கண்மாயைக் காப்பாற்றும் நாணல் நண்பர்கள்



“மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் கட்டியிருக்கிறது வலைவீசி தெப்பக்குளத்துல. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் இருக்கிறது வண்டியூர் கண்மாய்ல. உயர் நீதிமன்றத்தை உலகநேரி கண்மாய்லயும் மாவட்ட நீதிமன்றத்தை செங்குளம் கண்மாய்லயும்தான் கட்டியிருக்காங்க. மாநகராட்சி அலுவலகம் இருக்கிறது தல்லாகுளம் கண்மாய்க்குள்ள. கொக்கிக்குளம் கண்மாய்லதான் ஆல் இந்தியா ரேடியோ இருக்கு.

எஸ்.பி.ஆபீசுக்குள்ள சம்பக்குளம் கண்மாய் முழுகிடுச்சு. செல்லூர் கண்மாய்க்குள்ளதான் ரயில்வே குடோன் இருக்கு. பால் பண்ணை இருக்கிறது மதிச்சியம் கண்மாய்ல... இப்படி மதுரையில மட்டும் 40 கண்மாய்கள் அழிக்கப்பட்டிருக்கு. இருந்த நீர்நிலைகள்ல எல்லாம் கட்டிடத்தைக் கட்டிட்டு ‘வீட்டுக்கு வீடு மழைநீரை சேகரிங்க’ன்னு மக்களுக்கு அறிவுரை வேற சொல்றாங்க...’’

ஆதங்கமும் வேதனையும் பொங்கப் பேசுகிறார் தமிழ்தாசன். புதிது புதிதாகக் கட்டிடங்களைக் கட்டியெழுப்புகிற அரசுகள், புதிதாக ஒரு கண்மாயைக்கூட உருவாக்கவில்லை. மிஞ்சியிருக்கும் கொடிக்குளம் கண்மாயில் அண்ணா பல்கலை வளாகத்தையும், தல்லாகுளம் கண்மாயில் உலக தமிழ்ச்சங்க கட்டிடத்தையும் எழுப்ப தூர் வாருகிறார்கள். மதுரையின் ஜீவன் உறைந்திருக்கும் கண்மாய்கள் சிமென்ட் கலவையால் தூர்க்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிராக எழுகிறது நாணல் நண்பர்களின் குரல்.

அத்தனை பேரும் அறிவார்ந்த இளைஞர்கள். மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் என பல துறைகளில் பரபரப்பாக இயங்குபவர்கள். ஆதார மும், ஆராய்ச்சியுமாக களத்தில் நிற்கும் இவர்களின் உக்கிரம், மதுரையின் மிஞ்சியிருக்கும் இயற்கையை பாதுகாப்பு வளையமாகச் சூழ்ந்திருக்கிறது. பொழுது போக்குக்காக கிரிக்கெட் விளையாட இணைந்த கூட்டம், இன்று ஆலாய் தழைத்து நாணலாய் வேரூன்றி விட்டது.

‘‘ஞாயிற்றுக்கிழமையானா செண்பகத் தோட்டத்துல கூடிடுவோம். அங்கிருக்கிற மைதானத்துல கிரிக்கெட் விளையாடுவோம். பக்கத்துல இந்திரா காலனின்னு ஒரு பகுதி. ஒருநாள் அங்கிருந்த குடிசைகள் எரிஞ்சு போச்சு. ‘உடனே தண்ணி ஊத்தி அணைச்சிருக்கலாமே’ன்னு அந்த மக்கள்கிட்ட கேட்டோம்.

‘4 மாசமா இந்தப் பகுதிக்கு குடிக்கக்கூட தண்ணி வரலை’ன்னு சொன்னாங்க. எல்லாருக்குமே அது அதிர்ச்சியா இருந்துச்சு. சுற்றிலும் கண்மாய்கள்... போதாக்குறைக்கு வைகை... இவ்வளவு இருந்தும் 4 மாதமா தண்ணியே கிடைக்காத ஒரு பகுதி மதுரைக்குள்ள இருந்ததை நம்பவே முடியலே.

‘தண்ணிக்கு என்னதான் பண்றீங்க?’ன்னு கேட்டப்போ, பக்கத்துல இருந்த சாக்கடைக் கால்வாயைக் கை காட்டினாங்க. அது வண்டியூர் கம்மாயோட வெளிப்போக்கு கால்வாய். இப்போ சாக்கடையா மாறிடுச்சு... அந்தக் கால்வாயைக் கடந்து வர ஒரு பனைமரத்தை வெட்டிப் போட்டிருந்தாங்க. நாலைஞ்சு பேர் தவறி சாக்கடைக்குள்ள விழுறது அன்றாட நிகழ்வு. இப்படிப்பட்ட சூழலுக்கு மத்தியிலதான் நாம வாழ்ந்துக்கிட்டிருக்கோம்ங்கிறத ஜீரணிக்கவே சிரமமா இருந்துச்சு.

எல்லோரும் கூடிப் பேசினோம். ஏதாவது செய்ய தீர்மானிச்சோம். மாநகராட்சி அதிகாரிகள்கிட்ட மனு கொடுத்தோம். ‘எங்கள் ஊரை அத்திப்பட்டி ஆக்காதே’ன்னு போஸ்டர் போட்டு ஆர்ப்பாட்டம் செஞ்சோம். உடனடியா அந்தப் பகுதிக்கு தண்ணி கொடுத்தாங்க; சாலை வசதி செஞ்சு கொடுத்தாங்க. இந்திரா காலனி மக்கள் முதல் குடத்துத் தண்ணியை எங்க கையில கொடுத்தப்போ பெருமிதமா இருந்துச்சு.

விளையாட்டுக்காகக் கூடினவங்க, விளையாட்டுத்தனங்களை விட்டுட்டு ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடிப் பேசினோம். மதுரையோட நீர்நிலைகள் பற்றி ஆராய்ச்சியில இறங்கினோம். கண்மாய்கள் எல்லாம் கட்டுமானங்களா மாறின கொடுமையைக் கண்டுபிடிச்சோம். வைகையில 62 இடங்கள்ல கழிவுகள் கலக்கிறதையும் ஆதாரத்தோட ஆவணப்படுத்துனோம். மிஞ்சியிருக்கிற கண்மாய்கள், அதற்கான வாய்க்கால்கள் எல்லாத்திலயும் ஆக்கிரமிப்புகள்... சேலத்துல நீராதாரப் பாதுகாப்புல தீவிரமா இயங்கிக்கிட்டிருக்கிற பியூஸ் மானுஷை சந்திச்சோம். அவரோட வழிகாட்டுதல்ல மக்களை ஒருங்கிணைச்சு, வண்டியூர் கண்மாய்க்குள்ள இறங்கி, ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் பண்ணினோம். அது நல்ல தொடக்கமா அமைஞ்சுது.

தனித்தனிக் குரல்களை ஒரே குரலா மாத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்த பிறகுதான் ‘நாணல் நண்பர்கள்’ இயக்கத்தை ஆரம்பிச்சோம். பொறுப்புகளைப் பிரிச்சுக்கிட்டோம். நான் நீர்நிலைகள் பற்றி விஷயத்தைக் கையாண்டேன். வேளாண்மை சார்ந்த வேலைகளை பூபாலனும் காளிமுத்துவும் செஞ்சாங்க. வனம் சார்ந்த பிரச்னைகளை கார்த்திக் பாத்துக்கிட்டார். சூழலியல் சார்ந்த விஷயங்களை குழந்தைகளுக்குக் கொண்டு போய் சேர்க்கிற வேலையை பிரசன்னாவும் லதாவும் செஞ்சாங்க. மாற்று மருத்துவம், மாற்று உணவு சார்ந்த பணிகளை வித்யா, துர்கா முன்னெடுத்தாங்க. வரலாறு சார்ந்த விஷயங்களை சாதிக் பாத்துக்கிட்டார். ஆய்வுகள், போராட்டங்கள், செயல்பாடுகள்னு பயணம் நகர்ந்துக்கிட்டிருக்கு’’ என்கிறார் தமிழ்தாசன். ‘நாணல் நண்பர்கள்’ இயக்கத்தின் முன்னணித் தோழர்.

30க்கும் மேற்பட்டோர் நாணலில் செயல்படுகிறார்கள். பேச்சை விட செயல் தீவிரமாக இருக்கிறது. ‘‘மதுரையை ஒட்டி 600 ஏக்கர் பரப்புல வெள்ளிமலைக் கோயில் காடு இருக்கு. அந்தக் காட்டுல ஆண்டிச்சாமின்னு ஒரு சாமி இருக்கு. அங்கிருக்கிற மக்கள் சாமிக்குப் பயந்து ஒரு சுள்ளியைக் கூட தொடமாட்டாங்க. இன்னைக்கு அந்தக் காட்டுல 200 ஏக்கர் மட்டும்தான் மிஞ்சியிருக்கு. மற்ற பகுதிகள்ல வன அடையாளமே அழிஞ்சிடுச்சு. அந்தக் காட்டுல ஆய்வு செஞ்சோம். 66 வகையான பறவைகள்,  165 வகையான மரங்களை வகைப்படுத்துனோம். தேவாங்கும், நரியும் கூட இருந்துச்சு. மிஞ்சியிருக்கற வனத்தைக் காப்பாத்துற வேலையில இறங்கியிருக்கோம்.

கொடிக்குளம் கண்மாய்ல அண்ணா பல்கலைக்கு அடிக்கல் நாட்டினப்போ மக்களை ஒருங்கிணைச்சு மறியல் செஞ்சோம். ஒரு வழக்கறிஞர் இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு போனார். அதன்மூலமா அந்தக் கண்மாய் காப்பாற்றப்பட்டிருக்கு. அதேமாதிரி தல்லாகுளம் கண்மாய்ல தமிழ்ச்சங்க கட்டிடம் கட்டுற பணிகள் தொடங்கினபோது, ‘வேடிக்கை பார்க்கலாம் வாங்க’ன்னு ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். இது ஒருவிதமான போராட்ட வடிவம். கண்மாயை அழிக்கிற காட்சியை வேடிக்கை பார்க்கிற போராட்டம்.

அதுக்கும் நல்ல எதிர்வினை... இப்போ வித்தியாசமான ஒரு வரலாற்றுப் பிரசாரத்தை முன்னெடுத் திருக்கோம். கண்மாய்க் கரைகள்ல மைக்செட் கட்டி மக்களைத் திரட்டி அந்த கண்மாய்க்கும் மக்களுக்குமான வரலாற்றைப் பேசுறோம். இனிமேல் மிஞ்சியிருக்கிற எந்தக் கண்மாய்லயும் ஒரு அங்குலம் கூட சேதப்படுத்த விடமாட்டோம்...’’ என்கிறார் இன்னொரு முன்னணி செயற்பாட்டாளர் பூபாலன்.

சிவரக்கோட்டை என்ற கிராமத்தில் 1400 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் பணி தொடங்கவிருக்கிறது. ஜனவரி 25ம் தேதி தமிழ்தாசனுக்கு திருமணம். திருமண மண்டபத்தில் கூடிய உறவினர்களிடமும், மக்களிடமும் அந்தத் திட்டத்தைக் கைவிடக்கோரியும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு எதிராகவும் கையெழுத்து இயக்கம் நடத்தியிருக்கிறார்கள். ‘வாழ்க்கை வேறு, போராட்டம் வேறல்ல’ என்பதுதான் மாற்றத்துக்கான பால பாடம். நாணல் நண்பர்கள், நம்பிக்கை அளிக்கிறார்கள்!

சுற்றிலும் கண்மாய்கள்... போதாக்குறைக்கு வைகை... இவ்வளவு இருந்தும் 4 மாதமா தண்ணியே கிடைக்காத ஒரு பகுதி மதுரைக்குள்ள இருந்ததை நம்பவே முடியலே.

வெ.நீலகண்டன்
படங்கள்: ஜெயப்பிரகாஷ்