இந்தியாவின் முதல் 7டி படம்!



மாமல்லபுரத்துக்கு விசிட் அடிக்கும் ஃபாரீனர்களையே ‘வாவ்’ சொல்ல வைக்கிறது அந்த ‘7டி எக்ஸ் தியேட்டர்’. இந்தியாவின் முதல் 7டி தொழில்நுட்ப தொல்பொருள் ஆவணப்படமாகத் தயாராகியுள்ளது ‘பல்லவ சாம்ராஜ்யம் - ஒரு கால சக்கர பயணம்’.

அதற்காகவே பிரத்யேகமாய் உருவாக்கப்பட்ட தியேட்டர்தான் இது. மாமல்லபுரத்தில் உள்ள கலை வடிவங்களின் வரலாற்றை 3டி கேமராவில் படமாக்கி, சிற்பங்களின் பின்னுள்ள நம் புராண, இதிகாசக் கதைகளை 20 நிமிட அனிமேஷனில், 2 கோடி ரூபாய் செலவில் படைத்திருக்கிறார்கள்.

‘‘3டி சினிமா தெரியும்... அதென்ன 7டி?’’

‘‘அம்யூஸ்மென்ட் பார்க்குகளில் எல்லாம் பார்க்கற விஷயம்தான்... ‘ஜங்கிள் ட்ராவல்’, ‘ஸ்போர்ட்ஸ் டிராவல்’, ‘ரோலர் கோஸ்டர்’, ‘ஐஸ் ஸ்கேட்டிங்’, ‘கார் ரேஸ்’னு விளையாடினவங்களுக்குத் தெரிந்த தொழில்நுட்பம்தான். ஸ்கிரீனில் மழை பெய்யும் காட்சி வந்தா அரங்கில் மழை பெய்யும்.

அரசன் மேல் மலர் தூவப்படும்போது, நம்மைச் சுற்றியும் பூ வாசம் புறப்படும். திரையில் இடி, மின்னல் வந்தால், அரங்கில் இருக்கை அசையும். திரையில் தெரியும் அந்த இடத்திற்கு... அந்தக் கால கட்டத்திற்கு அப்படியே நம்மை அழைத்துச் சென்று, ரியல் ஃபீலைக் கொடுக்கும் தொழில்நுட்பம் இது’’ என்கிறார் இந்த டாகுமென்ட்ரியை எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்திருக்கும் ஜோசப் செல்வராஜ்.

உண்மை வரலாறு தொடர்புடைய படம் என்பதால் இந்தியத் தொல்பொருள் துறைக்கு அனுப்பி, அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகே இதைத் திரையிட்டிருக்கிறார்கள். இப்போதைக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் திரையிடுகிறார்கள்.

தொடர்ந்து மற்ற மொழிகளிலும் டப் செய்யப் போகிறார்களாம். துணிந்து இந்தப் புது தொழில்நுட்பத்தில் படம் எடுக்க ஆர்வப்பட்டு வந்திருக்கிறார் தயாரிப்பாளர் டாக்டர் சி.எஸ்.எஸ்.பாரதி.

‘‘சீனாவில் ஜெட் லீயின் பல படங்களுக்கு வொர்க் பண்ணின நிறுவனம் எங்களோடது. இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு டாகுமென்ட்ரி பண்ணலாம்னு தோணுச்சு. இப்போ கூகுள்ல, யூ டியூப்பில் தகவல்கள் கொட்டிக் கிடக்குது. வர்றவங்க அதைப் படிச்சுத் தெரிஞ்சுக்கறாங்க; கைடுகளும் சொல்றாங்க.

இதிலிருந்து வித்தியாசமா ஏதாவது பண்ணினாதானே ஆடியன்ஸை ரீச் பண்ண முடியும்? மூவி கேப்சரிங், அனிமேஷன் டெக்னாலஜியைப் பயன்படுத்தி 7டி படம் ரெடி பண்ணலாம்னு ஐடியா தோணின அடுத்த நொடியே பரபரவென வேலையை ஆரம்பிச்சோம்’’ என பாரதி சொல்ல, தொடர்கிறார் ஜோசப்...

‘‘பல்லவர்கள் வரலாறு, மாமல்லபுர கோயில்கள், சிற்பங்கள் பத்தின வரலாற்றையும் சொல்லணும். அதே சமயம் போரடிக்காமலும் சொல்லணும். ஸ்கிரிப்ட் ரெடியானதும் ஆர்க்கியாலஜி அப்ரூவல் கிடைக்கவே ஆறு மாசம் ஆச்சு.

மாமல்லபுர சிற்பங்கள் பத்தி 40 வருஷமா ஆராய்ச்சி செய்து வரும் ஐ.ஐ.டி புரொபசர் சுவாமிநாதன் இந்த ஸ்கிரிப்ட்டுக்கு நிறையவே உதவினார். கி.பி 600லிருந்து 750 வரை காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவ மன்னர்களின் வரலாற்றை இதில் சொல்லியிருக்கோம். முழுக்க அனிமேஷனாவும் போயிடாம, கொஞ்ச நேரத்துக்கு தோல்பாவைக் கூத்து வடிவில் மகிஷாசுரமர்த்தினி கதையை அமைச்சிருக்கோம். அதுவும் அனிமேஷன்தான். ஆனா தெரியாது.

எல்லாமே நேர்த்தியா இருக்குதுன்னு பார்த்தவங்க பாராட்டுறாங்க. இது எங்க ‘க்ரோனிக்கல் இந்தியா’ சென்னை அலுவலகத்தில் பண்ணினதுதான். 3டி வேலைகளைப் பார்த்த ஸ்டீரியோகிராபர் கெவின், கேமராமேன் அஸார், மியூசிக் போட்ட ராபின் சத்யான்னு நல்ல டீம் எங்களோட பலம். 

அடுத்து விவேகானந்தர் வாழ்க்கை 7டியில் ரெடியாகுது. இன்னொரு பெருமையான விஷயம், தியேட்டரில் உள்ள அசையும், அதிரும் இருக்கைகள், தொழில்நுட்பங்கள்னு எதுவுமே வெளிநாட்டு இறக்குமதி இல்லை. எல்லாம் நம்ம அமிஞ்சிக்கரையிலயே செய்ததுதான்!’’அரசன் மேல் மலர் தூவப்படும்போது, நம்மைச் சுற்றியும் பூ வாசம் புறப்படும். திரையில் இடி, மின்னல் வந்தால், அரங்கில் இருக்கை அசையும்.

மை.பாரதிராஜா
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்