படிப்பு



நண்பர் பாண்டியை நீண்ட நாட்களாகவே கவனிக்கிறேன். தினம் தன் பைக்கில் மகனையும், மகளையும் பள்ளிக்கூடம் கூட்டிப் போகிறார். அதில் அந்தப் பெண் கான்வென்ட் ஸ்கூல் யூனிஃபார்மிலும் பையன் கவர்மென்ட் ஸ்கூல் யூனிஃபார்மிலும் இருப்பது என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. ‘‘எல்லாரும் பையன்களைத்தான் நல்லா படிக்க வைக்க நினைப்பாங்க. நீங்க என்ன சார் இப்படி?’’ - ஒரு நாள் அவரிடம் கேட்டேவிட்டேன்.

‘‘நம்ம வசதிக்கு ரெண்டு குழந்தைகளையும் கான்வென்ட்டில் படிக்க வைக்க தோதுப்படாது சார். பையனைப் பொறுத்தவரை நம்ம பொறுப்பு. இந்த ஸ்கூல்லயே நல்லா படிச்சி பெருசா வர ட்ரை பண்ணட்டும். அப்படியே முடியலைன்னா, நல்லது கெட்டதை மட்டும் அங்கே தெரிஞ்சிக்கட்டும். நான் பண்ற கார்பென்டர் வேலையையாச்சும் கத்துக் கொடுத்து அவனை ஆளாக்கிடலாம். அந்த நம்பிக்கை இருக்கு. ஆனா, பொண்ணு...

வேற ஒரு இடத்துக்கு வாழப் போறவ. நாளைக்கே போற இடத்தில் பிரச்னைன்னா, அவளை அவ காப்பாத்திக்க நல்ல படிப்பும் பழக்க வழக்கமும் அத்தியாவசியம். அதனாலதான் பொண்ணை கான்வென்ட்லயும் பையனை கவர்மென்ட்லயும் படிக்க வைக்கறேன்!’’அவரின் வித்தியாச சிந்தனை எனக்கு சரியெனவேபட்டது.     

வைகை ஆறுமுகம்