த்ரிஷா இல்லேன்னா அஞ்சலி!



ஜெயம் ரவி காமெடி அவதாரம்

“எல்லாம் தெரிந்தவர்களை ‘அப்பாடக்கர்’னு சொல்வோம். எந்தச் சூழ்நிலையையும், நிலைமையையும் நின்னு ஜெயிக்கிற ஆளுன்னு கூட சொல்லலாம். அருமையான ஃபேமிலி டிராமாவை எனக்குப் பிடிக்கும்.

ஆக்க்ஷன், காமெடி, காதல், வில்லேஜ், சிட்டி, பாட்டுன்னு சரிவிகிதமாக அழகா கலந்துட்டா பிரச்னையே இல்ல. மனசையும், வசூலையும் அள்ளிட்டுப் போகும். அப்படியொரு கலவை தான் ‘அப்பாடக்கர்’. நிச்சயம் ஜெயிக்கிற குதிரை!’’ - உற்சாகமாகப் பேசுகிறார் டைரக்டர் சுராஜ்.

‘‘இன்னும் கொஞ்சம் கதை சொல்லுங்களேன்.’’‘‘ரசிகர்கள் விதவிதமான ரசனையோட இருக்காங்க. குழந்தைகளுக்குப் பிடிக்கற படம், பெரியவங்களுக்குப் பிடிக்காது. பெண்கள் ரசிக்கிற கதைகள் வேற, ஆண்கள் ரசிக்கிற ஆக்ஷன் வேற!

என்னோட இலக்கு, இவங்க எல்லாரும்! அப்படி கலகலப்பா, கலர்ஃபுல்லா இருக்கணும் ஒரு ஜாலியான கதை. ஊரில் வேலை வெட்டியே இல்லாம ரெண்டு பேர். அதில் ஒருத்தர்தான் நம்ம ‘அப்பாடக்கர்’ ஜெயம் ரவி. எந்தக் கஷ்டம் வந்தாலும் தப்பிச்சி வந்து தண்ணி காட்டுகிற ரவி, கடைசியா சிக்குவது காதலில்.

ஒண்ணுக்கு ரெண்டா சிட்டி பெண்ணையும் கிராமத்துப் பொண்ணையும் காதலிக்கிறவரா வர்றார் ரவி. கிராமத்துப் பெண்தானே, நாம சொன்னதை அஞ்சலி கேட்கும்னு காதலிக்க... அந்தப் பொண்ணு ரவியை படுத்துகிற பாடு, சுவாரஸ்ய எபிசோட். சிட்டி பொண்ணு த்ரிஷா ரவியை காதலிச்சு படுகிற அவஸ்தைகள்னு இன்னொரு எபிசோட். கடைசியா இந்த ரெண்டு பேர்ல அவர் யாரை கல்யாணம் பண்ணிக்கறார்ங்கறதுதான் பரபரப்பு க்ளைமேக்ஸ். ரவியை அழகு சாக்லெட் பையனா பார்த்திருப்பீங்க...

 காதலில் உருகித் தவிக்கிறதைப் பார்த்திருப்பீங்க... ஆனா, இதில் காமெடியில் பின்னுகிறார் ரவி. அவருக்கே ரஷ் பார்த்ததும் சந்தோஷம். அவரை ‘பேராண்மை’யில் பார்த்தால் வேற மாதிரி தெரியும்; காதல் கதைன்னு வந்துட்டா வேற வகை காட்டுவார். இதில் காமெடிக்குன்னே அவதாரம் எடுத்த மாதிரி இருக்கார்.

 நான் அவர்கிட்ட கதை சொல்லப் போனப்போ, கதையை கேக்கறதுக்கு முன்னாடியே ‘காமெடி கலந்தால் நல்லாயிருக்கும், ப்ளீஸ்’ன்னார். ‘நானே அப்படித்தான் வந்திருக்கேன்’னு சொன்னேன்.

தடதடனு ஆரம்பிச்சு இப்ப படம் நிறைவாகிற கட்டத்திற்கு வந்தாச்சு. நான் இதுக்கு முன்னாடி பார்க்காத நிறைய ஸ்டார் காம்பினேஷன் இதுல. தலை சிறந்த குணச்சித்திர நடிகர்கள் இருக்காங்க!’’

‘‘விவேக், சூரி... ரெண்டு பேருமே இருக்கிறது விசேஷமாச்சே!’’‘‘சூரியை இனிமே வெறும் நகைச்சுவை நடிகரா மட்டுமே பார்க்க முடியாது. அப்படி ரசிக்கிறவர்களை இதில் தெரியிற மாற்றங்கள் ஆச்சரியப்படுத்தும். அக்கறையோடு சூழ்ந்து, காமெடியை சீரியஸா பண்றதைப் பார்த்திட்டு சொல்றேன்.

ஏற்கனவே வடிவேலுவை வைத்து அருமையான காமெடிகளை செய்தவன் நான். சூரி, சினிமா தனக்குக் கொடுத்த இடத்தை நகாசு பண்ணி பிரமாதமா வந்துட்டார். அப்படியொரு பணிவு. ‘உங்களுக்கு கதை சொல்லணும் சூரி...

உங்க ஆபீஸ் முகவரி சொல்லுங்க... வந்திடுறேன்’னு சொன்னேன். ‘நல்லா இருக்கு. நீங்க வர்றதா? அடுத்த அரை மணி நேரத்துல நானே அங்க வர்றேன்’னு என் ஆபீஸுக்கே வந்துட்டார். 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்தவர், காமெடி நல்லா படமாகிட்டுப் போன அழகைப் பார்த்திட்டு, மேலும் 15 நாட்கள் கால்ஷீட் பிரிச்சுக் கொடுத்தார்.

 விவேக் சார் எனக்கு நல்ல நண்பர். ‘நல்ல ரோல் அண்ணே... நீங்க மொட்டை அடிச்சா சும்மா பின்னும்!’னு கொஞ்சம் சாவகாசமாதான் சொன்னேன். உடனே, ‘மொட்டை போடுறேன்’னு சொல்லிட்டு, அடிச்சுக்கிட்டார். என்ன இருந்தாலும் சீனியர் சீனியர்தான். சும்மா இல்லை... இரண்டு பேரின் அழிச்சாட்டியமும் படத்தில் பெரிய ரிலீஃப் ஏரியா!’’‘‘ஹீரோயின்ஸ் த்ரிஷா, அஞ்சலின்னு கொண்டு வந்திட்டீங்க...’’

‘‘சிட்டி பொண்ணுன்னா அதுக்கு த்ரிஷாதான் அருமையான சாய்ஸ். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், அஞ்சலியைப் பிடிக்க பட்ட பாடு கொஞ்சநஞ்சமில்லை. அவர் ஐதராபாத்தில் இருக்கிறதா சொல்றாங்க.

 போன் போட்டால், அடுத்தடுத்து போன் போய்க்கிட்டு இருக்கு. இதோ அவர் பேசுவார், பேசுவார்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. வரலை. திடீர்னு லைனில் வந்துட்டார். ஆனால், ‘இப்ப படங்கள் செய்றதில்லையே’னு சொன்னார். ‘கதையைக் கேட்டுட்டு வேணுமா வேண்டாமானு சொல்லுங்க’னு சொன்னேன்.

கதையையும், அவர் ரோலையும் கேட்டப்போ, ஆரம்பிச்ச சிரிப்பு அடங்காமல் ஓகே சொன்னார். ‘நான் திரும்பி வர இதுதான் சரியான படம்’னு அவர் சொன்னதுதான் எனக்குக் கூடுதல் சந்தோஷம். அஞ்சலி மாதிரி அருமையான ஆர்ட்டிஸ்ட் மிஸ் ஆவது எவ்வளவு பெரிய இழப்புன்னு இந்தப் படம் பார்த்தாலே தெரியும். அடுத்தடுத்து அவங்க இன்னும் பெரிய ரவுண்ட் வருவதற்கு நிறைய ஸ்கோப் இருக்கு. லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு.

பெரிய அளவில் இறங்கியிருக்காங்க. கேமராமேன் யு.கே.செந்தில்குமார். இசைக்கு தமன்... தெலுங்கில் அவர் இன்னமும் பிஸி. சூத்திரம் மாதிரி இல்லாமல் அவர் ட்யூன்கள் எளிமையா இருக்கு. அவர் பாடல்களைக் கேட்டால் ஒரு சுகம் இருக்கு. முக்கியமா அவர் இசையில் இருக்கிறது உயிர். ஒரு கலகலப்பான க்ளீன் என்டர்டெயின்மென்ட்டுக்கு உத்தரவாதம் ‘அப்பாடக்கர்’!’’

- நா.கதிர்வேலன்