படைப்பாளியை சாந்தாமா இருக்க விடுங்க!



செல்வராகவன் செம ஃபீலிங்!

கொஞ்ச நாட்களாகவே ஒதுங்கியிருக்கிறார் செல்வராகவன். எப்போதாவது அலைபேசியில் பிடித்தால் ‘’ஸாரி... நானே கூப்பிடுறேன். சௌக்கியமா?’’ என்பார். திடுதிப்பென்று மறுபடியும் அவரது லைனுக்குப் போக, ‘‘நாளை மூணு மணி... பெசன்ட் நகர் வீடு. உங்க டைம் எப்படி?’’ என்றார், சைலன்ட்டாக, சர்ப்ரைஸாக!‘‘ஏன் இந்த இடைவெளி? சினிமாவை விட்டு அவ்வளவு தூரம் விலகி நிக்கிறீங்களே?’’‘‘அட, ஒண்ணுமில்லைங்க. என் குழந்தைகளோடு இருந்தேன்.

குழந்தைகள் வளரும்போது உடனிருப்பது ரொம்ப முக்கியம். பெத்தமா, வளர்த்துக்கனு அம்மாகிட்டயோ ஒய்ஃப்கிட்டயோ விட்டுட்டுப் போறது நம்மூர் கலாசாரம். ‘நான் எழுந்து ஷூட்டிங் போகும்போது பசங்க ஸ்கூல் போயிருப்பாங்க. திரும்பும்போது தூங்கிட்டு இருப்பாங்க’னு திரையுலக பிரபலங்கள் பேட்டி கொடுக்கிறதை பார்த்திருக்கேன்.

கொடுமை அது. வெளிநாட்டில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மனைவிக்கு துணையா கணவரும் இருந்து குழந்தைகளை வளர்க்கிறாங்க. ரொம்ப வருஷம் கழிச்சு குழந்தைகள் நம்மை கைவிட்டுட்டாங்களேனு கழிவிரக்கம் படுறதை இதனால தவிர்க்கலாம். இது நானே எடுத்த நல்ல முடிவு. இதை எத்தனை பேர் புரிஞ்சிக்கப் போறாங்க... அதைப் பத்தியெல்லாம் எனக்குக் கவலையே இல்லை!’’

‘‘எல்லோரும் படம், பணம், நம்பர் கேம்னு ஓடிக்கிட்டு இருக்கிற இடத்தில நீங்கள் இப்படி...’’‘‘பணம், பணம்னு அதை வச்சுக்கிட்டு ஒரு கட்டத்தில் என்ன தான் பண்றது? எனக்கு எது முக்கியமோ அதைச் செய்றது தான் என் இயல்பு. இப்ப நான் சினிமாவுக்கு வரலாம். என் குழந்தைகளுக்கு இப்ப நான் இல்லாமல் கொஞ்சம் சமாளிக்கத் தெரியும். இப்ப சிம்பு கூட ஒரு படம் பண்ணலாம்னு பேசிட்டு இருக்கேன்.’’

‘‘நீங்க - சிம்பு - த்ரிஷானு ஒரு காம்பினேஷன் போன வருஷமே பேசப்பட்டுச்சே..?’’‘‘எல்லாமே ரெடியா இருந்தது. லொக்கேஷன், ஏற்பாடுகள், ஸ்கிரிப்ட்னு பக்கா பிளானா இருந்த நேரம். அதை சில பேர் சேர்ந்து நாசம் பண்ணினாங்க. எல்லாரையும் சந்திக்கு இழுத்திருக்கலாம். எதையும் செய்யலை.

சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்னு எடுத்துக்கிட்டேன். மனதில் ரத்தம் கசிந்தது. குண்டாஸ்னு ‘புதுப்பேட்டை’யில் நடிக்க வச்சிருக்கேன். இப்ப கண்கூடா பார்த்தேன். கலைஞனை சாந்தமான மனநிலையில் இருந்து செயல்பட விடணும். என் ஆசை அதுதாங்க. இப்பதான் சிம்பு சொன்னார். ஒரு நல்ல படம் தயாரிப்பதற்கான ஒரு நல்ல கட்டம் உருவாகிக்கிட்டு இருக்கு!’’

‘‘உளவியல் சார்ந்து, காமம் புரிந்து படம் எடுத்தவர் நீங்கள். அதை விட்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’னு ஃபேன்டஸி பக்கம் போனது தப்போ?’’
‘‘டைரக்டர்னா எல்லாப் பக்கமும் போய் பார்க்கணும் இல்லையா..? எனக்கு காதல்தான் வரும்னு அதையே வித்து, சோறாக்கி, தின்னுட்டு, சாகச் சொல்றீங்களா..? என்ன பண்ணச் சொல்றீங்க?’’‘‘ ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ எதிர்பார்த்த அளவுக்குப் போகலையே...’’

‘‘ ‘ஆயிரத்தில் ஒருவன்’ தப்புப் பண்ணலை. 18 கோடி செலவானது. தமிழ், தெலுங்கு ரெண்டுக்கும் சேர்ந்து ஒண்ணும் நஷ்டம் இல்லை. இப்பகூட பார்ட் 2 எடுத்தா என்னனு எல்லாரும் கேட்கிற அளவு அந்தப் படத்தின் இடம் இருக்கு. ‘இரண்டாம் உலகம்’தான் பெரிய காயமாகிடுச்சு. அந்த மாதிரி பெரிய படம் எடுத்ததே முட்டாள்தனமானது. எல்லாத்துக்கும் டைரக்டர்தான் காரணம்னு சொல்லிட்டாங்க. உட்கார வச்சு, முதுகில் ஏறி மிதிக்கிறதே வேலையாப் போச்சு.

அதில், சி.ஜி இருந்தது. 100 விதமான மற்ற கலைஞர்கள் இருந்தாங்க. நானே ஒரு ஆளா இவ்வளவு பெரிய தேரை இழுக்க முடியாது. நான் சாதாரண மனுஷன். ஒரு ஸ்டேஜில் அனாதை மாதிரி ஆகிட்டேன். கிராபிக்ஸ் ஒண்ணுமே இல்லை. யாரும் சொன்னதைச் செய்யலை. வாக்குறுதிகள் மீறப்பட்டன. துரோகங்கள் இழைக்கப்பட்டன. நேரத்தை மெயின்டெயின் பண்ணலை. தகுதிக்கு குறையாமல் பிரமாண்டம் கொடுக்க வேண்டிய கலைஞர்கள், ‘நம்ம ஊருக்கு இது போதும்’னு சொன்னாங்க.

‘இவ்வளவு அக்மார்க் என்னத்துக்கு?’னு கேள்வி வந்தது. இந்தத் தேதியில் தர்றோம்னு சொல்லுவாங்க. போய்ப் பார்த்தால் எதுவுமே நடந்திருக்காது. ஒரு ஸ்டேஜில் வயித்துக்குள்ளேயிருந்து எடுத்துப் போட்டுட்டேன். இவ்வளவு துரோகத்தையும் முதுகில் குத்துறதையும் பார்த்த பின்னாடிதான் இப்படி ஒரு படம் ஆரம்பிச்சது தப்புனு புரிஞ்சுபோச்சு!’’

‘‘கொஞ்சம் ஒதுங்கியிருந்து பார்த்தீங்களே! இப்ப எப்படி இருக்கு தமிழ் சினிமா?’’‘‘சத்தியமா, நடக்கிறதைப் பார்த்தால் ஆரோக்கியமா இருக்கிற மாதிரி தெரியலை. கண்கொட்டாமல் பார்க்கிற மாதிரி இல்லாமல், கதையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு வேற மாதிரி போயிடுச்சு சினிமா. என்ன சரக்கு இருக்குன்னே தெரியலை.

எதையாவது போட்டு நிரப்பினா சரினு ஆகிப் போச்சு. இந்த மாதிரி சூழ்நிலையில ஓரமா நின்னுக்கிட்டு என்ன செய்ய முடியுமோ, அதை செய்திட்டுப் போகலாம்னு நினைச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கேன். அது சின்னதா கூட இருக்கலாம். அது போதும்னு நினைக்கிறேன். கும்பலோடு சேர்ந்து நிற்கிறதில் உடன்பாடு இல்லை.’’

‘‘என்ன இவ்வளவு வேதனை..?’’

‘‘25 வருஷத்திற்கு மேல மணிரத்னம் சார், தமிழ் சினிமாவின் தனிப்பட்ட அடையாளமா இருக்கார். ஒவ்வொரு படைப்பையும் தனித்துவத்துடன் உருவாக்குவதில், உணர வைப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வம்... சத்தியமா மத்த யாருக்கும் சாத்தியமானு தெரியலை.

 அவரையே திரைக்கதை எழுதத் தெரியலைனு சொல்ற சூழ்நிலை இப்ப இருக்கு. கொடுத்த காசுக்கு அது என்ன மாதிரி கேவலமான காமெடியா இருந்தாலும் சிரிச்சமா... போனோமானு இருக்கு. இதையெல்லாம் பார்க்க விரும்பாமதான் கே.பி சார் போயிட்டாரோ! எனக்குத் தெரிஞ்சு மக்கள் இதைக் கேட்டு விரும்பிச் செய்யிற மாதிரி தெரியலை. காசுக்குப் பின்னாடி போயிட்டு, காசை வச்சுக்கிட்டு ஆட்டம் போடுறது டயர்டா இருக்கு!’’

‘‘உங்க தம்பியா தனுஷ் இருக்கலாம். ஆனால், சினிமாவில் அவர் நீங்க போட்ட விதை. அவரோட வளர்ச்சியை எப்படிப் பார்ப்பீங்க?’’‘‘அவர் என்னோட விதை, நான்தான் அறிமுகப்படுத்தினேன் என்று சொல்லிக்கிட்ட காலங்கள் முடிஞ்சுபோச்சு. தனுஷ் வளர்ச்சிக்குப் பின்னாடி அவரின் அசுரத்தனமாக தனிமனித உழைப்பு இருக்கு. எல்லா அண்ணன் மாதிரி அதை பெருமிதமா, சந்தோஷமா சொல்லிக்கிறேன். நடிப்பை அவ்வளவு பாலீஷ் பண்றார்.

நல்லா இல்லாத படங்களில் கூட அவர் நடிப்பு பேசப்படுது. நானும் அவருமே சேர்ந்து 20 குறும்படங்களுக்கு மேல செய்து பார்த்திருக்கோம். அதில் நானும் அவருமே நடிச்சிருக்கோம். எல்லா அனுபவமும் ஒண்ணாச் சேர்ந்து அவரைக் கொண்டு வந்து விட்டதுதான் இந்த நல்ல இடம்.’’ஆயிரத்தில் ஒருவன் தப்புப் பண்ணலை.இரண்டாம் உலகம்தான் பெரியகாயமாகிடுச்சு.

25 வருஷத்திற்கு மேல மணிரத்னம் சார், தமிழ் சினிமாவின் தனிப்பட்ட அடையாளமா இருக்கார்.அவரையே திரைக்கதை எழுதத் தெரியலைனு சொல்ற சூழ்நிலை இப்ப இருக்கு.

நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்