ஆணழகனாக இருந்த விக்ரம் திடீரென்று அகோரமாக மாறியது எப்படி? அப்படி மாறியவர் தன் முரட்டு பழிவாங்கலை நிறைவேற்றியது எப்படி, எப்படி? இதுதான் ‘ஐ’!ஷங்கரின் பிரமாண்டப் படம் என்று நம்பிப் போனால், முதல் காட்சியிலிருந்தே அந்த எதிர்பார்ப்பை காட்சிகளின் விஸ்வரூபத்தில் விசிறிவிடுகிறார்கள்.

சந்தோஷமாக ஆட்டம், பாட்டங்களோடு ‘மிஸ்டர் இண்டியா’ கனவில் இருக்கும் ஆணழகன், விக்ரம். நேரில் கூட பார்த்திராத மாடல் எமியின் மீது ‘மெர்சலான’ காதல் அவருக்கு. சூழ்நிலை விக்ரமையும் மாடலாக்கி எமியோடு சேர்த்து வைக்க, இன்னொரு ‘மேல்’ மாடல் கடுப்பாகிறார். அவரோடு, இன்னும் விக்ரமே அறியாத விரோதிகளும் சேர்ந்து அவரை சோதனைக்குள்ளாக்கி பரிதாப நிலைக்குத் தள்ளுகிறார்கள். பின் அதே பரிதாப உருவத்தோடு அனைவரையும் விக்ரம் பழிவாங்கும் ஆவேசமே பின்பகுதி!

எப்போதும் சமூக அக்கறை யில் நெற்றியடியாய் அடிக்கும் ஷங்கர் இங்கே காதல் த்ரில்லரில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார். ‘தில்’ ஹீரோ, ‘ஜில்’ ஹீரோயின், கல்நெஞ்சு வில்லன்கள் என பிரதான பாத்திரங்களை ‘நச் நச்’ என அறிமுகப்படுத்தி ஐந்தாவது நிமிடத்திலேயே படத்திற்குள் நம்மை இழுப்பதில் முதல் வெற்றி அடைகிறார் இயக்குநர். ஆனால், முன் பகுதியில் தீப்பிடிக்கும் திரைக்கதை, பின்பகுதியில் கொஞ்சம் தளர்ந்து போய், எல்லாமே யூகிக்க முடிகிற கட்டத்திற்கு போகிறது.

திரைக்கதையை இறுக்கி இருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம். பிரமாண்டத்தை விட திரைக்கதையில் இந்தத் தடவை உழைத்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால், எல்லா திருப்பங்களும் முன்பே நமக்குத் தெரிந்து விடும்படி அமைந்துவிட்டதுதான் சற்றே பலவீனம்.தனக்கு ஏற்ற ஆக்ஷன், காதல் த்ரில்லரில் பின்னி எடுக்கிறார் விக்ரம்.

நிச்சயம் அடுத்த தேசிய விருதுக்கு சாத்தியங்கள் அதிகம். ஆணழகன் போட்டியில் தெரிகிற உற்சாகம், எமியைப் பார்த்த மாத்திரத்தில் வருகிற காதல், தமிழ் சினிமாவின் புதிய உயரங்களில் உடல் வருத்தி வேறுபடுத்திக் காட்டும் புதுமை என மனதை அள்ளுகிறார் விக்ரம். எப்போதும் ஷங்கர் தாங்கும் திரைப்படத்தை, தோள் மாற்றி விக்ரமும் கைப்பிடிக்கிறார். ஹேட்ஸ் ஆஃப் டு விக்ரம்!

எமி ஜாக்ஸன் நீச்சல் குளத்திலிருந்து தண்ணீர் வழியும் உடலோடு ஆகக் குறைந்த பிகினி உடையில் வந்தாலும் துளி விரசம் இருக்க வேண்டுமே! அழகான அளவுகளை உடைய சுத்தமான பிம்பம். அடடா! உயிரைக் கொடுத்து தமிழ் முகத்தைக் கொண்டு வந்ததில் வெள்ளைக்காரப் பெண்ணுக்கும் ஒரு லைக்!

படத்தின் முழுமையான உணர்வைக் கொண்டு வருவதில் சாத்தியமான வெற்றியை அடைந்திருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். ‘மெர்சலாயிட்டேன்...’, ‘என்னோடு நீ இருந்தால்...’, ‘அய்லா அய்லா ஐ...’ எனப் பாடல்களை ‘ஹிட் நம்பர்ஸ்’ ஆக்கிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, பின்னணியிலும் ‘சேஃப் கேம்!’.

திருநங்கைகளை ‘கதையின் போக்குக்காக’ எனச் சொன்னாலும் கிண்டல் செய்வது முறையல்ல. சமூகம் சக பாலினமாக அவர்களை ஏற்றுக்கொண்டது ஷங்கருக்குத் தெரியாதா? சந்தானம் தன் பங்குக்குப் போட்டு பொளக்கும் ஆபாச வசனங்களில் ஷங்கரே கத்தரி வைத்திருக்கலாம். இதெல்லாம் உங்களுக்கு அழகா சாரே?பழிக்குப் பழி கதையில் ரசிக்க வைக்கிறது ‘ஐ’!

- குங்குமம் விமர்சனக் குழு