கவிதைக்காரர்கள் வீதி




அணைத்திருக்கும் மரணம்

தோள்மீது கை போட்டபடி
நிழற்படத்திலிருக்கும் நண்பன்
இறந்து போனதாய்
செய்தி வந்திருக்கிறது

நெருக்கமாய்
நின்றிருப்பவனின் கை
என் முதுகில் படர்ந்து
தோள்பட்டையில் பிரியமாய்
விரல் பதித்திருக்கிறது

சற்றே பலமாய் அவன்
அணைத்த நொடிப்பொழுதில்
படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்
அக்கணத்தில் நானும் அவனும்

ஓருயிராய் மாறிவிட வேண்டிய
பிரியமும் இருந்திருக்கலாம்
அணைப்பின் அழுத்தத்தில்
மூச்சு முட்டிய கணமும்

நெருக்கத்தின் பிரியமும்
என் விழிகளில் தேங்கியிருந்தது
இப்பொழுதும் தெரிகிறது
என்னைவிட உயரமும் பருமனுமான
அவனது ஆகிருதி அணைப்பில்

ஒடுங்கி நிற்கிறேன்
படத்தை மீண்டும் பார்க்கிறேன்
மரணத்தைப் போர்த்திக்கொண்ட

அவன் பிடிக்குள்
ஒரு பறவையாய் நான்
யாருடைய கண்ணீரிலோ
சிறகுகள் நனைந்திருக்கின்றன!

எச்சம்

நெடுந்தொலைவு பயணித்த
பறவையொன்று
வறண்டுபோன நதி மடியில்

குட்டையாய்த் தேங்கிக் கிடக்கும்
நிறங்களடர்ந்த சாயக்கழிவில்
தாகம் தணித்திட அமர்கிறது.

கசப்பேறிய நீரினைப் பருகி
வானமேகும் பறவையின்
நனைந்த இறகுகளிலிருந்து
கடக்கும் வெளியெங்கும்
நிரம்பிக் கொண்டேயிருக்கிறது

துரோகத்தின் வாசம்.
அந்தப் பறவை
பறந்தாகவேண்டும்
துரோகம் கரைந்தொழியும்
வரையேனும்.
மலையுச்சியில்

பாறையிடுக்கில்
கசியும் சுனை நீரில்
கால் நனைக்கையில்
இறக்கை நுனியில்
துரோகத்தின்
எச்சம் இருத்தலாகுமோ!

ஈரோடு கதிர்