அவன் அவள் unlimited



ஒரு அடங்காப் பிடாரியின் பின்னணி!

பெண்ணியவாதிகளைப் பொறுத்தவரை, பெண்கள் எல்லோரும் தங்கள் கணவர்களைப் பிரிந்துவிட வேண்டும். குழந்தைகளைக் கொன்றுவிட வேண்டும். கடைசியில் லெஸ்பியனாகிவிட வேண்டும்!
- பேட் ராபர்ட்சன்

அந்த ஆளு சரியான சைக்கோ... கல்யாணம் ஆன ஒரே மாசத்துல பொண்டாட்டி கும்பிடு போட்டுட்டு போயிட்டா!’’‘‘அந்தப் பொண்ணு பெரிய அடங்காப் பிடாரிப்பா... எவனும் வாழ முடியாது அவளோட!’’- இப்படி கமென்ட்டுகளை, கமென்ட்டுகள் குறிக்கும் மனிதர்களை அடிக்கடி சந்தித்திருப்போம். ஆனால், இப்படிப்பட்ட சைக்கோக்களின், அடங்காப் பிடாரிகளின் பின்னணி இதுவாகவும் இருக்கலாம் என்கிறபோது அதிர்ச்சி நம்மை விழுங்குகிறது!

சென்னை நகரில் பிறந்து வளர்ந்த வாட்டசாட்டமான இளைஞன் அன்பு. வீட்டில் அவனுக்கு சின்ஸியராக பெண் பார்த்தார்கள். ஆனால், அன்பு தனக்கு கல்யாணமே வேண்டாம் என்றான்.
‘‘அதெல்லாம் அப்படித்தான் சொல்வான்... கல்யாணம் ஆனா, எல்லாம் சரியாப் போகும்’’ என்றார்கள். அவனுக்கு வரும் டௌரி பணம் அவன் தங்கைக்கு உதவும் என்றார்கள். கடைசியாக பெற்றோரின் கண்ணீர் அவனை வலுக்கட்டாயமாய் தலையாட்ட வைத்தது.

திருமணம் முடிந்தது. முதல் நாள் இரவு. ஏதோ பேயை எதிர்பார்த்திருப்பது போல நடுங்கிக் கிடந்தான் அன்பு. ‘ஒரு பெண்ணைத் தொட்டு, அவளுக்கு முத்த மிட்டு, அணைத்து... சீ!’ நினைக்கும்போதே வாந்தி வந்தது அவனுக்கு. உடல் முழுக்க அருவருப்பு நெருப்பு. அவன் தன்னை ஒரு ஓரினச் சேர்க்கையாளனாக உணர்ந்து நெடுநாளாகிறது.

சின்ன வயதில் இருந்தே அவனுக்கு பெண்களிடம் எந்த கெமிஸ்ட்ரியும் வொர்க் அவுட் ஆனதில்லை. அவன் ஆசை, வெட்கம் எல்லாமே ஆண்களிடம்தான். கிண்டல் செய்வார்களே என இந்த உணர்வை மறைத்து மறைத்து வாழ்ந்திருந்தான். தன்னைப் போலவே ஒரு ஓரினச் சேர்க்கையாளனை அடையாளம் காண்பது, அவனோடு இணைவது - இதுதான் அவன் லட்சியமாக இருந்தது. இதற்கிடையில் இப்படி ஒரு கல்யாணம்.

இன்றிரவை எப்படித் தவிர்ப்பது? இருக்கவே இருக்கு வரதட்சணை... அதில் ஆரம்பித்தான்.‘‘என் ரேஞ்சுக்கு நீ போட்டு வந்த நகை கம்மிதான்’’ என மணப்பெண்ணை அப்செட் செய்து கண்ணயர்ந்தான்.இரவு தினமும் வருமே!‘‘உன்னைப் பிடிக்கல!’’‘‘என்ன சமைக்கிறே நீ? தூ...’’‘‘பொம்பளையா நீ? வெக்கமில்லாம தொடறே..? நிறைய அனுபவமோ?’’ - இப்படி தினம் தினம் விஷம் தெளித்தான். மனைவிக்கு கோபம்... பிறந்த வீட்டில் புலம்பினாள். அவர்களுக்கு சந்தேகம். அன்புவின் ஆண்மை மீதே!

பிரச்னை வேறு திசைக்குப் போவதை உணர்ந்தவன், குடும்ப மானம் காக்க ஒரே ஒரு நாள்... மனதையும் உடலையும் கல்லாக்கி மனைவியோடு சேர்ந்தான். மறுநாளில் இருந்து அந்தத் தோல்வியை நினைத்து நினைத்தே அவளுக்கு அடி உதைதான்.

கடைசியாகப் பொங்கியெழுந்த அந்தப் பெண் தன் கர்ப்பத்தைக் கூட கலைத்துவிட்டு அன்புவிடமிருந்து விவாகரத்து வாங்கிக்கொண்டாள். கடைசியாக அவள் உதிர்த்த வார்த்தைகள், ‘‘அன்பு ஒரு சைக்கோ’’ என்பதுதான். ‘கே’ என்பதை விட, ‘சைக்கோ’ பட்டம் பரவாயில்லையாக இருந்தது அன்புவுக்கு!

உண்மைச் சம்பவம் 2

அன்புவைப் போலவேதான் சுமித்ராவும். அவள் ஒரு லெஸ்பியன் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ‘திருமணம் வேண்டாம்’ என முரண்டு பிடிக்கக் கூட இங்கே பெண்ணுக்கு வழியில்லையே! கட்டாயமாக்கப்பட்டது கல்யாணம். ஆண் தொட்டால் அவளுக்கு பட்டாம்பூச்சி பறக்காது; கம்பளிப்பூச்சி தான் ஊரும். ஒரு மனைவியாக, கணவனுக்குக் கட்டுப்பட்டவளாக அவள் எப்படி செக்ஸைத் தவிர்ப்பாள்..?‘‘இன்னைக்கு எனக்கு தோதுப்படாது!’’ என்றாலும் நான்காவது நாள் திரும்ப வருவானே? அந்த நான்காவது நாளில் இருந்து தொடங்கியது நரகம். தினமும் கணவனுடன் சண்டை போட ஏதேனும் காரணம் வேண்டும் அவளுக்கு!

‘‘காசு வாங்கிட்டுத்தானே தாலி கட்டினே? உன்னை மாதிரி ஒரு மனுஷனோட... ச்சீ!’’‘‘பொம்பளைன்னா இதுக்கு மட்டும்தானா? உனக்கு வெக்கமா இல்ல?’’இதெல்லாம் அவள் பயன்படுத்திய வார்த்தைகள். மனைவி இப்படி தொடர்ந்து முரண்டு பிடித்தால் கணவன் என்ன செய்வான்? ஆணுடைய பெரிய பலவீனமே அவன் பலம்தான். இப்படி கார்னர் செய்யப்படும்போது அவன் கட்டாயம் கையை நீட்டுவான். அது போதுமே! அவனை விட்டு விலகி பிறந்த வீடு போக அது சூப்பர் காரணமாச்சே! செய்து காட்டினாள் சுமித்ரா.

கடைசியாக, சுமித்ராவை நிரந்தரமாகப் பிரிய முடிவெடுத்தபோது அவள் கணவன் சொன்னது... ‘அவள் ஒரு அடங்காப்பிடாரி’. ‘லெஸ்பியன்’ என்பதைவிட இது ஓகே சுமித்ராவுக்கு.

ஓரினச் சேர்க்கையை மட்டும் இந்தச் சமூகத்தால் கேஷுவலாக எடுத்துக்கொள்ள முடிந்திருந்தால்... நார்மலாய் பிறந்த திமிரில், ‘அவனா நீ’ என நாம் அவர்களை அடித்து சாத்தாமல் இருந்திருந்தால்... ‘‘எனக்கு பெண் மீது ஆசையில்லை...

நானொரு கே!’’ என அன்பு கம்பீரமாய் சொல்லியிருப்பான். சுமித்ராவும் ஊரறிய லெஸ்பியன் ஆகியிருப்பாள். இவர்களை மணம் செய்துகொண்ட அந்த அப்பாவி ஆண் - பெண்ணின் வாழ்வு காப்பாற்றப்பட்டிருக்கும். அப்படியொரு கே - லெஸ்பியன் சுதந்திரத்தைத்தான் நம்மிடம் அழுத்தம் திருத்தமாகக் கேட்கிறார்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள். அது அவர்களுக்கு நல்லது; நமக்கு ரொம்ப நல்லது!

‘‘தெரிஞ்சோ தெரியாமலோ ஓரினச்சேர்க்கையாளருக்கு நார்மலா கல்யாணம் பண்ணி வச்சா, அது எரிமலை மாதிரி! என்னைக்காவது வெடிச்சே தீரும். இதுக்குத் தீர்வு ஓரினக் கல்யாணங்களை அங்கீகரிக்கறதுதான்.

ஃபாரீன்ல ஓரினக் கல்யாணங்களுக்கு சொந்தக்காரங்க வந்து வாழ்த்துறாங்க. நாமளும் சில மனத்தடைகளைத் தாண்டணும்!’’ என்கிறார் சுனில் மேனன். தமிழகத்தில் துணிச்சலுடன் தன்னை கே செக்ஷுவலாக வெளிப்படுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர் இவர்.

இவ்விஷயத்தில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். சுமித்ரா கதையில் அவர் தன் கணவனிடம் பயன்படுத்திய வார்த்தைகள் எல்லாமே ஏதோ பெண்ணியம் பேசுவது போலப் படுகிறதா? ரைட்! ஒரு லெஸ்பியனாக இதுபற்றி மீரா என்பவர் விளக்கினார்...‘‘ரெண்டு ஆண்கள் கட்டிப் பிடிச்சிக்கிட்டு நின்னாலே அவங்களை ‘கே’வா சந்தேகப்பட்ருவாங்க. ஆனா, அப்படி லெஸ்பியனைக் கண்டுபிடிக்கறது கஷ்டம். நார்மலாவே பெண்ணுங்க கட்டிக்கறதும் கிள்ளிக்கறதும் சகஜம்.

 இதை பாஸிட்டிவா பயன்படுத்திக்கிட்டு எங்களை மாதிரி யாருக்கும் தெரியாம தம்பதியா வாழறவங்களும் உண்டு. ஆனா, இந்தக் கொடுப்பினை இல்லாம, பெத்தவங்க கட்டாயத் திருமணம் பண்ணி வச்சிட்டா அந்த லெஸ்பியன் பொண்ணுங்க என்ன செய்வாங்க? சமூகத்தோட கலந்து தான் இருப்பாங்க.

தன்னை லெஸ்பியன்னு சொல்லிக்க முடியாது! நெருங்கி வர்ற ஆம்பளையப் பார்த்தா கோவம் வரும். பெண்ணியத்தைக் கையில எடுத்துக்கிட்டுத்தான் ஆம்பளையைத் திட்டணும். வேற வழியில்ல!’’ என்றார் அவர் ஒப்புதல் டோனில்!

நடைமுறைச்சிக்கல் என்னவென்றால், இன்று நம்மூரில் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் என எல்லோருமே பெண்ணியம் என்ற குடையின் கீழ்தான் நின்று போராட வேண்டி யிருக்கிறது. அயல் நாடுகளில் ஃபெமினிஸத்துக்கும் லெஸ்பியனிஸத்துக்கும் இடையே ‘மெல்லிசா ஒரு கோடு’ இருப்பதைக் கண்டறியத் துவங்கிவிட்டார்கள்.

இங்கே யும் ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப்பட்ட பின் அந்த விழிப்புணர்வு வரும். அதுவரை இது பற்றி நாம் விவாதிப்பது நல்லதில்லை. அப்போ மறுபடி காதல் பற்றியே விவாதிப்போம். ஓர் உளவியல் - காதல் டெஸ்ட்டுக்கு தயாராக இருங்கள்!நெருங்கி வர்ற ஆம்பளையப் பார்த்தா கோவம் வரும். பெண்ணியத்தைக் கையில எடுத்துக்கிட்டுத்தான் ஆம்பளையைத் திட்டணும். வேற வழியில்ல!

தேடுவோம்...