியாவில் கதறியிருக்கிறார்கள். இந்தத் தீயில் இரண்டு பெண் குழந்தைகள் பலியாகியும் உள்ளன. அதற்கும் இதற்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ என்ற ரீதியிலும் விசாரிப்புகள் எழுந்துள்ளன. இதற்கிடையே, அடுத்தடுத்து பிறந்த ஆண் குழந்தைகளுக்கு மட்டும் இந்தப் பிரச்னை வருவதால், ‘இந்தக் குடும்பத்துக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள்’ என்றும் பீதி அடைந்திருக்கிறார்கள் ஊர் மக்கள்.

‘‘இது ஒரு வினோத கேஸா இருக்கு!’’ என்கிறார் கே.எம்.சி மருத்துவமனையின் டீன் குணசேகரன். ‘‘இப்போ தனியா ஒரு மருத்துவக் குழுவை வச்சு எல்லா டெஸ்ட்டும் பண்ணிட்டு இருக்கோம். அந்த ரிசல்ட் வந்தபிறகு தான் அடுத்த கட்டம் என்னன்னு சொல்ல முடியும். இங்க வந்தபிறகு குழந்தை உடல்ல தீ பிடிக்கலை. தொடர்ந்து கேமரா மூலம் கண்காணிச்சிட்டு வர்றோம். குழந்தையும் நல்லாயிருக்கு. கால்ல உள்ள தீக்காயமும் ஆறிடுச்சு!’’ என்கிறார் அவர் நம்பிக்கையாக!

மரபணு காரணம்?

மனித உடலில் இப்படி மர்மத் தீ உண்டாக வாய்ப்பிருக்கிறதா? மருத்துவ அறிவியல் இதற்குத் தரும் விடை என்ன? சென்னையில் உள்ள குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரப் பிரிவு தலைவர் டாக்டர் கே.ஆர்.ராம்மோகனிடம் கேட்டோம்...‘‘இந்தக் குழந்தைக்கு வந்திருப்பது ‘Spontaneous Human Combustion’ எனப்படும் நோயாக இருக்கலாம். உடலில் தானாக நெருப்பு உண்டாகி எரியும் இந்நோய், வெளிநாடுகளில் நிறைய பேருக்கு வந்திருக்கிறது. அதற்கான ரிப்போர்ட்ஸ் நிறைய உள்ளது. வட இந்தியாவிலும் சில கேஸ்கள் வந்ததாகப் படித்திருக்கிறேன். இதை பிறவிக்குறை பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

இக்குறைபாடு உள்ளவர்களுக்கு உடலின் மூலக்கூறு அளவில் மாற்றம் ஏற்பட்டு நச்சுத்தன்மை கொண்ட அமிலங்கள் சுரந்து வியர்வையின் வழியே வெளியேறும். அந்நேரத்தில் உடலில் இப்படி தீ பிடிக்க வாய்ப்புள்ளது. மரபணு காரணமாக அடுத்தடுத்து இரு குழந்தைகளுக்கு இப்பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். இதெல்லாமே யூகம்தான். பிறவிக்குறைபாடு பிரச்னைகளை கண்டறியும் ஆய்வுக்கான தொழில்நுட்ப வசதிகள் இப்போதைக்கு இந்தியாவில் போதிய அளவில் இல்லை. மரபணு வழியாக ஆய்வுகள் செய்தால் மட்டுமே உண்மை தெரிய வரும்’’ என்றார் அவர்.

-பேராச்சி கண்ணன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன், எஸ்.அரிதாஸ்