வைத்தியம்



காலை மணி எட்டு.இரவெல்லாம் தூக்கமில்லை. குமட்டிக்கொண்டே இருந்தது. கண்களில் எரிச்சல்... விழித்தாலும் இமைகளின் பாரம் அழுத்தியது.நடு ஹாலில் மனைவியின் பேச்சுக் குரல் கேட்டது. ‘அடிப்பாவி... காலங்கார்த்தால போன் போட்டு வரவழைச்சுட்டாளோ!’இப்போது என்ன நடந்துவிட்டது? நேற்று நண்பர் வீட்டு ரிசப்ஷனில் கொஞ்சமாகக் குடித்துவிட்டேன். அதற்குள் என்னை பரம்பரைக் குடிகாரனாக நினைத்து இப்படி ஆளை வரவழைப்பாளோ!

இரவு வாந்தி எடுத்தபோது, ‘‘இருங்க, உங்களை காலையில பேசிக்கறேன்!’’ என அவள் சொன்னதை இப்போது நிறைவேற்றிவிட்டாளோ!எழுந்து ஹாலுக்குப் போனேன். வழியில் கடுகடு முகமாய் என் மனைவி. ‘‘என்னவாம்..?’’ என்றேன் ரகசியமாக.‘‘அவர் உங்ககிட்ட ஏதோ கேட்கணுமாம்’’ என்று மட்டும் சொன்னாள்.இவர் இதையெல்லாம் தட்டிக் கேட்டால் மானம் போகுமே. என்ன சொல்வது? யோசிக்க நேரமில்லை. ஹாலுக்கே வந்துவிட்டேன்.

‘‘வாங்க, எப்போ வந்தீங்க?’’ வந்தவரைக் கேட்டேன்.‘‘இப்போதான் மாமா. கல்யாணத்துக்கு அப்புறம் குடும்பத்தோட குலதெய்வக் கோயிலுக்குப் போகணும்னு வேண்டுதல். உங்களுக்கு லீவ் கிடைக்குமான்னு கேக்க வந்தேன். அவ்வளவு தான்!’’ - என் மகளைக் கட்டிய மருமகன் சலனமில்லாமல் சொல்லி முடித்தார்.எனக்கொரு அதிர்ச்சி வைத்தியம் தந்த புன்னகை என் மனைவிடம்!     

டி.வி.ராதாகிருஷ்ணன்