கடல்லயே இல்லையாம்!



எங்கேயோ பார்த்த முகம்

அடடே அல்வா வாசு

போன வருஷம் ஒரு பத்திரிகையில என் பேட்டியை போட்டுட்டு அதுல என் நம்பரையும் போட்டுட்டாங்க. அந்த வாரம் ஃபுல்லா, போனை நான் கையிலேயே தொட முடியலை. ‘அந்தப் படத்துல ஏன் அப்படி நடிச்சீங்க? இந்தப் படத்துல ஏன் இப்படி நடிச்சீங்க?’னு தினமும் 50 போன். அன்னில இருந்து, இன்டர்வியூனாலே அலர்ஜி சார்!’’ - ஒரு வாரமாக மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு ஃபாலோ பண்ண வேண்டியிருந்தது அல்வா வாசுவை!

வடபழனி முருகன் கோயில் பின்னால், ஒரு தெருக்கோடி கட்டிடத்தின் ஃபர்ஸ்ட் ஃபுளோர். ‘‘ஃபேமிலி எல்லாம் இன்னமும் மதுரையிலதான் இருக்குது சார்’’ - தன் வீட்டுக் கதவை திறக்க முயன்றபடியே பேசுகிறார் அ.வாசு. அந்தக் கதவின் லாக் லிவர் உடைந்து கையோடு வந்துவிட்டது. இனி கார்பென்ட்டர் வந்துதான் திறக்க முடியும்.‘‘ஹி... ஹி... வாங்களேன் வெளியில அயர்ன் வண்டிக்காரங்க நம்ம ஃப்ரெண்ட்தான். அங்க உட்கார்ந்து ஃப்ரீயா பேசுவோம்..!’’ - அவரின் சமாளிபிகேஷன் சக்ஸஸ்!

‘‘முழுப்பேரு வாசுதேவன். சொந்த ஊரு மதுரை. அமெரிக்கன் காலேஜ்ல பி.ஏபடிச்சிருக்கேன். ஊர்ல இருந்து மெட்ராஸை சுத்திப் பார்க்கலாம்னுதான் சென்னை வந்தேன். பாலசந்தர் சார் படங்களுக்கு எடிட்டரா இருந்த ஆர்.பி.திலக் சார் எங்க ஊர்க்காரர். சென்னைக்கு வந்ததும் நேரா அவரைப் போய் பார்த்தேன்.

நான் போன நேரம் அவங்க வெளிய கிளம்பிட்டிருந்தாங்க... ‘நீயும் கூட வா’னு கூட்டிட்டுப் போனாங்க... கார் நேரே வாஹினி ஸ்டூடியோவுக்குப் போச்சு. சென்னைக்கு வந்த ஒரு மணி நேரத்துலயே நேரா ஸ்டூடியோக்குள்ள போனது நான் ஒருத்தனாத்தான் இருக்க முடியும். அந்த கிறக்கத்துல இங்கேயே தங்கிட்டேன்.

அப்புறம் திலக் சார் கே.ரங்கராஜ் டைரக்ஷனில் மோகன், பூர்ணிமா, கவுண்டமணிய வச்சு, ‘நெஞ்சமெல்லாம் நீயே’னு ஒரு படத்தை தயாரிச்சார். அந்தப் படத்துல ஏ டு இசட் எல்லா வேலைகளையும் கவனிச்சுக்கிட்டேன். அது ரிலீஸ் ஆன பிறகு திலக் சாரே என்னை டைரக்டர் மணிவண்ணன்கிட்ட சேர்த்து விட்டார்.

அப்போ மணிவண்ணன் சார் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ இயக்கிட்டிருந்தார். அதான் அவர்கிட்ட நான் உதவியாளரா சேர்ந்த முதல் படம்!’’ என்கிற வாசு ஒன்றல்ல... இரண்டல்ல... 50 படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்!

‘‘சினிமாவில எல்லா டிபார்ட்மென்ட் வேலைகளையும் அவர்கிட்ட கத்துக்கிட்டேன். சும்மா தலை காட்டிட்டுப் போற சீன்கள் நிறைய பண்ணியிருக்கேன். ‘வாழ்க்கைச் சக்கரம்’ படத்துல தான் முதன்முதலா ஒரு லெங்த் டயலாக் பேசி நடிச்சேன். சத்யராஜ் நடிச்ச ‘புதுமனிதன்’ல பத்து நிமிஷம் டயலாக் பேசுவேன்.

அன்னிக்கு சொன்னார் மணிவண்ணன் சார்... ‘உனக்கு டைரக்ஷன் சரிப்படாது. நீ நடிக்கப் போ’னு! இது வரைக்கும் ஐநூறு படங்கள் நடிச்சிட்டேன். ‘அமைதிப்படை’யில சத்யராஜ் என்கிட்ட அபின் வாங்கி அதை அல்வாக்குள்ள வச்சி கஸ்தூரிக்குக் கொடுப்பார். அன்னில இருந்து அல்வா வாசு ஆகிட்டேன்.

ஒரு காமெடி நடிகனா என்னை டெவலப் பண்ணி, கைதூக்கி விட்டது வடிவேலு அண்ணன்தான். கிட்டத்தட்ட 70 படங்கள் அவரோட நடிச்சிருப்பேன். ‘இங்கிலீஷ்காரன்’ல தீப்பொறி திருமுகமா வருவேன். வடிவேலு அண்ணனுக்கு ஜாமீன் கிடைக்கலைனு சொல்ற அந்த சீன் படு ஹிட்.

 ‘கடல்லயே இல்லையாம்!’னு நான் அதுல லைட்டா தலையாட்டி சொன்ன ஸ்டைல் எல்லாருக்கும் பிடிச்சிருச்சு.‘மருதமலை’ படத்துல நான் போலீஸ் ஏட்டு. போலீஸ் ஸ்டேஷன்ல வடிவேலு அண்ணன் குரூப் எல்லாரும் ஒண்ணா இருக்கற காம்பினேஷன் சீன்.

அந்த ஷூட்டிங் அன்னிக்கு ஊர்ல எங்க அம்மா இறந்துட்டாங்க. ஸ்பாட்ல நான் அழுறேன். ‘ஏன்டா வாசு அழுறே?’னு வடிவேலு கேட்டாப்ல. விஷயத்தைச் சொன்னேன். உடனே அவர் வீட்டம்மாவுக்கு போன் பண்ணி, மதுரையில எங்க வீட்டுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து விட்டார். ‘நீ ஊருக்கு உடனே கிளம்பிடு..

போயிட்டு அதே ஸ்பீடுல வந்துடு... ஷூட்டிங் இருக்கு’னு சொல்லி எனக்கு ஃப்ளைட் டிக்கெட் போட்டுக் கொடுத்தார். இன்னிக்கும் அவரோட தொடர்புல இருக்கோம். அவர் சென்னையில இருந்தா, போன் பண்ணுவார். அவர் குரூப்ல நடிக்கற அத்தனை காமெடி நடிகர்களும் ஒண்ணா உட்கார்ந்து டின்னர் சாப்பிடுவோம். 

நான் சினிமாவுக்கு வந்து 36 வருஷம் ஆச்சு. முன்னாடி இருந்த மாதிரி போட்டி, பொறாமைகள் இப்போ இல்ல. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யிறோம். இண்டஸ்ட்ரியும் ரொம்ப மாறியிருக்கு. முன்னாடியெல்லாம் டைரக்டர் செட்ல நுழைஞ்சாலே... எல்லாரும் பயந்து நடுங்குவாங்க.

இப்போ அப்படி இல்ல... ஒருத்தருக்கு ஒருத்தர் அண்டர்ஸ்டாண்டிங்கா இருக்காங்க. யங்ஸ்டர்ஸ் வர்றதும் சந்தோஷம். ஸ்பாட்டுக்கு ஹீரோ வர லேட் ஆச்சுன்னா, அசிஸ்டென்ட்ஸோட கிரிக்கெட் விளையாடுறார் டைரக்டர். இந்த மாதிரி எல்லாம் எங்களுக்குக் கொடுத்து வைக்கலை!’’ என்கிறவரின் பர்சனல் டீட்டெயில்ஸ்...

‘‘வொய்ஃப் பேரு அமுதா. பி.எஸ்சி., பி.எட்., எம்.எட். படிச்சிருக்காங்க. ஆனா, ஹவுஸ் வொய்ப்தான். ரொம்ப வருஷமா குழந்தை இல்லாம, இப்பத்தான் பொண்ணு பொறந்திருக்கா. பெயரு கிருஷ்ணஜெயந்திகா. 3 வயசு. இவ்ளோதான் என் ஃபேமிலி. தனி காமெடியனா ஆகணும்னு நான் ஆசைப்பட்டதில்லை. அதுக்கான முயற்சிகள்லயும் இறங்கினதில்லை. ஆனா, நிச்சயமா பண்ண முடியும். எனக்கு அதைக் கொடுக்கலாம்னு ஒரு டைரக்டர்தான் முடிவு பண்ணணும். நேரம் வரும்போது எல்லாம் அமையும். சினிமாவுல அது ரொம்ப முக்கியம் தலைவரே!’’

-மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்