உனக்கு 60... எனக்கு 34..!



விநோத ரஸ மஞ்சரி

கலக்கல் காதல் காம்பினேஷன்

இங்கிலாந்து நாட்டின் கில்லிங்காம் நகரம். அங்கு வசிப்பவர் சாண்ட்ரா கல்லாகர். இவருக்கு வயது 60. ஏழு பிள்ளைகளைப் பெற்றவர். இவர்கள் மூலம் இவருக்கு 17 பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இன்னும் இரண்டு பேரக் குழந்தைகள் விரைவில் பிறக்கப் போகிறார்கள். ‘சரி, அதற்கென்ன’ என்கிறீர்களா? அறுபதிலும் காதல் வரும் என்பது சாண்ட்ராவின் விஷயத்தில் பலித்திருக்கிறது. சாண்ட்ராவின் பார்வை ரிச்சர்ட் ப்ரூம் எனும் இளைஞர் மேல் பதிய... கெமிஸ்ட்ரி தன் வேலையை ஆரம்பித்துவிட்டது. விளைவு... மன்மதன் அம்பு சாண்ட்ரா மீது பாய, ரிச்சர்ட் மேல் தீவிர காதல் கிளர்ந்துவிட்டது.

காதல் தரும் இம்சையை எத்தனை நாள் மறைக்க முடியும்? தன் உண்மைக் காதலை ரிச்சர்டிடம் சாண்ட்ரா வெளிப்படுத்த, ரிச்சர்டுக்கு ஆச்சரியம் + அதிர்ச்சி. ‘பார்த்தா பிடிக்காது... பாக்கப் பாக்கத்தான் பிடிக்கும்’ என்ற தனுஷ் வாக்கியம் பொய்யாகுமா? நாளடைவில் ரிச்சர்டுக்கும் சாண்ட்ரா மீது காதல் பொங்கியது.

ரிச்சர்டுக்கு வயது ஜஸ்ட் 34தான். அதுமட்டுமல்ல... ரிச்சர்டின் அம்மாவான இனாவுக்கு தன் வருங்கால மருமகளை விட ஒரு வயதுதான் அதிகம்!‘‘நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கும் மேலாக காதலிக்கிறோம். திருமண நாளுக்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்!’’ என்கின்றனர் ரிச்சர்டும் சாண்ட்ராவும் உற்சாகமாக. வரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ளப் போவதாக இவர்கள் அறிவித்துள்ளனர். ரிச்சர்டுக்கும் இது நல்ல டீல்தான்.

காரணம், சினிமா நடிகராகும் கனவோடு இருக்கும் அவருக்கு வேலைக்குப் போய் சம்பாதிக்கவெல்லாம் விருப்பம் இல்லை. ஸோ, இதன் மூலம் அவருக்கு பொருத்தமான நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது.

‘‘நான் எனது 8வது குழந்தையை ரிச்சர்ட் மூலம் பெற்றுக்கொள்ள மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன்!’’ என்று கண் சிமிட்டுகிறார் சாண்ட்ரா. அப்படிப் பெற்றுக்கொண்டால், இங்கிலாந்தில் ஒரு வயதான பெண்ணுக்குப் பிறந்த குழந்தையாக அது இருக்கும்.அந்தக் குழந்தை பிறக்கும்போதே 19 பேருக்கு சித்தப்பாவாக அல்லது சித்தியாகப் பிறக்கும்!

- பிஸ்மி பரிணாமன்