சந்தேகம்



விஸ்வநாதன் ஆட்டோவில் ஏறி அமர்ந்ததுமே டிரைவர் மீட்டரைப் போட்டான். ‘பரவாயில்லையே..!’ என மனதுக்குள் பாராட்டியபடியே மீட்டரை கவனித்துக்கொண்டு வந்தவர், திடுக்கிட்டார். ஒரு கிலோ மீட்டரைத் தாண்டி பயணம் செய்ததாக அது காட்டியது. நிச்சயம் வண்டி அரை கிலோ மீட்டர் கூட போயிருக்காது.‘‘சொல்லாமலேயே மீட்டர் போடும்போதே நினைச்சேன்... என்னப்பா மீட்டர் இப்படி ஓடுது?’’ எனக் குரலை உயர்த்தினார் விஸ்வநாதன்.

‘‘பெருசு, இந்த மீட்டரை நானா கண்டுபிடிச்சேன். சரியா ஓடுதுன்னு இதையெல்லாம் இன்ச் டேப் வச்சி அளந்தா காட்ட முடியும்? எல்லாரும் பேசாமதானே வர்றாங்க? உனக்கு மட்டும் ஏன் சந்தேக புத்தி?’’ - காட்டமாக வந்தது பதில் டிரைவரிடமிருந்து.மீட்டர் காட்டிய பணத்தை வாங்கிக்கொண்டு, ஆட்டோவை பெட்ரோல் பங்க் பக்கம் திருப்பினான் டிரைவர். பெட்ரோல் போடும்போது மீட்டர் வேகமாகப் போவது போல் அவனுக்குத் தோன்றியது.

‘‘என்னப்பா... முக்கால் லிட்டர் கூட உள்ளே போயிருக்காது... ஒரு லிட்டர் காமிக்குது?’’ - சந்தேகமாகக் கேட்டான்.‘‘யோவ்... உனக்காக ஒரு ஆழாக்கு வச்சி அளந்து காட்டவா முடியும்? எல்லாரும் பேசாமதானே பெட்ரோல் போட்டுக்கிட்டுப் போறாங்க? உனக்கு மட்டும் ஏன் சந்தேக புத்தி?’’ - பங்க் ஊழியர் பதிலில் மௌனமானான்
டிரைவர்.       

*வி.சிவாஜி