அவன் அவள் unlimited



ஆணும் ஆணும் காதலித்தால்...?

ஓரினச்சேர்க்கை பாவம் என்று கடவுள் சொல்லியிருந்தால், அவர் ஓரினச்சேர்க்கையாளர்களைப் படைக்காமலே இருந்திருக்கலாமே!
- ஹோவர்டு டீன்

‘வணக்கம் அம்மா, தாங்கள் அனுப்பிய கடிதம் மூலம் தங்கள் மகன் ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என்பதை அறிந்தேன். ஆனால், அதை ஏன் நீங்கள் மாற்ற நினைக்கிறீர்கள்? நிச்சயம் ஓரினச்சேர்க்கை என்பது ஒருவருக்கு எவ்விதத்திலும் அட்வான்டேஜ் அல்ல; அதே சமயம் அது இழிவும் அல்ல.

அதை ஒரு நோயாகக் கருத முடியாது. பாலியல் செயல்பாட்டில் அது ஒரு வகை, அவ்வளவுதான். பிளேட்டோ, மைக்கேல் ஏஞ்சலோ, லியனார்டோ டாவின்ஸி எனப் பெருமைக்குரிய மனிதர்கள் பலர் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருந்திருக்கிறார்கள். உங்கள் மகனுக்கு நான் செய்யக்கூடியதெல்லாம்... ஒருவேளை அவன் மன அழுத்தத்திலோ குற்றவுணர்ச்சியிலோ இருந்தால் அதை மாற்றுவதுதான்!
இப்படிக்கு, -ஃப்ராய்டு’

ஆமாம், உளப்பகுப்பாய்வின் தந்தையான டாக்டர் சிக்மண்ட் ஃப்ராய்டு தன் கைப்பட எழுதிய கடிதம்தான் இது. 1935ல் எழுதப்பட்ட இந்தக் கடிதமும் இது சொல்லும் கருத்தும் இன்றுவரை நம் மக்களிடையே ரீச் ஆகவில்லை என்பது தான் அவலம்!ஓரினச் சேர்க்கையாளர்களை உயர்த்திப் பிடிப்பதோ, ‘எல்லோரும் அப்படி ஆகுங்கள்’ என ஊக்குவிப்பதோ நம் நோக்கமல்ல.

சொல்லப் போனால், இதை இங்கே விவாதிக்கக் கூட நாம் நினைத்திருக்கவில்லை. ஆனால், இதற்கு முன் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல் சுவாரஸ்யங்களை - உளவியல் உலகப் போர்களை நாம் அலசியபோது ‘ஓரினச்சேர்க்கை’ என்ற வார்த்தையைத் தவிர்க்கவே முடியவில்லை.

மனிதக் காதல் - மிருகக் காதல் ஒப்புமை பற்றிப் பேசியபோது, மனநல மருத்துவர் கவிதா, ‘‘விலங்குகளிடையே ஓரினச்சேர்க்கை ரொம்ப சகஜம்’’ என விளக்கினார். ஓரினச்சேர்க்கை என்பதை என்னவோ நவீன கால கடுக்கன் மனிதர்கள்தான் செயற்கையாக உருவாக்கிவிட்டார்கள் என்ற எண்ணத்தை இது அழித்தது.கெட்ட வார்த்தைகள் பற்றி அலசும்போதும் இதே ஓரினச்சேர்க்கை வந்தது.

‘பணத்துக்கோ அதிகாரத்துக்கோ பணிந்து ஒருவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிற இயலாமை’ காலம் காலமாக நமது வசவு வார்த்தைகளில் குறிப்பிடப்படுவதுண்டு. தெரிந்தோ தெரியாமலோ இது நம் ஊரில் ஓரினச்சேர்க்கையின் தொன்மைக்குச் சான்று.

காதல் பற்றி இதுவரை நம்மிடம் பேசிய நிபுணர்களில் பெரும்பாலானவர்கள் எழுப்பிய லாஜிக் கேள்வி... ‘‘மனசுதான் காதல் என்றால், இரு ஆண்களுக்கிடையேயான காதலை ஏன் உங்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை?’’கோவையைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் டாக்டர் வேதகிரி கணேசனின் கருத்து மட்டும் இதிலிருந்து மாறுபட்டிருந்தது. ‘‘ஓரினத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்துவிட்டால், அது நீண்ட கால அடிப்படையில் பல குளறுபடிகளை ஏற்படுத்தும்’’ எனக் கவலைப்பட்டார் அவர்.

வழக்கமாக இப்படிச் சொல்லும் மதவாதிகள், கலாசாரக் காவலர்கள் லிஸ்ட்டில் வேதகிரி கணேசனைச் சேர்க்க முடியாது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைத் தலைவராக இருந்தவர் அவர். முழுக்க முழுக்க அறிவியல் ரீதியில் இருந்தது அவரின் வாதம்.‘‘மனித வரலாற்றில் இனப்பெருக்கத்துக்கு எதிராக எடுக்கப்படும் எந்த முடிவும் வருத்தப்படத்தான் வைத்திருக்கிறது. ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரித்ததற்காக ஐரோப்பிய நாடுகளே இப்போது வருந்திக் கொண்டிருக்கின்றன.

20 வருடங்களுக்கு முன்பு நான் ஜெர்மனி போயிருந்தபோது அரசு சார்பில் ‘ஜெர்மன் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்’ என்ற விளம்பர போர்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. காரணம், யாருக்குமே அங்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை. குழந்தை என்பது கமிட்மென்ட், பொறுப்பு. வேறு வகையில் பார்த்தால், தொல்லை.

அது இல்லாமல் இஷ்டம் போல ஒரு வாழ்க்கை கிடைக்கிறதென்றால் பலரும் அதைத் தேர்ந்தெடுப்பார்கள்... ஒரு பழக்கம் போல ஓரினச்சேர்க்கைக்கு அடிமையாவார்கள். பெண்ணை விட அதிக அன்பை ஒரு ஓரினச்சேர்க்கையாளர் செலுத்தும்போது நார்மல் ஆண்கள் கூட அந்த அன்புக்கு அடிமையாகலாம்!’’ என்கிற அவர், இதற்குத் தீர்வையும் சொல்கிறார்.

‘‘எந்தச் சமூகத்திலும் ஓரினச்சேர்க்கை ஒரு பக்கம் இருக்கத்தான் செய்யும். அதைத் தடுக்க முடியாது. அவர்களைத் தண்டிப்பதும் தவறு. அதற்காக எல்லோருக்கும் அதைத் திறந்துவிடவும் கூடாது. ஐரோப்பிய நாடுகளில் இது ஒரு மனநோயே அல்ல... இதற்கு சிகிச்சை கொடுப்பது சட்ட விரோதம் என்று ஆக்கிவிட்டார்கள். தாங்கள் பிறவி gay அல்லது பிறவி lesbian என உணர்பவர்களை விட்டுவிடலாம்.

மற்றபடி, பழக்கத்தால் இதற்கு ஆளாகி, இதிலிருந்து விடுபட மனதார விரும்புகிறவர்களுக்கு சிகிச்சை அளித்து மாற்ற முடியும். பிஹேவியரல் தெரபியில் இதற்கு வழி உண்டு. அதற்காக விருப்பமில்லாத ஓரினச் சேர்க்கையாளரை அடித்துத் துன்புறுத்தி குடும்பத்தினர் அழைத்து வரக் கூடாது. இதைப் புரியும்படி நீங்கள்தான் எடுத்துச்சொல்ல வேண்டும்!’’ என முடித்தார் அவர்.

அவர் சொன்னது போல, ஓரினச்சேர்க்கை பழக்கத்தால் வருமா? ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்காக குரல் கொடுத்து வரும் மி.சி.கீளி அமைப்பின் செயலாளர் ஏ.ஜெ.ஹரிஹரனிடம் கேட்டோம்...‘‘ஒரு ஆணை கட்டாயப்படுத்தி இன்னொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்ளச் சொன்னால், எவ்வளவு பாவம்!

அதே மாதிரிதான் ஓரினச் சேர்க்கையாளராகப் பிறந்த ஒரு ஆணை பெண்ணிடம் வாழச் சொல்வதும். அவர்கள் வேறு மாதிரியான பாலியல் விருப்பத்தோடு பிறந்திருக்கிறார்கள். அவர்களைத்தவிர ‘பைசெக்ஸுவல்’... அதாவது, இருபால் விருப்பமுள்ளவர் என ஒரு வர்க்கம் உண்டு. இவர்களுக்கு செக்ஸ்தான் முக்கியம். அது யாரிடம் என்பது முக்கியமல்ல.

நம்மூரில் பெரும்பாலும் ஆண்களுக்கு 30 வயதில்தான் திருமணம். அதுவரை தனியாக வேலை பார்த்து வாழவேண்டிய சூழ்நிலை. பாலியல் தேவை அவர்களைத் துரத்தும். பாலியல் தொழில் செய்யும் பெண்களை நாடும் அளவுக்கு பணம் இருக்காது. அப்போது நண்பர்கள் மூலமாக ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றி அவருக்குத் தெரியவரும்.

அவருக்குப் பெண்தான் விருப்பம் என்றாலும், சுலபமாக, மலிவாகக் கிடைப்பதால் ஓரினச்சேர்க்கையை நாடுவார். காலப் போக்கில் இலவசமாகவே அன்பான செக்ஸ் உறவை அவருக்குத் தர ஓரினச்சேர்க்கையாளர்கள் முன்வரலாம். இவர்கள்தான் இருபால் விருப்பம் உள்ளவர்கள். இது பெரும்பாலும் பழகிக்கொள்வதுதான்!’’ என்றார் அவர்.

அனேகமாக இப்படிப்பட்டவர்களைத்தான் மாற்ற முடியும் என வேதகிரி கணேசன் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு வெளிப்படையான அங்கீகாரம் தருவது தவறு என அவர் சொல்வது சரியா? ‘‘ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் ஊரறிய திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தால்...

 வாழ விட்டால்... யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அந்த அங்கீகாரம் கிடைக்காததால் வேறு வழியின்றி நார்மல் சமூகத்தை ஓரினச்சேர்க்கை பாதித்துக்கொண்டிருக்கிறது. ஆக, உங்கள் நல்லதுக்காகத்தான் நாங்கள் உரிமை கேட்கிறோம்!’’ என்கிறார்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள்.

அது எப்படி?

ஓரினச்சேர்க்கையாளர்களே அதைப் பேசத் தயார்...
சில உண்மைகள்!

*உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்கிறது கணக்கெடுப்பு ஒன்று.
*அமெரிக்க இந்தியப் பழங்குடிகளில் ஓரினச்சேர்க்கை விருப்பம் கொண்டவர்கள் ‘கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக’ மதிக்கப்படுகிறார்கள்.
*1952 முதல் 1990 வரை அமெரிக்காவுக்குள் ஓரினச் சேர்க்கையாளர்கள் வரத் தடை இருந்தது.
*ஓரினச்சேர்க்கையாளர்களில் ஆண், பெண், இருபால் விருப்பமுள்ளவர்கள் மற்றும் திருநங்கைகள் என அனைவரையும் குறிக்கும்படி லிநிஙிஜி எனும்
எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

‘‘மனசுதான் காதல் என்றால், இரு ஆண்களுக்கிடையேயான காதலை ஏன் உங்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை?’’

- தேடுவோம்...

கோகுலவாச நவநீதன்