அனேகன்



பர்மாவில் திரியும் கூலி தனுஷ்... ஜாலி கேலி பேர்வழி பேட்டை தனுஷ்... கோட் சூட்டில் கம்ப்யூட்டர் எஞ்சினியர் தனுஷ் என மூன்று தனுஷ்களையும் முற்பிறவி கான்செப்ட்டில் போட்டுக் குலுக்கினால் என்ன வரும்?

அதுதான் ‘அனேகன்’.மறுபிறப்பு, மறுவாழ்வு என சாமர்த்தியமாக, கலவையாக, ஈஸியாக மூன்று காதல் கதைகளைச் சொல்லியிருக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்த்திற்கு சபாஷ்! கேட்டால் ஈஸியாக இருக்கிற கதை ஐடியாவை காட்சிப்படுத்திய விதம் தெளிவு.

சந்தேகமில்லாமல் தெரிகிறது... உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார் தனுஷ். மூன்று வேடம், மூன்று கெட்டப் என வருகிற காதல் கதையில் இது தனுஷின் கோட்டா! மனுஷன் வெளுத்து வாங்கி, ஊதித் தள்ளுகிறார். மட்டையில் பந்து தொட்டாலே சிக்ஸரில் பறக்கிற நேரம் அவருக்கு. மூன்று வேடங்களிலும் அதிகபட்ச வேறுபாடு காட்டுவதிலேயே நம்பகத்தன்மைக்கு வந்துவிடுகிறார். சுருட்டிய பேன்ட், பரட்டைத்தலை, வெற்று உடம்பு என பர்மாவில் கூலித்தொழிலாளியாக அசத்துகிறார்.

சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டே அடிக்கிற அரட்டை, கிண்டல், துறுதுறுப்பு என அடி பின்னுகிறார். செட்டி நாட்டு பாணியில் ஆங்காங்கே அடுக்குமொழி பேசுகிற நக்கல்... ‘பளிச்’ மின்னல்கள். ‘டங்கா மாரி’ பாடலில் தனுஷ் போடுகிற ஆட்டம், அசத்துகிற அச்சு அசல் குத்து. இந்த டைப் குத்துகளில் இன்னும் கொஞ்ச காலத்துக்கு தனுஷ் பக்கத்திலேயே யாரும் வர முடியாது போல!

அறிமுக அமைரா, அழகு முகம்! பர்மாவிற்கும் பாந்தமாய் இருக்கிறது... ஐயர் ஆத்துப் பொண்ணுக்கும் அம்சமாய் இருக்கிறது... கம்ப்யூட்டர் வேலைக்கும் கச்சிதமாய் இருக்கிறது. தனுஷுக்கு நிகராக படம் முழுக்க வந்தாலும் எங்கேயும் அலுக்கவில்லை அமைரா! தனுஷின் சேட்டை கலாட்டாக்களுக்கு பக்கா பக்கவாத்தியமாக நின்று விளையாடுகிறார்.ஆச்சரிய கம்பேக் கார்த்திக்! கேட்டு ரசிக்க முடிகிற வழக்கமான பாணியில் பேசும் விதமும், இன்னும் பார்க்கப் புதுசு!

இயல்பில் உயர்வு காட்டும் அவரை அரசியல் விழுங்கியிருப்பது சினிமாவுக்கு நஷ்டமே. அவரையே தனுஷ் ஒரு கட்டத்தில் இமிடேட் பண்ணுவது காமெடி சரவெடி. பழகிய பழைய திரைக்கதை ஆங்காங்கே தரை தட்டி நிற்கும்போது, ஏராள தாராளமாக காமெடி பன்ச் தூவி கப்பலைக் கரை சேர்க்கிறது சுபாவின் கைவண்ணம்.

திரும்பி வந்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். ‘டங்கா மாரி’ இந்த வருஷத்தின் மேளம் வெடிக்கிற மாஸ் பாட்டு. ‘ஆத்தாடி... ஆத்தாடி’, ‘ரோஜா கடலே’, ‘தொடு வானம்’, ‘தெய்வங்கள் இங்கே’ என எல்லாப் பாடல்களும் காதுகளுக்கு பூத்தூவல். பின்னணியும் படம் முழுக்க ஜிலீரென்று த்ரில் கூட்டுகிறது. கீப் இட் அப் பாஸ்!பர்மா எபிசோடில் ஆரம்பித்து கடைசி வரைக்கும் ஒவ்வொரு ஃபிரேமையும் அழகழகாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறது ஓம்பிரகாஷ் கேமரா. அப்படியே கண்களில் வைத்துக்கொள்கிற இதம்!

நடுவில் தெரிகிற பேய்க்கதை எதற்கு? இருந்த அழகான இன்னொரு பெண்ணையும் சாகடிக்க வேண்டுமா? காட்சிகளை லாஜிக் அவ்வளவாக மீறாமல் புத்திசாலித்தனமாக அமைக்க மெனக்கெட்டு இருப்பது கச்சிதம். மூன்று காதல் கொஞ்சம் அதிகம். இரண்டில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், இழுவையாகத் தோன்றும் உணர்வு வராமல் இருந்திருக்கும்.
விறுவிறு முதல் பாதி... துறுதுறு பின்பாதி. அதுதான் ‘அனேகன்’!

 குங்குமம் விமர்சனக் குழு