யோக்கியன்



அதிகாலை நடைப்பயிற்சி. நடு ரோட்டில் கிடந்தது ஒரு இளநீர். தூரத்துப் பேருந்து நிறுத்தத்தில் ஒரு இளநீர் வண்டி உண்டு. அங்கே வாங்கிச் சென்ற யாரோதான் வழியில் தவறவிட்டிருக்கிறார்கள். இது போக்குவரத்திற்கு இடைஞ்சல்... சைக்கிளில் பள்ளிப் பிள்ளைகள் வேறு வருகிற நேரம். எடுத்தேன்.

இரு நிமிட நடையில் அந்த இளநீர் வியாபாரியை அடைந்தேன். ‘‘யாரோ தவற விட்டிருக்காங்கப்பா. வந்தா கொடுத்துடு.’’அவன் என்னை பிரமிப்பாய் பார்த்தான். பைக் இளைஞன் ஒருவன் வந்து நின்று கூப்பிட்டதைக் கூட அசட்டை செய்துவிட்டு அந்த இளநீரை உடனடியாக சீவி என்னிடம், ‘‘குடிங்க சார்’’ என்றான்.

‘‘எனக்கு எதுக்குப்பா? நான் காசு எடுத்து வரலை!’’‘‘என்ன சார், நீங்க மட்டும்தான் ரோட்டுல கிடக்குறதை நேர்மையா கொண்டு வந்து கொடுப்பீங்க! நாங்க யோக்கியனா நடக்கவே கூடாதா? இது உங்களுக்கு கிஃப்ட் சார்! உங்களை மாதிரி நல்லவங்க இருக்கறதாலதான் நாட்டுல கொஞ்சமாவது மழை பெய்யுது’’ என்றான்.அவன் மனம் புரிய... வாங்கிக் குடித்தேன்.

வியாபாரி திருப்தியாய் திரும்பி, ‘‘சார்! உங்களுக்கு இளநியா?’’ என இளைஞனிடம் வியாபாரத்தைத் தொடங்கினான். ‘‘வேணாம். ரெண்டு யோக்கியன்களைப் பார்த்த திருப்தியே போதும். நான்தான் அந்த இளநியைத் தொலைச்சவன்!’’ என்றபடி கிளம்பிவிட்டான் அவன்.

காரை ஆடலரசன்