கவிதைக்காரர்கள் வீதி




வாசகன்

யாருமற்ற நூலகத்தில்
புத்தகங்களைப் புரட்டுகிறது
காற்று
நா.கோகிலன், ஜோலார்பேட்டை.

கொடை

பறவைகள் அமர
கிளை தந்த
மரம்தான்
இறந்த பின்னும்
தருகிறது...
ஜோசியக் கிளி அமர
கூண்டு!
பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

தனிமை

தட்டப்படும்
கதவுக்கு உள்ளே
கோப்பையில் நிரப்பப்பட்டிருக்கும்
தனிமை
துளித்துளியாக
தரையில் சிந்தப்படுகிறது.
ப.மதியழகன், மன்னார்குடி.

சுவை

ஆயிரக்கணக்கான தேனீக்களை
அப்புறப்படுத்திவிட்டு
தேனை
சுவைக்கும்போது
மனம்
குற்ற உணர்வில்
குறுகுறுக்கிறது
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்

சாமி

குலதெய்வ வழிபாட்டிற்கு
குடும்பத்தோடு சென்றான்
வீட்டுத் திண்ணையில்
அம்மா.
சங்கீத சரவணன், மயிலாடுதுறை.