விராட் கோலியின் ஃபிட்னஸ் குரு!



‘அடடா, என்ன ஃபிட்னஸ் பாரு’ என நாம் வியக்கிற டாப் மனிதர்களின் உடல் ரகசியம் சங்கர் பாசுவின் கையில்! கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கிறிஸ் கெயில், தினேஷ் கார்த்திக், ஸ்குவாஷ் தீபிகா மற்றும் ஜோஸ்னா, சிவகார்த்திகேயன், சமந்தா, ஆண்ட்ரியா என இளைய தலைமுறையே பாசு வார்த்தைக்குக் கட்டுப்படுகிறது. கோட்டூர்புரத்தின் primal patterns ஃபிட்னஸ் ஸ்டுடியோ, பாசுவின் சாம்ராஜ்ஜியம். உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் எல்லா வி.ஐ.பிகளும் நாடி வருவது இவரையே. இந்தியாவின் முக்கியமான   certified strength and conditioning specialist!

‘‘உடலின் முக்கியத்துவத்தை அனைவரும் மறந்து விட்டோம். இன்றைய லைஃப்ஸ்டைல் அப்படி. நாம் அண்ணாந்து பார்க்கும் பிரபலங்கள் பற்றி நிறையப் பேசுகிறோம். ஆனால் அவர்களின் ஃபிட்னஸ் அக்கறை சொல்லி மாளாது. உடலை சீராக வைத்திருக்க உடற்பயிற்சியைத் தவிர வேறு வழியில்லை. கையை, காலை அசைக்காமல் எப்படியாவது ஃபிட்டாக இருக்க வேண்டும் என நினைத்தால் நிச்சயம் நடக்காது.

நாம் எப்போது விழிக்கிறோம், எத்தனை மணி நேரம் தூங்குகிறோம் என்பதுதான் ஃபிட்னஸ்ஸின் தாரக மந்திரம். வேடிக்கையில்லை... இயற்கையே நமக்கு காலையில் எழுவதற்கான அமைதிச் சூழலைத் தருகிறது. இளம் கதிர்களை எழுப்பி நம்மைத் தொடுகிறது. நாம் கதவை அடைத்துக்கொண்டு சூரிய உதயத்தை மறுக்கிறோம். இரவு எதையாவது சாப்பிட்டுவிட்டு, ரொம்ப நேரம் சினிமா பார்த்துவிட்டு நேரம் கெட்டு தூங்குகிறோம். அதனால் உடல்நலம் நம் கையை விட்டு நழுவுகிறது.

இரவு 10 மணி வரைதான் விழித்திருக்கலாம். இரவு 10 மணி முதல் 2 மணி வரை நம் உடல் தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. 2 மணிக்கு மேல் மூளை ஓய்வெடுக்கிற நேரம். அதைத்தான் நாம் கெடுத்துக்கொள்கிறோம்!’’ என்கிற பாசு, பி.எம்.டபிள்யூவில் ஹீரோ மாதிரி வந்திறங்குகிறார். இயக்குநர் மகேந்திரனின் மருமகன் இவர்!

‘‘சொகுசு வாழ்வு தவறில்லை. ஆனால் கொஞ்சமேனும் லிஃப்ட்டை புறக்கணியுங்கள். சமயத்தில் நாய் துரத்தியாவது ஓடுங்கள். உடற்பயிற்சி மிகமிக அவசியம். வாக்கிங், ஜாக்கிங், ஜிம், ஏரோபிக்ஸ், யோகா... எது உங்கள் விருப்பமோ, எது உங்களுக்குத் தேவையோ அதைத் தேர்ந்தெடுங்கள். அதை முறையாக ஓர் ஆசிரியர் மூலம் பயிலுங்கள். கதையோ கவிதையோ எழுதுவது உங்கள் புலமை, திறமையாக இருக்கலாம். ஆனால் ‘அனா, ஆவன்னா’ கற்க ஆசிரியர் அவசியம்தானே!

‘எதற்கும் நேரமில்லை’ என்று பிகு பண்ணாதீர்கள். அது பிரச்னையை நீங்களே வரவழைத்துக் கொள்கிற முயற்சி. வருங்காலத் தில் மருந்தே உணவாகி விடக்கூடாது என நினைத்தால் இப்பொழுதே உணவை மருந்தாக்குகிற அதிசயம் பழகுங்கள். உணவில் கார்போஹைட்ரேட் மட்டுமே ஆக்கிரமித்து விடாமல், புரோட்டீன் சேருங்கள். கொஞ்சம் வசதி இருந்தால் டயட்டீஷியன் அட்வைஸ் கேளுங்கள். தொப்பை என்பது நமக்கு நாமே சேர்க்கிற இம்சை.

சரியான நேரத்தில் சரியான உணவு சாப்பிடாமல், நேரங் கெட்ட வேளைகளில் வயிற்றை நிரப்பினால், அது தொப்பையை தோரணம் கட்டி வரவேற்கும். அது ஆரோக்கியமான உணவாக இல்லாமல் போனால், இன்ன பிற அவஸ்தைகளும் சேர்ந்து, ‘வணக்கம் தலைவா’ என வயிற்றில் குடியேறும். ஜாக்கிரதை!

ஐ.பி.எல். பெங்களூரு அணியான ராயல் சேலஞ்சர்ஸுக்கு நான்தான் ஃபிஸிகல் பிட்னஸ் பொறுப்பாளர். இங்கே விராட் கோலி பயிற்சி பெறுவதையெல்லாம் பார்த்தால் உங்களுக்கே வியர்த்து விடும். நீங்கள் வியக்கிற பேட்டிங் திறமையும், அழகும், சுறுசுறுப்பும், சமயோசிதமாக முடிவெடுக்கிற விதமும்... எல்லாமே உடம்பை சரியாக வைத்துக்கொள்வதில்தான் வருகிறது. கோலி வெறியாக உடற்பயிற்சியை மேற்கொள்வார். நாள் தவறாத, நேரம் தவறாத உடல் கவனம் அவருக்கு. கண்ணுக்குத் தெரியாத உயரத்திற்கு சிக்ஸர் பறந்து விட்டது என நீங்கள் கை தட்டினால், அது அவர் உடல் தகுதிக்கே போய்ச் சேர்கிறது. என்னிடம் எல்லா நாட்டு வீரர்களும் பயிற்சியும், ஆலோசனையும் பெறுகிறார்கள்.

முன்பெல்லாம் திரை நடிகர்கள் தங்களை கவனமாக வைத்துக்கொள்ள முயற்சித்தார்கள். இப்போது எல்லா தரப்பு மக்களுக்கும் இந்த ஆர்வம் பழகிவிட்டது. பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சஞ்சய் சுப்ரமணியன் என் ஆலோசனைப்படி நடந்து தன் உடலைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார். இதனால் அவர் குரலும் அவர் சொன்னதைக் கேட்கிறது. ஆண்ட்ரியா, சமந்தாவின் ஸ்லிம் பியூட்டிக்கு அவர்களது தீவிர பயிற்சியும் காரணம்.

எடுத்துக் கொள்கிற உணவு முறையும் காரணம். ‘அட அவர்கள் அழகாய் இருக்கிறார்களே’ என வியந்து பிரயோஜனம் இல்லை. நீங்களும் உங்கள் உடல் மீது அக்கறைப்பட்டால், எல்லாமே சாத்தியம்தான். உங்களைப் புதுப்பிக்க நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஒரு மணி நேரம், மீதமிருக்கும் முழு நாளையும் உங்களுடையதாக்கித் தரும்.

 அதில் விருப்பமில்லையா உங்களுக்கு?’’
உங்களைப் புதுப்பிக்க நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஒரு மணி நேரம், மீதமிருக்கும் முழு நாளையும் உங்களுடையதாக்கித் தரும். அதில் விருப்பமில்லையா உங்களுக்கு?

- நா.கதிர்வேலன்