அந்த வீடியோவில் ஹன்சிகாவா?



உஷார் ரிப்போர்ட்

த்ரிஷா ஷவரில் குளிப்ப தாக ஒளிப்பதிவில் தரமற்ற வீடியோ ஒன்று வந்து தமிழ் சினிமாவை குலுக்கியது தான் முதல் அப்டேட். பக்குவம் நிரம்பி வழிந்த த்ரிஷா, அதை எக்கச்சக்கமாக வெளியே வளரவிடாமல் சமாளித்தார். இன்றுவரை அது அவரா வேறு ஒருவரா என தாயம் போட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

டெக்னாலஜி வளர்ந்து, எல்லோர் கையிலும் இருக்கும் செல்போனே ஒரு குட்டி தியேட்டராக ஆகி விட்ட இன்றைய தினத்தில், வாரம் ஒரு வீடியோ அல்லது தெள்ளத் தெளிவான குவாலிட்டி யில் அந்தரங்க படங்கள் லீக் ஆகி பீக் நியூஸ் ஆவதுதான் ஹாட்!இரு வாரங்களுக்கு முன்பு இந்த மாதிரி வீடியோ உலகில் பரபரப்பு ஊட்டியவர்கள், வசுந்தரா, ராதிகா ஆப்தே ‘போன்ற’ முகச்சாயல் கொண்ட நடிகைகள். காட்டுத் தீயாக செய்தியும் படங்களும் செல்போன் விட்டு செல்போன் பரவின. பதற்றமாகவும் திகைப்பாகவும் அவர்கள் இதை மறுத்தார்கள். 

இரண்டு தினங்களுக்கு முன்பு கொடிகட்டிப் பறந்தது ‘ஹன்சிகா’(!)வின் வீடியோ. அச்சு அசலாக அவரைப் போலவே இருக்கும் பெண், சுதந்திரமாக, பயமின்றி, சாவதானமாக குளித்துக்கொண்டிருக்கிறார். செய்தி பரவி அடுத்த இரண்டு மணி நேரத்தில் எதிர்பார்த்த அதே வார்த்தைகளை இன்ச் பை இன்ச் கொண்ட பதில் வந்தது. ‘சத்தியமாக நான் அவள் இல்லை... இது மார்ஃபிங் செய்யப்பட்ட மோசடி’ என அழுது தவித்து சொன்னார்கள்.

இப்போதைக்கு லட்சுமி மேனன் போல தோற்றத்தில் இருக்கும் ஒருவரின் இன்டிமேட் படங்களும் கதறக் கதற வலம் வந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் இளம் ஹீரோ ஒருவருடன், இவர் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஒரு நடிகை மிக அந்தரங்கமான நெருக்கத்தில் இருக்கும் வீடியோ க்ளிப் ஒன்றும் ரகசியமாக வாட்ஸ் அப் விட்டு வாட்ஸ் அப் தாவிக் கொண்டிருக்கிறது. வங்க தேசத்தைச் சேர்ந்த மாடல் ஒருவரின் படங்கள் இவை என சொல்லப்படுகிறது.

இந்த வீடியோக்கள், செல்ஃபிக்களை யார், எதற்காகப் பரப்புகிறார்கள்? இதன் பின்னணி என்ன? என ஆராய்ந்தால் பகீர் என்கிறது. நமீதா உள்பட பல நடிகர், நடிகைகளின் மேனேஜராக இருந்து வரும் ஜான், ‘‘டெக்னாலஜி வளர வளர நாம்தான் ரொம்ப கவனமா இருக்கணும்!’’ என ஆரம்பிக்கிறார்.

‘‘வெளியிடங்களுக்கு ஷூட்டிங்கோ, ஃபங்ஷனோ ஆர்ட்டிஸ்ட்டுகளை அழைச்சிட்டுப் போகும்போது, ரெண்டு நாட்களுக்கு முன்பே தங்குவதற்கான ரூம் புக் பண்ணிடுவாங்க. நடிகைகள்னாலே அவங்களைப் பார்க்கணும்... கூட நின்னு போட்டோ எடுத்துக்கணும்னு ஆர்வம் எல்லாருக்குமே இருக்கும். சரியான ஆட்களாக இருந்தால் ஹோட்டலுக்கு வெளியே புகைப்படம் எடுத்துக்கறதோட முடிஞ்சிடும். தவறான ஆட்களாலதான் பிரச்னைகள் ஆரம்ப மாகுது.

வெளியூருக்கோ, வெளியிடங்களுக்கோ நமீதாவை அழைச்சிட்டுப் போகும்போது, அவங்க தங்கும் அறையை இன்ச் பை இன்ச்சா சோதனை போடுவது என் வழக்கம். ரூம்ல கேமரா ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்களானு கண்டுபிடிக்கறது ஈஸி.

அறையில் உள்ள லைட்ஸ் அத்தனையையும் அணைச்சிட்டு, மொபைல் போன்ல உள்ள கேமராவால அறையை முழுக்க படமெடுத்தா, அந்த மாதிரி கேமரா எல்லாம் இருட்டில் சிகப்பு புள்ளியா மிளிரும்படி இருக்கும். அந்தப் புள்ளிகள் சாதாரண கண்ணுக்கு தப்பிச்சிட்டாலும் கேமராவுல பளிச்னு தெரிஞ்சிடும்.

மற்றபடி, நடிகைகளை மாதிரி முகச்சாயல், உடல் சாயல்கள் கொண்ட டூப்ளிகேட் ஆட்களை வச்சி ஆபாசப் படங்கள் எடுத்து, வெளியிடுறது இன்டர்நெட் கிரிமினல்களோட வேலை. நம்ம சைபர் க்ரைம் பிரிவு வலிமையானது. இந்த மாதிரி வீடியோக்கள் எங்கே இருந்து ஆரம்பிக்குதுன்னு ஈஸியா கண்டுபிடிச்சிடுவாங்க. ஆனா, இதுவரை அப்படி யாரும் தண்டிக்கப்படாததால், இன்டர்நெட் கிரிமினல்கள் எண்ணிக்கை பெருகிடுச்சு.

மேனேஜரா என்னோட ஆர்ட்டிஸ்ட்களுக்கு நான் சொல்ற அட்வைஸ் இதுதான்... ‘உங்களை யாரும் செல்போன்ல படமெடுக்க அனுமதிக்காதீங்க. அது மேக்கப் மேனா இருந்தாலும் சரி... அல்லது உறவினர்களாக இருந்தாலும் சரி... செல்போன்ல படமெடுக்க விடாதீங்க. ஆடை கொஞ்சம் விலகினாலும் அதைப் பெருசா எடுத்துக்காம இருந்துடாதீங்க. கவனமா அதை சரி செய்த பிறகே போஸ் கொடுங்க!’’ என்கிறார் ஜான்.

தயாரிப்பு நிர்வாகியும் நடிகருமான கிருஷ்ணமூர்த்தியும் நேரே ஹோட்டல் அறை விஷயத்துக்குத்தான் வருகிறார்...‘‘ஒரு படத்தின் பூஜை முடிந்து, ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன், நடிகர், நடிகைகளுக்கு அறைகள் புக்கிங் செய்து கொடுப்பது புரொடக்ஷன் மேனேஜர்களின் வேலைதான். ஆர்ட்டிஸ்ட்களின் மார்க்கெட்டிற்கு ஏற்ப 7 ஸ்டார் ஹோட்டல்களிலிருந்து, லோக்கல் ஹோட்டல் வரை அறைகள் எடுத்துக் கொடுப்பார்கள்.

 எந்த ஹோட்டலாக இருந்தாலும் ரூமிலிருந்து அவர்கள் வெளியே செல்லும்போது, சாவியை ரூம் கிளீனிங் ஆட்களிடம் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். அவர்களில் சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படி வேலைகளில் இறங்கலாம். இப்போதெல்லாம் கண்ணுக்கே தெரியாத குட்டி கேமராக்கள் வந்திருப்பதுதான் பிரச்னை.

 ஒரு நடிகையின் குளியல் வீடியோ வெளிவருகிறது என்றால், சம்பந்தப்பட்டவருக்கு அது எந்த ஹோட்டல் என நிச்சயம் தெரியும். உடனே போலீஸில் புகார் செய்தால் ஹோட்டல் லைசென்ஸையே ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், புகார் கொடுக்கும் தைரியம் யாருக்கும் வருவதில்லை.

ஆர்ட்டிஸ்ட்களைப் பொறுத்தவரை, ஷூட்டிங் முடிந்து அறைக்கு வந்ததும், டயர்டாகத்தான் இருப்பார்கள். ஆனாலும் உடனே குளிக்கப் போகக் கூடாது. அறையை நன்றாகப் பரிசோதியுங்கள். கேமரா இருப்பதாகக் கண்டுபிடித்தால் புகார் செய்யுங்கள். நீங்கள் இருக்கும்போதே, அறையை சுத்தம் பண்ணச் சொல்லுங்கள்.

 முடிந்ததும் சாவியைக் கையில் எடுத்துச் சென்றுவிடுங்கள். ஹோட்டல்காரர்களிடம் வேறு கீ இருந்தாலும், ‘நான் இல்லாதபோது அறையைத் திறக்க வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்! குடும்பத்தோடு வெளியூர் செல்லும் எல்லோருக்குமான அட்வைஸ் இது’’ என்கிறார் கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை உணர்வுடன்.

‘‘நடிகைகளின் அரை மற்றும் முழு நிர்வாண போஸ்கள், படுக்கையறை படங்கள் என வருவதில் பெரும்பாலானவற்றில் துளிக் கூட உண்மை இருக்காது. மார்ஃபிங் செய்யப்பட்ட படங்களாகத்தான் இருக்கும். அதிகமாக ஷேர் செய்யப்படும் வீடியோக்கள், படங்களுக்கு இப்போது மறைமுகமான வருமானம் எல்லாம் கிடைக்கிறது. அதற்காகவே இதுபோன்ற செயல்களில் சிலர் ஈடுபடத் துணியலாம். அதே சமயம், மார்க்கெட் போன நடிகைகள் எப்படியும் சினிமா வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காகவே இப்படி ‘துணி’ந்து போஸ் கொடுப்பதும் உண்டு.

இதற்கு உதாரண நடிகைகள் நிறைய பேரை சொல்ல முடியும். நெகட்டிவ் பப்ளிசிட்டியை சிலர் விரும்புவதே இதற்குக் காரணம். நாங்கள் நடிக்கும் காலத்தில் எல்லாம் இப்படி போஸ்கள் வந்ததில்லை. டெக்னாலஜி வளர வளர இதுபோன்ற கவலைக்குரிய குற்றங்களும் வளரும். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்!’’ என்கிறார் மூத்த நடிகை ஒருவர்.இந்த வீடியோக்கள், செல்ஃபிக்களை யார், எதற்காகப் பரப்புகிறார்கள்? இதன் பின்னணி என்ன? என ஆராய்ந்தால் பகீர் என்கிறது.

- மை.பாரதிராஜா