மழைத்தும்பிகள்




*காதல் காமமாதல் இயல்பு
காமம்
நட்பாதல்
சிறப்பு

*சிறு தானியம் சிறு தெய்வம்
சிற்றின்பம்
பிழையான
சொல்லாடல்கள்

*மரப்பாச்சி
கூட்டாஞ்சோறு
உளவியல்
அழகு

*ஆண்கள் பள்ளி
பெண்கள் பள்ளி
நோய்
செய்யும்

*எழுந்த உடல்கள்
வானமாகின்றன

விடைபெறும் நேரம்

‘‘இரண்டு கயிறு உண்டு.
ஒன்று ஒரு சாண். மற்றொன்று முக்கால் சாண்.
ஒன்று ஆண்; மற்றொன்று பெண்;
கணவனும்; மனைவியும்.
அவையிரண்டும் ஒன்றையொன்று
காமப் பார்வைகள்
பார்த்துக் கொண்டும்;
புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும்

ரசப் போக்கிலேயிருந்தன”
பாரதி
ம். பாரதியின் இந்தக் கயிறுகள்தாம்
குங்குமத்தின் இருபது இதழ்களில்
தும்பிகளாய்...
மழைதெறிக்கப் பறந்து கொண்டிருந்தன.

இனியும்... உங்கள்
மனசுகளில் நட்புணர்வோடு
இந்தத் தும்பிகள்
பறந்துகொண்டே இருக்கும்.

அவ்வை பறக்கவிட்ட தும்பிகள்தாம்.
வள்ளுவன் பறக்கவிட்ட தும்பிகள்தாம்.
அறிவுமதியும் பறக்கவிட்டேன். அவ்வளவுதான்.

இயற்கையின் எல்லா உயிர்களும்
இந்தப் பசியை இயற்கையாய்
எதிர்கொள்கையில்... மாந்த உடல்கள் மட்டும்
இதில் செயற்கைகள் இடற
திகைத்துத் திணறுகின்றன.

ஊர்களுக்குள் மட்டுமல்ல... உடல்களுக்குள்ளும்
வணிக வக்கிரங்கள்
ஊடுருவத் தொடங்கிவிட்டன.
செயற்கைப் பெரும் பிரிவுகள்... இரவு பகல்
விழிப்பு மாற்றங்கள்... எல்லாம்
திட்டமிடப்பட்டே நம் இல்லற வாழ்வின் மீது
திணிக்கப் பட்டுவிட்டன.

இந்தச் சூழலில்...
ஆயிரம் பணிகள் இருப்பினும்
உடல்வளப் பயிற்சிகளுக்கான நேரத்தில்
உறுதியாய் இருங்கள்.
புறமன அழுத்தங்களைப் புறத்திலேயே
கழற்றி எறியுங்கள்.

நாள்கள் சேமித்துக்
காடுகளில் தொலையுங்கள். காட்டாறுகளில்
அமிழுங்கள்
வெளிப்படையாய்
மனசுகளால் காமத்தைப் பகிர்ந்து
உடல்களால் நட்பு செய்யுங்கள்.

ஆம்...
இறுதியாகவும் பாரதி -
‘‘ஆண் நன்று.
பெண் இனிது.
உயிர் நன்று. உடல் நன்று.
உண்பீர். உணவாவீர்”
வாழ்த்துகளுடன் விடைபெறுவது

உங்கள் அறிவுமதி