காதலால் கொலை செய்வோர்!



‘ஆதலால் காதல் செய்வீர்’ என்று கவிதையாய் வாழ்த்தும் மரபில் வந்தவர்கள் காதலால் கொலை செய்கிறார்கள் இன்று! தினேஷ், தனியார் வங்கியில் அதிகாரி. குடும்பத்தில் ஒரே ஆண் பிள்ளை.

அயனாவரம் தலைமைச் செயலக காலனியில் அவ்வளவு நல்ல பெயர் தினேஷுக்கு. இன்று அவரைக் கொலையாளி ஆக்கிவிட்டது காதல். யாருமில்லா நேரத்தில் தன் காதலி அருணாவை வீட்டுக்கு வரவழைத்த தினேஷ், துள்ளத் துடிக்கக் கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

விருத்தாசலத்தைச் சேர்ந்த சந்தோஷ் பொறியியல் பட்டதாரி. பள்ளி நாளிலேயே அவருக்கும் அனுசுயாவுக்கும் காதல். படிப்பு முடிந்து அரசு வேலை கிடைத்து அனுசுயா கிருஷ்ணகிரி சென்று விட, காதலில் பிரேக். அனுசுயா விலகுவதை உணர்ந்த சந்தோஷ், தன் மீதும் அனுசுயா மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, அவரைக் கட்டிப்பிடித்தபடி தீ வைத்துக் கொண்டார். சாலையின் நடுவில் பற்றியெரிந்த அந்த ஜோடியைக் கண்டு பதறிவிட்டது கிருஷ்ணகிரி.

சென்னையிலும், கிருஷ்ணகிரியிலும் மட்டுமல்ல... தமிழகமெங்கும் இப்படியான கொடூரங்கள் தொடர்கதை. பிரிவை, புறக்கணிப்பை, தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் நொடிப்பொழுதில் இவர்கள் வக்கிர மனிதர்களாக மாறிப் போவது ஏன்? இணையற்ற அன்பும், ஈடற்ற நம்பிக்கையும்தானே காதல்... கொத்திக் குதறி, தீ வைத்து எரித்துச் சிதைக்கும் அளவுக்கு எங்கிருந்து வருகிறது வன்மம்?

‘‘இயற்கையான எந்த உணர்வையும் வெளிப்படையாக உணர்த்த நம் பிள்ளைகளுக்கு நாம் கற்றுத்தருவதில்லை. அதன் விளைவுதான் இந்தக் கொடூரங்கள்’’ என்கிறார் நிர்மலா கொற்றவை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்காக குரல் கொடுத்துவரும் கொற்றவை, ‘பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வாதத்துக்கு எதிரான அமைப்பின்’ தலைவர்.

‘‘காதலைப் புனிதத்தன்மை மிக்க வணிகப் பொருளாக மாற்றியிருக்கின்றன நம் சினிமாக்கள். காதல் உணர்வு என்பது குறிப்பிட்ட வயதின் உந்துதலில் ஏற்படும் இயல்பான உணர்ச்சி என்பதை நாம் உணரவில்லை. அது அதிபயங்கரமான கலாசாரச் சீரழிவாகப் பார்க்கப்படுகிறது. ஆணோ, பெண்ணோ குடும்பத்தில் அமர்ந்து, ‘நான் இவரை விரும்புகிறேன்’ என்று சொல்ல முடியாது. குடும்பத்தில் சிறிதளவும் நட்புணர்வு இல்லை. அதனால், நட்புகளை வெளியிலும் இணையத்திலும் தேடுகிறார்கள் இளைஞர்கள்.

சிறிய புறக்கணிப்பைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத பிள்ளைகளைத்தான் நாம் வளர்த்து வருகிறோம். நினைத்தது கிடைக்காதபோது, ‘தனக்கில்லாதது பிறருக்கும் கிடைக்கக்கூடாது’ என்ற எண்ணம் தலைக்கேறி விடுகிறது. அதற்கான தண்டனையை வழங்கி, தானே நீதிபதியாக முனைகிறார்கள். அல்லது சேர்ந்து தற்கொலை செய்துகொண்டு புனிதராகி விட முயற்சிக்கிறார்கள். இது வளர்ப்புக்குறை. நம் எல்லோருக்கும் இந்தக் குற்றத்தில் பங்கிருக்கிறது’’ என்கிறார் கொற்றவை.

‘‘இதுபோன்ற சம்பவங்கள் ஒரு தாயாக என்னைப் பதற்றத்தில் ஆழ்த்துகிறது’’ என்கிறார் சாந்தகுமாரி. இந்தியப் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர்.‘‘இதில் தொடர்புடைய யாரும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் அல்ல. நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பணியில் இருப்பவர்கள். கணநேர மனச் செயலிழப்புதான் அவர்களை குற்றவாளியாக்குகிறது. நாம் பிள்ளைகளுக்கு எதையுமே சரிவரக் கற்றுத்தருவதில்லை.

பள்ளி களும் மனப்பாட எந்திரமாகவே அவர்களை வார்த்து வெளியில் தள்ளுகிறது. ஒரு சிக்கலான சூழலை எப்படி சமாளிப்பது? மன அழுத்தத்திலிருந்து எப்படி வெளிவருவது? தோல்வியை எப்படித் தாங்கிக் கொள்வது? இதையெல்லாம் குழந்தைகள் எங்கேயும் அறிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு பெண்மீது ஒரு ஆணுக்கு ஈர்ப்பு வருகிறது என்றால் அது குறிப்பிட்ட வயதில் ஒரு இயல்பான நிகழ்வு. ஆனால் அந்தக் குழப்பத்தை அவர்கள் பெற்றோரிடம் விவாதிக்க முடியாது. நண்பர்களை நாடுகிறார்கள். 10ல் 6 நண்பர்கள் தவறான வழிகாட்டிகளாக இருக்கிறார்கள்.

இந்த இடைவெளியை பெற்றோர் நிரப்பினால் குழந்தை தடுமாறாது. டைனிங் டேபிளில் அமர்ந்து, ‘இந்தப் பெண்ணை நான் காதலிக்கிறேன்’ என்று சொல்வதற்குரிய ஜனநாயகம் இருந்தால், அவன் தவறான வழிகாட்டலுக்கு உள்ளாக மாட்டான். காதல் இலக்கியங்களை பெருமையாகப் பேசிக்கொண்டு, பாடநூல்களில் காதல் பாடல்களை வைத்துக்கொண்டு, சினிமா, ஊடகங்கள் என சுற்றியிருக்கும் அனைத்திலும் காதலை பெருமையாகப் பார்த்தும் பேசிக் கொண்டுமிருக்கிற சமூகம், எதார்த்தத்தில் காதலை மறுதலிப்பதுதான் சிக்கலின் தொடக்கம்’’ என்கிறார் சாந்தகுமாரி.

ஆண்களின் இதுபோன்ற ஆதிக்க மனநிலையை ‘இம்பள்சிவ் பிஹேவியர்’ என்று வகைப்படுத்துகிறார் மனநல மருத்துவர் அபிலாஷா. ‘‘உடம்பு, மனம் இரண்டுமே இன்று இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. வேலைச்சூழல், உணவுமுறை, வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக எல்லோருமே இங்கு மன அழுத்தத்தோடுதான் வாழ்கிறார்கள். எளிதாக கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள். மது எளிதாகக் கிடைக்கிறது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கூட மறைவுச் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன. மனமும் உடலும் ஒருங்கிணைந்து செயலாற்றாதபோது நிதானமின்மை ஏற்படும். தனக்கு சாதகமில்லாத எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்மம் தலையெடுக்கும்.

இளைஞர்கள் தங்களை எல்லோரும் தனித்து கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆண்களுக்கென்று பியூட்டி பார்லர்கள், ஜிம்கள் பெருகியதெல்லாம் இதன் விளைவுதான். உடம்பில் இருந்து உடை வரைக்கும் ஒரு தனித்தன்மை அவசியமாக இருக்கிறது. ஹீரோயிசம் எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. காதலில் தோல்வி யென்றால் போதைக்கு அடிமையாவது அல்லது காதலியைக் கொல்வது... இவற்றைத்தான் நம் சினிமாக்கள் முன்மொழிகின்றன. அதை இளைஞர்கள் வழிமொழிகிறார்கள்.

அப்பாவின் அதட்டலுக்கு அடங்கிப் போகிற பையன், சர்வசாதாரணமாகக் கொலை செய்து உடலை மூட்டையில் கட்டி தூக்கிப் போட முனைகிறான். தன்னிலை உணரும் வரை அவனுக்கு அது தவறென்றே தெரியாது. ‘அவள் தவறு செய்தாள், என்னை ஏமாற்ற முனைந்தாள், தண்டனை கொடுத்தேன்’ என்று நியாயம் பேசுவான். காதலை நாம் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம்.

 காதல் எல்லையற்ற அன்பால் ஆனது. எதிர்பார்ப்பற்ற நம்பிக்கைதான் அதன் உள்ளடக்கம். ஆதிக்கத்துக்கும், ஆயுதத்துக்கும் ரத்தத்துக்கும் அங்கே துளியும் இடமில்லை. இன்று 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட ‘காதலிக்கிறார்கள்’. ரத்தத்தில் கடிதம் எழுதுவது, சூடு வைத்துக் கொள்வது போன்ற பைத்தியக்காரத் தனங்களில் ஈடுபடுகிறார்கள்.

கண்காணிப்பற்ற வளர்ப்பு முறை, கண்மூடித்தனமான கட்டுப்பாடு என பெற்றோரின் பிழைகளே இதற்கெல்லாம் காரணம். ‘யாருக்காக சம்பாதிக்கிறீர்கள்’ என்றால் ‘பிள்ளைக்காக’ என்பார்கள். ஆனால் பிள்ளைகளின் எதிர்பார்ப்பே வேறு.

அவர்களுக்கான செல்வத்தை அவர்கள் சம்பாதித்துக் கொள்வார்கள். நீங்கள் ததும்பத் ததும்ப அன்பு காட்டுங்கள். எல்லாவற்றையும் பேசுங்கள். புரிய வையுங்கள். மென்மையாகக் கண்காணியுங்கள். சினிமா, இன்டர்நெட், மொபைல் என அவர்களுக்கு தவறுகளைப் போதிக்க நிறைய உபகரணங்கள் அருகிலேயே இருக்கின்றன.

நீங்கள் சரியானதைச்சொல்லிக் கொடுக்காவிட்டால் அவர்கள் தவறுகளைக் கற்றுக்கொள்வார்கள்’’ - எச்சரிக்கையோடு முடிக்கிறார் அபிலாஷா. நீங்கள் சரியானதைச் சொல்லிக் கொடுக்காவிட்டால் அவர்கள் தவறுகளைக் கற்றுக்கொள்வார்கள்!

- வெ.நீலகண்டன்