திருஷ்டி போயிடுச்சு!



ஆச்சி மனோரமா நலம்

‘இறப்பு... சேச்சே, அந்த வார்த்தையையே சொல்லாதீர்கள்... அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது’ என ஆறுதல் தர வேண்டிய வயதில், ‘இறந்து விட்டார்’ என்றே வதந்தி வந்தால் எத்தனை கொடுமை! சமீபத்தில் அந்தக் கொடுமைக்கு ஆளானார் நம்ம ஆச்சி மனோரமா. வாட்ஸ் அப், எஃப்.பி., ட்விட்டர் என வதந்திக்கு வாகனமாக அமைந்த அத்தனை தொழில்நுட்பம் மீதும் கோபம் வருகிறது. எத்தனை பேரை எத்தனை முறை இந்த சமூக வலைத்தளங்கள் சாகடித்துப் பார்த்திருக்கின்றன!

வீட்டின் வாசலிலேயே மூங்கில் செடிகள் சிலுசிலுக்கின்றன. சம்பங்கி கொடியில் மொட்டுக்கள் மலர்ந்து சிரிக்கின்றன. ஜாதி மல்லி, நித்யமல்லி செடிகள் பூத்துக் குலுங்குகின்றன. ஹாலைக் கடந்து வீட்டின் உள்ளே சென்றால், நிசப்தம் கலைத்து வரவேற்கிறார் ஆச்சி மனோரமா.‘‘வாங்க தம்பி. எப்படி இருக்கேன்னு பார்க்க வந்தீங்களா? முருகனோட அருளாலேயும்... எல்லோரோட பிரார்த்தனைகளாலேயும், ஆசீர்வாதத்தாலேயும் நான் சௌக்கியமா இருக்கேன்!’’ தெளிவான முகம்... அதில் நம்பிக்கை நூறு சதம்!

‘‘இப்படித்தான் தம்பி... ‘நான் நல்லா இருக்கேன்... சௌக்கியமா இருக்கேன்...’னு ரெண்டு நாளா ஒரே பதிலை ரெக்கார்டு மாதிரி எல்லோர்கிட்டயும் போன்ல சொல்லிக்கிட்டே இருக்கேன். அடிக்கடி இப்படி ஏதாவது கிளப்பி விட்டுடுறாங்க. யார் இதைச் செய்யறாங்க, ஏன் செய்யறாங்க, அதுல அப்படி என்ன அவங்களுக்குக் கிடைக்குதுன்னு தெரியல.

 ஒரு பக்கம் மனசுக்குக் கஷ்டமா இருந்தாலும், இன்னொரு பக்கம் நலம் விசாரிக்கறவங்க அன்பை நினைச்சு சந்தோஷமாவும் இருக்குது. ‘அடிக்கடி இப்படி வதந்தி கிளம்பினா ஆயுசு கெட்டி’ன்னு சொல்வாங்க. அது பலிக்கட்டும்!’’ - பிரம்பு நாற்காலியில் ரிலாக்ஸ்டாக அமர்ந்தபடி தொடர்கிறார் ஆச்சி...

‘‘இந்தியில மனோரமானு ஒரு நடிகை... 2008லயே இறந்துட்டாங்க. பிப்ரவரி 15 அவங்களுக்கு ஏழாவது நினைவு தினம். அந்த நினைவஞ்சலி நியூஸைப் பார்த்து, அது நான்தான்னு தவறுதலா நினைச்சு இன்டர்நெட்ல ஒரு சில பேர் எனக்கு அஞ்சலி செலுத்திட்டாங்க. வருத்தமா இருக்கு. ஒரு போன் பண்ணி விசாரிச்சு போட்ருக்கலாம். இப்படி வர்றது புதுசில்லதான்... ஏதோ, திருஷ்டி கழிஞ்சதுனுதான் இதை எடுத்துக் கணும்!’’‘‘பொழுது எப்படி போகுது?’’

‘‘நல்லா போகுது தம்பி. உடல்நலம் தேறினதுக்கு அப்புறம் இப்போ ‘பேராண்டி’ன்னு ஒரு படம் பண்றதா கமிட் ஆகியிருக்கேன். ‘பூரணமா நலமான பிறகு ஷூட்டிங் போகலாம்’னு அவங்ககிட்ட சொல்லியிருக்கேன். அடுத்தடுத்து படங்கள் பண்றேன். வீட்ல என்னோட கொள்ளுப் பேரன் அத்வைத் ராம் இருக்கார்.

 2 வயசு ஆகுது. அவர் இல்லைன்னா எனக்குப் பொழுதே போகாது. என்னைக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்து ‘ஐ லவ் யூ மனோ’ன்னு சொல்வார். ‘மனோ டார்லிங்...’னுதான் கூப்பிடுவார். போனை எடுத்தா, பெரிய பெரிய கேம் எல்லாம் விளையாடுவார்.  ரெண்டு கால்லயும் மூட்டு ஆபரேஷன் பண்ணின பிறகு, இப்போ முட்டி வலி சுத்தமா இல்லை.

கொஞ்சம் நடக்க முடியாம இருந்தப்ப யோகா, பிசியோதெரபி பண்ணினேன். இப்போ சரியாகிடுச்சு. கொஞ்ச தூரம் வாக்கிங் போவேன். டி.வி. பார்ப்பேன். மத்தபடி தினமும் நியூஸ் பேப்பர் வாசிச்சிடுவேன். முன்னாடி கோதுமையில செய்த உணவுகள்தான் சாப்பிடுவேன். இப்போ, உப்பு இல்லாத சாப்பாடா ஆகிப் போச்சு. முன்னாடி யெல்லாம் நான் வளர்க்கிற நாய்க்குட்டிகள் ஜூலி, டக்கு, பப்பி, அம்முத்து கூட விளையாடுவேன். இப்போ விளையாடுறதில்லை.

சமீபத்தில் வைத்தீஸ்வரன்கோவிலுக்குப் போய் வணங்கிட்டு வந்தேன். நான் வணங்குகிற கடவுளோட அருளும், ரசிகர்களோட பிரார்த்தனைகளும் அன்பும்தான் என்னை வாழ வைக்குது. நான் நூறு வயசு வரை இருக்கணும்னு ஃபேஸ்புக்ல, நெட்ல எல்லாம் ரசிகர்கள் வேண்டிக்கிறாங்க. அவங்க அன்புக்கு நன்றி சொல்லிக்கறேன்!’’ - இரு கரம் கூப்பி நெகிழ்கிறார் ஆச்சி!

அடிக்கடி இப்படி வதந்தி கிளம்பினா ஆயுசு கெட்டி

மை.பாரதிராஜா
படங்கள்: புதூர் சரவணன்