பொய்



பக்கத்து குடிசைக்குப் போன என் மனைவி கையில் மூடிய கிண்ணத்துடன் திரும்பிவரும்போது கருவாட்டுக் குழம்பு வாசனை கம கம. எனக்குப் புரிந்து விட்டது.அந்த வீட்டிலிருந்து இதை வாங்க வேண்டிய அவசியமே இல்லை.

அவர்கள் பிழைப்புக்காக வெளியூரிலிருந்து வந்தவர்கள். கணவர் வாய் பேச முடியாத மனிதர். மனைவி, இரண்டு பிள்ளைகளோடு பிழைப்பு தேடி வந்தவர்களுக்கு ஊர்ப் பெரிய மனிதர் தன் வீட்டிற்குப் பக்கத்தில் இடம் கொடுத்து, பிழைப்பும் கொடுத்திருக்கிறார். பிள்ளைகள் அரசாங்கப் பள்ளியில் படிக்கிறார்கள்.

ஓட்டு வீட்டுக்காரி குடிசைக்குள் போய் குழம்பு வாங்கி வருகிறாளென்றால்?!   ‘‘என்னடி?’’ என அதட்டினேன்.‘‘ச்சூ! கம்முன்னு வாங்க...’’ என்று என்னை அடக்கியபடி அடுப்படிக்குச் சென்றாள்.
‘‘ஏன் இப்படி பண்றே?’’ என விடாமல் பின் சென்று கேட்டேன். ‘‘பாவம்ங்க அவங்க. ஆட்டுக்கறி விக்கற விலையில வாங்கிச் சாப்பிட முடியுமா? நம்ம வீட்டுல இன்னிக்கு மட்டன் குழம்பு. சும்மா கொடுத்தால் என்ன நினைப்பாங்களோ!

அதான் ‘பசங்களுக்குக் கொடுங்க’ன்னு நம்ம குழம்பைக் கொடுத்துட்டு, ‘எனக்குக் கருவாட்டுக் குழம்பு பிடிக்கும்’னு பொய் சொல்லி அவங்க குழம்பை வாங்கி வர்றேன்’’ என்ற மனைவி மனசுக்குள் மடமடவென உயர்ந்தாள். கருவாட்டுக்குழம்பு எனக்கும் மணத்தது.

காரை ஆடலரசன்