குட்டிச்சுவர் சிந்தனைகள்



கமர்ஷியல் தமிழ் சினிமா சில பஸ்களில் சில...


*குறுந்தாடி வச்சு குழப்பியடிச்சா விஞ்ஞானி, நெடுந்தாடி வச்சு குழப்பியடிச்சா அவன் மெய்ஞானி.

*வில்லனுடைய அடியாட்கள் வந்த குவாலிஸ்கள் எல்லாத்தையும் ஹீரோ கொளுத்திய பிறகே போலீஸ் வரும்.

*பொண்ண பெத்த வீட்ல ரசம் வைப்பாங்களோ இல்லையோ, ஆனா பொண்ண மிரட்டறதுக்கு கண்டிப்பா விஷம் வச்சிருப்பாங்க.

*ஹீரோயினும் ஹீரோயின் குடும்பமும் லூஸா இருக்கணும். அதை விட ஒரு லூஸ்தான் வில்லன் குரூப்ல பாஸா இருக்கணும்.

*ஹீரோ டபுள் ஆக்ட்ன்னா, அதுல ஒரு ஆக்ட்டு தைரியத்தில் ட்ரபுள் ஆக்டா இருக்கணும்.

*பண்ற வைத்தியத்தையும் மீறி படத்துக்கு இடையிலயே அம்மா சாகறதா இருந்தா, அப்ப ஹீரோகிட்ட சத்தியம் வாங்கணும்.

*ஹீரோயின் கண் விழிச்சு ‘நான் எங்க இருக்கேன்’னு கேட்கணும். ஹீரோ கட்டிப் புடிச்சு ‘நான் எப்பவும் இருப்பேன்’னு ஒரு சீன்லயாவது சொல்லணும்.

*‘ஹீரோவ நினைச்ச மனசுல வேற ஒருத்தர எப்படி நினைக்க முடியும்’னு சொல்லாத டாட்டரும் இல்ல, ‘எதையும் 24 மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும்’னு சொல்லாத டாக்டரும் இல்ல.

*ஹீரோவோட மாறுவேஷம்னா கண்டிப்பா கன்னத்துல மருவா இருக்கணும்; ஹீரோவோட அப்பா சாகப் போறாருன்னா, தன் அம்மா வயித்துல ஹீரோ கண்டிப்பா கருவா இருக்கணும்.

*ஹீரோயின்னா, ஹீரோவ ஆரம்பத்துல வெறுக்கணும்; ஹீரோன்னா, ஹீரோயின இன்டர்வெலுக்கு முன்னால திருத்தணும்.

*ஒரு வெட்டுக் குத்த வச்சுதான் ஃப்ளாஷ்பேக் காட்சிக்குப் போகணும்; ஒரு குத்துப்பாட்ட வச்சுதான் க்ளைமேக்ஸ் காட்சிக்குப் போகணும்.

இடைத்தேர்தல்களில் பணநாயகம், அதிகார பலம் எல்லாத்தையும் மீறி டெபாசிட் வாங்கிட்டா, அதுதான் உண்மையான வெற்றி என்பதெல்லாம் இருக்கட்டும்... ஆனா ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்த்தும் வெறும் 5,015 ஓட்டு மட்டுமே தமிழக பா.ஜ.க வாங்கியிருக்குன்னா, அந்த தெய்வத்துக்கே சோதனை வந்த மாதிரி; ரோந்து போற போலீசுக்கே ரோதனை வந்த மாதிரி. ‘அது அவர் கருத்து, இது இவர் கருத்து, இதுதான் என் கருத்து’ன்னு பொட்டுல அடிச்ச மாதிரி பட்டுன்னு சொல்லும் தமிழக பா.ஜ.க.காரங்க, இந்தத் தோல்விக்கு என்ன சொல்வாங்களோ?

டெல்லில ஆம் ஆத்மி ஜெயிச்சு அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரானப்ப, ‘‘அது பா.ஜ.க.வின் தோல்வியல்ல... கிரண் பேடியின் தோல்வி’ன்னு அற்புதமான கண்டுபிடிப்பைச் சொல்லி அசத்திய அவர்கள், ஸ்ரீரங்கத்தில் டெபாசிட் இழந்தது பற்றி அபால்கபால் அறிக்கை விட அட்டகாசமாய் ஐந்து ஐடியாக்கள்...

* ‘‘ஸ்ரீரங்கத்தில் நாங்கள் தோற்கவில்லை, ஆளுங்கட்சிதான் வெற்றி பெற்று இருக்கிறது’’ என ஆம்லெட்டைத் திருப்பிப் போட்டு சால்ட் பெப்பர் தூவலாம். மேலும் ‘‘ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் கூட முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு இருப்பதைப் போல, நாங்கள் இடைத்தேர்தலில் வெண்கலக் கிண்ணி ஜெயிச்சோம்’’ என இலையை விரிச்சு வடையை வைக்கலாம்.

* ‘‘ஸ்ரீரங்கத்தில் 5015 பேர் மட்டும்தான் எங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தார்கள், மீதிப் பேருக்கு மொபைலில் பேலன்ஸ் இல்லை, வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் ரீசார்ஜ் செய்து மிஸ்டு கால் கொடுத்து எங்கள் கட்சியில் இணைவார்கள், அதற்குப் பின்பு தொகுதியைக் கைப்பற்றுவோம்’’ என கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணலாம்.

*‘‘எங்கள் சின்னம் தாமரைப் பூ என்பதால், வாக்காளர்கள் பூவை அழுத்திக் கசக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எங்கள் சின்னத்தை அழுத்தி எங்களுக்கு வாக்களிக்கவில்லை’’ எனலாம்.

* ‘‘தேர்தல் அன்று பூ தட்டுப்பாடு ஏற்பட்டதால், எங்கள் சின்னமான தாமரையை, ஸ்ரீரங்கத்தைச் சுற்றியிருக்கும் கோயில்களுக்கு பூஜைக்குக் கொடுத்து விட்டோம். அதனால் பல வோட்டிங் மெஷின்களில் எங்கள் சின்னமே இல்லை. எனவே ஓட்டு குறைவாக விழுந்தது’’ என ரீலு ரீலா பீலா விடலாம்.

* இது எல்லாத்தையும் விட, ‘‘தமிழக பாஜக முழுக்க டெல்லி தேர்தலுக்குக் களமாடச் சென்று விட்டதால், இடைத்தேர்தலில் நடமாட முடியவில்லை’’ என சூடு கொட்டையைத் தேய்த்து நிருபர்கள் தலையில் வைக்கலாம்.

இதோட ஆறு முறை, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி யில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்து இருக்கிறது. ‘நடந்தது நடந்து போச்சு... நடக்காதது நடராஜா பஸ்ல போச்சு’ன்னு இதை பொசுக்குன்னு விட்டுட முடியாது, அடுத்த முறை மோதும்போது இந்திய அணியை வெல்ல பாகிஸ்தான் செய்ய வேண்டிய யுக்திகள் என்ன?

* அணிக்கு 11 பேருதானே... அப்ப பேட்டிங் புடிக்கிறப்ப 11 பேரும் பேட்ஸ்மேனாகவும், பவுலிங் போடுறப்ப 11 பேரும் பவுலராகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.

* வழக்கமா எல்லையில் ஊடுருவி அடி வாங்கிட்டுப் போறப்ப, ‘‘அது எங்க நாட்டு வீரர்களே இல்லை’’ன்னு சொல்ற மாதிரி, மேட்ச் தோற்ற பிறகு, ‘‘அது எங்க நாட்டு அணியே இல்லை’’ன்னு சொல்லிட்டு, ரீ மேட்ச் கேட்கலாம்.

3) நம்ம பசங்க பச்சை கலர் யூனிஃபார்ம பார்த்தாலே பிச்சு உதறுறாங்க. அதனால பச்சை கலருக்குப் பதிலா ஊதா கலரோ, வேற எதுனா சாதா கலரோ போட்டுக்கிட்டு ஆடலாம். இல்லை யூனிஃபார்ம் போடாமலே கூட ஆடலாம். அதாவது, கலர் கலர் டிரஸ்ல ஆடலாம்.

* ‘‘நாங்க 7 பேரு மட்டும் டீம்ல விளையாடுறோம். மீதி நாலு ஆளுக்கு பதிலா பாகிஸ்தானின் ஒரு ஆள அம்பயரா விடுங்க’’ன்னு ஐ.சி.சிக்கு வேண்டுதல் வைக்கலாம்.

* பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் பாலிவுட் நடிகைகள் கெட்டப்பில் வந்து இந்திய அணியினரின் கவனத்தைக் கலைக்கலாம்.

* இந்திய அணியுடன் மோத நேர்கையில் தங்கள் அணி பெயரை கஜகஸ்தான், துர்கிஸ்தான், மோடி மஸ்தான்னு மாத்திக்கிட்டு விளையாடலாம். யாராவது கேட்டால், ‘நியூமராலஜி பார்த்து மாத்திக்கிட்டோம்’னு சொல்லிடலாம்.

* கொஞ்சம் கூச்சநாச்சத்தை விட்டுட்டு, ‘ஒன் பிட்ச் கேட்ச் புடிச்சா அவுட்டு’ன்னு விதி கொண்டு வர சதி செய்யலாம்.

 ஆல்தோட்ட பூபதி