கவிதைக்காரர்கள் வீதி




*அலைதல்
மரம் இல்லா தேசத்தில்
அலைகிறான் புத்தன்
இன்னும் சித்தார்த்தனாகவே.
- நூர்தீன், வலங்கைமான்.

*ஒட்டுதல்
விளையாடிக் களித்து
குளித்து முடித்து
கரையேறிய பின்பும்
மிச்சமிருக்கிறது,
உடல் முழுவதும்
கடல்.
- ஃபிர்தவ்ஸ்
ராஜகுமாரன், கோவை.

*அறுதல்
பிடித்துக்கொண்டு
ஏறத்தான் விழைகிறேன்
அறுந்து அறுந்து
விழுகிறது
மழைக்கயிறு!
- பாரியன்பன், குடியாத்தம்.

*அடித்தல்
குழந்தையைத்
தொட அனுமதிக்காத
குடையை
பொட் பொட்டென்று
அடித்தது மழை
- வஸந்த் பூபதி,
வெள்ளாங்கோவில்.

*வருதல்
எத்தனை வேண்டுதல்கள்
எவ்வளவு காணிக்கைகள்
கடவுளுக்கும் வரக்கூடும்
ரத்தக் கொதிப்பு!
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

*விடுதல்
இரவு
தன் கண்ணீர்த்துளியை
கதிரவன் காணும் விதமாக
புற்களின் மீது
விட்டுச் செல்கிறது.
- ப.மதியழகன்,மன்னார்குடி.

*தேடுதல்
ஓடும் நதிக்குள் 
என்ன தேடி மூழ்குவான்
அவ்வப்போது ஆதவன்?
- சந்திரா மனோகரன், செங்கோடம்பாளையம்.