கிச்சன் to கிளினிக் 5



உணவு விழிப்புணர்வுத் தொடர்

‘பசியையும், ருசியையும் அறிந்து சாப்பிட்டால் நம் உடலில் சத்துக்களின் குறைபாடு ஒருபோதும் வராது’ என்று பார்த்தோம். பசித்துச் சாப்பிடும் விலங்குகளுக்கு கால்சியம் தேவையை அதன் உடலே எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதை நிரூபித்த கேர்வரானின் ஆய்வும் நம் உடலின் சத்து உற்பத்தியை உறுதி செய்கிறது.

‘விலங்குகள் எல்லாம் உண்மையில் பசித்துத்தான் சாப்பிடுகிறதா என்ன? அல்லது நமக்கு வரும் நோய்களுக்கான காரணம் என்று எதையாவது அடித்து விடுகிறீர்களா?’ - உங்களுக்கு இப்படி கேட்கத் தோன்றலாம்.

வீட்டில் நாய், பூனை என்று ஏதாவது செல்லப் பிராணி வளர்ப்பவருக்கு இந்தச் சந்தேகமே வராது. நாம் சாப்பிடுகிறபோதெல்லாம் நாய்க்குக் கொஞ்சம் உணவை வைத்தாலும், அது நாம் சாப்பிடுவதைப் பார்த்து விட்டு தானும் சாப்பிடுவதில்லை. தன் தேவையின்போது மட்டுமே அது சாப்பிடுவதைக் கவனிக்க முடியும். பசி இல்லாத நேரத்தில் எவ்வளவு ருசியான உணவையும் அவை தொடுவதில்லை.

விலங்குகள் பசியைப் பின்பற்றுகின்றன என்று உறுதி செய்து கொள்வதற்கு இன்னும் ஒரு வழி இருக்கிறது. நாயோ, பூனையோ - அதன் உடல்நலம் கெட்டிருக்கும்போது என்ன செய்யும் தெரியுமா? சோர்ந்து படுத்திருப்பதும், வாந்தி எடுப்பதும் அவற்றின் உடல்நிலை கெட்டிருக்கிறது என்பதை நமக்குக் காட்டும்.

அந்த நேரத்தில் நாய் எதையும் சாப்பிடாது. கவனித்திருக்கிறீர்களா? வழக்கமாக பசித்தும், ருசித்தும் சாப்பிடும் நாய், உடல்நலமில்லாமல் இருக்கும்போது அதிக நேரம் படுத்தே கிடக்கும். நாய் ருசித்துச் சாப்பிடுமா என்ன? ‘நாய் மாதிரி நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலையாதே’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் திட்டும்போதே நமக்குப் புரிந்திருக்கும், நாய் தன் ருசியில் எவ்வளவு கவனமாக இருக்கிறது என்பது!

இப்படி பசிக்கும் ருசிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாய், அதன் உடல்நிலை சரியில்லாதபோது என்ன கொடுத்தாலும் சாப்பிடாது. ஏனென்றால் உடல்நிலை நன்றாக இல்லாதபோது, உடலில் பசி ஏற்படாது. உடல் உறுப்புகளுக்கு செரிக்கும் வேலையைச் செய்யும் ஆற்றல் குறைந்து போயிருக்கும். உங்களுக்குக் காய்ச்சல் வந்தாலோ, வேறு தொந்தரவுகள் ஏற்பட்டாலோ வயிற்றைக் கவனித்துப் பாருங்கள்... பசி இல்லாமல் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

காய்ச்சல் ஏற்பட்டிருக்கும்போது நாக்கில் ருசியும் இருக்காது; வயிற்றில் பசியும் இருக்காது. எதையாவது சாப்பிடுவோம் என்று சாப்பிட்டவுடன், சுவையற்று இருக்கும் நாக்கு கசப்பைக் காட்ட ஆரம்பிக்கும். சுவையில்லை என்றவுடன் நாம் சாப்பிட்டிருக்கக் கூடாது. ஆனாலும் பழக்கத்தில் சாப்பிடுகிறோம்.

நாக்கில் கசப்பைத் தடவி விட்டால் சாப்பிட முடியுமா? அதனால்தான் உடல் நம் நாக்கில் கசப்புச் சுவையை ஏற்படுத்துகிறது. ‘‘நான் வேறு வேலையாக இருக்கிறேன். இப்போதைக்கு சாப்பிட்டுத் தொலைக்காதே’’ என்பதே அது சொல்ல வரும் விஷயம்!

உடல்நிலை சரியில்லாதபோது நம் முன்னோர்கள் ‘லங்கணம் பரம ஔஷதம்’ (பட்டினியே அனைத்திற்குமான மருந்து) என்று சும்மா இருப்பார்கள். நமக்கு உடம்பு சரியில்லை என்றால் வழக்கத்தை விட அதிகமாகச் சாப்பிடுகிறோம். ஆனால், உடம்பு சரியில்லாத நாய், தனக்கு மிகவும் பிடித்த லெக் பீஸைக் கூட அந்த நேரத்தில் திரும்பிப் பார்க்காது.

நாம் என்ன செய்வோம்? காய்ச்சல் வந்து, நாக்கெல்லாம் கசந்தால் கூட ஒரு பீஸ் சிக்கனைப் பார்த்து விட்டால் - சாப்பிட்டு விட்டுத்தான் மறுவேலை.உலகத்தில் எல்லாப் பிராணிகளும் பசியையும், ருசியையும் அறிந்துதான் சாப்பிடுகின்றன. மனிதன் மட்டும்தான் தன் பகுத்தறிவின் வழியாக எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.

இப்படி பசித்துச் சாப்பிடும் விலங்குகளுக்கு சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கின்றன என்பது மட்டுமில்லாமல், ரத்தத்தில் கொழுப்பு அடைப்பது, ஹார்ட் அட்டாக் வருவது என்பதெல்லாம் இல்லை.

உதாரணத்திற்கு, ஆட்டை எடுத்துக் கொள்ளலாம். ‘‘நான் உயிருள்ள ஆட்டைப் பார்த்ததே கிடையாது. ஆடுகளை எப்போதும் பிரியாணியோடு சேர்த்து தட்டில்தான் பார்த்துப் பழக்கம்’’ என்று சொல்லும் நகரவாசியா நீங்கள்? பரவாயில்லை. நாம் பேசும் விஷயத்தைப் புரிந்து கொள்ள ஆடுகளைப் பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

கறிக்கடையில் ஆடுகளை அறுக்கும்போது, அதில் கறியும், அதே அளவிற்கு கொழுப்பும் இருக்கும். இவ்வளவு கொழுப்பு ஆட்டிற்கு எப்படிக் கிடைத்தது? கொழுப்பு நமக்கு வர வேண்டும் என்றால் நம் நவீன டயட் படி - ஃபிரை செய்த பொருட்களைச் சாப்பிட வேண்டும். அதிகமாக அசைவம் சாப்பிட வேண்டும். அல்லது ஆயிலையே சாப்பிட வேண்டும்.

ஆடு சைவமா? அசைவமா? ஒரு குழப்பமும் வேண்டியதில்லை... ஆடு சுத்த சைவம்தான். கொஞ்சம் பொறுங்கள்... ஆடு சுத்த சைவம்தான்; ஆட்டை நாம் சாப்பிட்டால்தான் அசைவம். எனவே ஆடு ஒருபோதும் அசைவம் சாப்பிட்டிருக்காது. ஆடு எப்போதும் ஃபிரை செய்தோ, ஆயில் சாப்பிட்டிருக்கவோ வாய்ப்பில்லை. அப்புறம் எப்படி அதன் உடலில் இவ்வளவு கொலஸ்ட்ரால்... அதாங்க, கொழுப்பு வந்திருக்கும்?

ஆட்டினுடைய உடலிற்கு கொழுப்பு அவசியம். எனவே அதன் உடல் தன் தேவைக்குக் கொழுப்பை உருவாக்கிக் கொள்கிறது. ஆட்டு உடலில் இவ்வளவு கொழுப்பு இருந்தாலும், அதற்கு ஹார்ட் அட்டாக்கோ, ரத்தக் குழாய் அடைப்போ ஏற்படுவதில்லை. ஏனென்றால், ஆடு மற்ற பிராணிகளைப் போலவே தன் தேவைக்குச் சாப்பிடுகிறது. அது சாப்பிடும் உணவிலிருந்து உடலிற்குத் தேவையற்ற கழிவுகள் நீக்கப்பட்டு, தேவையானவை உற்பத்தி ஆகி விடும்.

நாம் பசித்தும் ருசித்தும் சாப்பிடுவதில்லை. ஏதாவது ஒரு பொருளைப் பார்த்தால் உடனே அதனைச் சாப்பிட்டு விடுகிறோம். இதைச் சாப்பிட வேண்டும் என்று நாம் தீர்மானிப்பதற்குப் பதிலாக, நம்மைச் சாப்பிடத் தூண்டுவதாக பொருள் மாறிவிட்டது.

அதேபோல ஒரு பொருள் உடலிற்கு நல்லது என்று யாராவது சொல்லிவிட்டால் போதும்... எப்போதும் அந்த ஒரே பொருளையே சாப்பிட்டுக் கொண்டிருப்பதும் நம் வழக்கம். பசியில்லாமல், உடலுக்கும் தேவையில்லாமல், அளவை மீறி சாப்பிடும்போது எந்த உணவு நமக்கு சத்தைத் தர வேண்டுமோ, அதே உணவு கழிவுகளை உற்பத்தி செய்கிறது.

உணவிலிருந்து நாம் எதைப் பெறப் போகிறோம் என்பதை நம்முடைய பழக்கவழக்கங்களே தீர்மானிக்கிறது. ஆடு சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் வராது என்று வரிந்து கட்டிக் கொண்டு உடனே கிளம்பி விடாதீர்கள்... உணவைப் பற்றி இன்னும் கொஞ்சம் முழுமையாக அறிந்து கொண்டு, அப்புறம் நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் பயமின்றிச் சாப்பிடலாம்.சாதாரண உணவுகளையோ, நம் உடலுக்கு நல்லது என்று சொல்லப்படும் வீட்டு மருந்துகளையோ அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்?

தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் ‘உணவே மருந்து’ எனச் சொல்லும் அறிவுரைகள் அதிகமாகி வருகின்றன. இந்த மருந்துணவுகளைச் சாப்பிடும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்? நாம் பசித்தும் ருசித்தும் சாப்பிடுவதில்லை. ஏதாவது ஒரு பொருளைப் பார்த்தால் உடனே அதனைச் சாப்பிட்டு விடுகிறோம். இதைச் சாப்பிட வேண்டும் என்று நாம் தீர்மானிப்பதற்குப் பதிலாக, நம்மைச் சாப்பிடத் தூண்டுவதாக பொருள் மாறிவிட்டது.

கலீல் ஜிப்ரன் கவிதைகள்


அன்பு...
உங்களுக்கு
மகுடம் வைப்பது போலவே
இடர்ப்படுத்தி அறைந்தும் வருத்தும்
வளர வைப்பது போலவே
கிளைகளை நறுக்கவும் செய்யும்

(தொடர்ந்து பேசுவோம்...)

அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்