போனால் வர முடியாது!



செவ்வாய் கிரகம் செல்லும் கோவை மாணவி

மாஸ் ஹீரோக்களை விட அதிகம் பாப்புலர் ஆகிவிட்டார் மாணவி சாரதா பிரசாத். காரணம், மார்ஸ் பயணம். ‘போகலாம்... ஆனால் திரும்பி வர முடியாது’ எனும் அளவுக்கு படு பயங்கரமானதுதான் செவ்வாய் கிரகப் பயணம்.

ஆனாலும் இதற்கு விருப்பத்தோடு விண்ணப்பித்து, பல கட்டத் தேர்வுகளைக் கடந்து ஜெயித்திருக்கிறார் இந்தக் கேரள கேர்ள்.‘‘இந்த த்ரில் எனக்குப் பிடிச்சிருக்கு. இது ஒருவழிப் பயணம்தான். செவ்வாய் கிரகத்தில் இறங்கலாம். அதுக்கப்புறம் உயிர் பிழைக்கிறது நம்ம சாமர்த்தியம்.

ஆனா, திரும்பி வர முடியாது. அப்பா, அம்மா, ஃப்ரெண்ட்ஸை எல்லாம் நிரந்தரமா பிரியப் போறேன்னு வருத்தமில்ல. பெரிய பெரிய விஞ்ஞானிகளுக்கே கிடைக்காத வாய்ப்பு இதுன்னு பெருமையாத்தான் இருக்கு!’’ ஆர்வமாகப் பேசுகிற சாரதாவுக்கு ஜஸ்ட் 19 வயதுதான். கேரளா பூர்வீகம் என்றாலும் வசிப்பதும் படிப்பதும் கோவையில்.

இந்த ரிஸ்க் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருப்பது நெதர்லாந்தைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனமான ‘மார்ஸ் ஒன்’. உலகம் முழுவது மிருந்து இதற்காக விண்ணப்பித்திருந்த 2,02,586 பேரில் கடைசி கட்டமாய் 100 பேரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்தப் பட்டியலில் மூன்று பேர்தான் இந்தியர்கள். அதிலும் இந்தியாவில் வசிக்கும் இந்தியர் என்றால், அது ஒன் அண்ட் ஒன்லி சாரதாதான்.‘‘இந்தியர்கள் மூணு பேர்ல ரொம்ப சின்னப் பொண்ணும் நான்தான். உலகத்தை விட்டே போற பயணம்தான். ஆனாலும் இதுக்குப் போட்டி அதிகம்.

2013 ஜூலைல அப்ளை பண்ணினேன். மொத்தம் 3 கட்ட செலக்ஷன் இருந்துச்சு. இன்னும் கூட ஒரு கட்டம் இருக்கு. இந்த 100 பேரிலிருந்து அதுல கடைசியா 24 பேரைத்தான் தேர்ந்தெடுப்பாங்க. 2024ம் வருஷத்தில் இருந்து ரெண்டு வருஷத்துக்கு நாலு நாலு பேரா அனுப்பப் போறாங்க. அந்த 24 பேர்ல செலக்ட் ஆகிடணும். அதுக்காகத்தான் பிரிபேர் பண்ணிட்டிருக்கேன்!’’ சாரதா பேச்சில் சின்ஸியாரிட்டி என்றால், அவர் அம்மா கீதாவிடம் லேசாக சென்டிமென்ட்.

‘‘எங்களுக்கு ஒரே குழந்தை சாரதா தான். அவளையும் பிரிஞ்சு எப்படி வாழப் போறோம்னு தெரியல. ஆனால், இது இவளோட ஆர்வம். இவ சந்தோஷம். அதனால குறுக்கே நிக்கல. இவ மட்டும் செவ்வாய் கிரகத்துக்குப் போயிட்டான்னா, அது இந்தியாவுக்கே பெருமை. ஒரு இந்தியப் பெண்ணோட சாதனை அது. அவ வாங்குற அந்தப் பேரும் புகழும் காலம் முழுக்க எங்களோட வாழும்னு நம்புறோம்!’’ என்கிறார் கீதா கொஞ்சம் கலங்கியபடி!

சதீஷ்
படங்கள்: கார்த்தி