யாரோ வீசியெறியும் குப்பைக்கு எங்க சந்ததி அழியணுமா?



அலட்சிய அரசு அவதியில் மக்கள்

“அரை மணி நேரம் இங்கே உக்காந்து பாருங்க... வாந்தியே வந்துடும். எங்களுக்கு இந்த நாத்தம் பழகி, நாசி மரத்துப் போச்சு.  மழைக்காலத்துல இருக்கவே முடியாது... அவ்வளவு நாத்தம்! வெயில் நாள்ல குப்பையை கொளுத்தி விட்டுடுவாங்க. நாத்தத்தோட சேர்ந்து  புகையும் கிளம்பிரும். இந்தக் குடியிருப்புல நிறைய பேருக்கு ஆஸ்துமா இருக்கு. ஹார்ட்ல பிரச்னை இருக்கு. புள்ளைங்க மந்தபுத்தியோட  பெறக்குது. நிறைய பேருக்கு புள்ைளயே பிறக்கலே. எவ்வளவோ போராடிப் பாத்துட்டோம்... யாரும் ஏன்னு கூட கேக்க  மாட்டேங்குறாங்க!’’



- கண் கலங்கப் பேசுகிற விஜயலட்சுமிக்கு 20 வயதுக்குள்தான் இருக்கும். கொடுங்கையூர், ராஜரத்தினம் நகரில் குப்பை மேட்டுக்கு நேரெதிரே  வீடு. வீடெங்கும் நிறைந்து விளையாடுகின்றன ஈக்கள். ‘‘இன்னா பாக்குறே... நாலு வாயி சாப்புட்டா பத்து ஈயும், அஞ்சு கொசுவும் சேந்து  உள்ளே போயிரும். இந்தப் புள்ளையப் பாரு... உடம்பு முழுவதும் தடிச்சுக் கிடக்கு. இன்னா கடிச்சுச்சுன்னே தெரியலே. எந்த நோவா  இருந்தாலும் இங்கேதான் உற்பத்தியாவும். எங்களை ஒரு கை பாத்துட்டுத்தான் சிட்டிக்குள்ள வரும். இந்த நாத்தத்தையும், புகையையும்  தாக்குப் பிடிக்காம நிறைய பேரு போய் சேந்துட்டாங்க. யாரோ வீசியெறியும் குப்பைக்கு எங்க சந்ததி அழியணுமா..?’’ - கோபமும்  விரக்தியுமாகக் கேட்கிறார் துரை.



‘‘ஆஸ்பத்திரிக் கழிவு, ஆட்டுத்தொட்டிக் கழிவை எல்லாம் அப்படியே கொண்டாந்து கொட்டிட்டுப் போயிருவாங்க. நாய்ங்க இங்க  இழுத்துவந்து போட்டுரும். ஆட்டுத்தோலு, மாட்டுத்தோலு, ஏன்... கொஞ்ச நாள் முன்னாடி ஒரு குழந்தையோட காலைக் கூட  கொண்டுவந்து போட்டுச்சு. ஆஸ்பத்திரி வேனுங்க வந்தாலே நாத்தம் அதிகமாயிரும். ஊசி, கத்தி, பஞ்சு, கெட்டுப் போன மாத்திரைங்களை  எல்லாம் எங்க வூட்டுப் புள்ளைங்க எடுத்தாந்து வெளையாடுதுங்க. அதுங்களுக்கு என்னென்ன வியாதிங்க வரும்னே தெரியல...’’ -  பதற்றமாகப் பேசுகிறார் கஸ்தூரி.

சென்னையின் அவமானங்களில் ஒன்றாக விரிந்து கிடக்கிற கொடுங்கையூர் குப்பைமேட்டை ஒட்டி வாழும் 20 ஆயிரம் பேரின் குமுறல்  இதுவாகத்தான் இருக்கிறது. சுமார் 900 ஏக்கர் என்கிறார்கள். மொத்தத்தையும் குப்பை தின்று செரித்து விட்டது. ஐந்தாறு கிலோ மீட்டருக்கு  முன்பே காற்று அவஸ்தையான வாடையேறி வருகிறது. மேலும் மேலும் குவிகிற குப்பைகளை என்ன செய்வதென தெரியாமல் தீ வைத்து  அழிக்கிறார்கள். ஆபத்தான மருத்துவக் கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் பிளாஸ்டிக் போன்ற ரசாயனங்களும் புகையாக மாறி அந்தப்  பகுதியை விஷக்காடாக ஆக்குகிறது.

விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள். அவை 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தினமும்  சராசரியாக 5000 முதல் 7000 மெட்ரிக் டன் குப்பை சென்னையில் சேர்கிறது. அவற்றை அப்படியே அள்ளிச் சென்று கொடுங்கையூர்,  அம்பத்தூர், பெருங்குடியில் கொட்டுகிறார்கள். தேனாம்பேட்டை, அடையாறு, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் குப்பை அகற்றும்  பணியை ஒரு தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. பிற பகுதிகளில் மாநகராட்சியே இந்தப் பணியைச் செய்கிறது. உலகெங்கும் திடக்கழிவு மேலாண்மை லாபம் தரும் வரமாகப் பார்க்கப்படும் நிலையில், சென்னைக்கு மட்டும் அது சாபமாக இருக்கிறது. சுயநலம் மிக்க,  தொலைநோக்குத் திட்டமில்லாத நிர்வாகிகள், எல்லாவற்றையும் பணமாக்கத் துடிக்கிற இடைத்தரகர்கள், அக்கறையின்மையும் அலட்சியமும்  நிறைந்த அதிகாரிகள் என இந்த நிலைக்கு பல காரணிகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

‘‘176 சதுர கிலோ மீட்டரா இருந்த சென்னை, விரிவுபடுத்தப்பட்ட பிறகு 426 சதுர கிலோ மீட்டரா மாறிடுச்சு. மக்கள்தொகை கிட்டத்தட்ட  ஒரு கோடி. ஆனாலும் அதற்குத் தகுந்த மாதிரி துப்புரவுத் தொழிலாளர்கள் இல்லை. 30 வருஷம் முன்னாடி எத்தனை பேர் இருந்தாங்களோ  அவ்வளவு பேர்தான் இப்பவும். மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெளிவான துப்புரவுக் கொள்கை இல்லை. 603 சதுர கி.மீ பரப்பு கொண்ட  மும்பை மாநகராட்சியில் தினமும் 4000 டன் குப்பைதான் உருவாகுது. ஆனால் 30 ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் இருக்காங்க. 426 சதுர  கி.மீ பரப்பு கொண்ட சென்னையில் 5000 டன்னுக்கு மேல் குப்பை சேருது. வெறும் 11 ஆயிரம் தொழிலாளர்கள்தான் இருக்காங்க. மொத்தக்  குப்பையில் 70% மக்கும் குப்பை. இதை திட்டமிட்டுச் செய்தால் ‘ஜீரோ வேஸ்ட்’டாக மாற்ற முடியும். இதிலிருந்து எரிவாயு தயாரித்தால்  சென்னையில் இருக்கும் அத்தனை சத்துணவு மையங்களுக்கும் பயன்படுத்த முடியும். மின்சாரம் தயாரித்தால் 10 மண்டலங்களுக்கு  போதுமானதாக இருக்கும். கேரளாவின் ஆலப்புழை மாநகரம், குப்பை மின்சாரத்தில்தான் ஒளிருது. தமிழகத்தில் சின்னச் சின்னதா இந்த  வேலைகள் நடக்குது. சென்னை மாநகராட்சி எந்த முயற்சிக்கும் தயாராயில்லை.

குப்பை உருவாகுற இடத்திலேயே அதைத் தரம் பிரிச்சு முடிவுக்குக் கொண்டு வர்றதுதான் இன்று உலகம் முழுக்க இருக்கிற நடைமுறை.  ஆனா, அதைச் செய்யாம தெருவுல தொகுப்பு மையங்கள் உருவாக்குறாங்க. எல்லா திட்டங்களும் தோல்வி. இதில மிக மோசமான  உள்நோக்கம் இருக்கு. குப்பை மேலாண்மையை அப்படியே தனியார் கையில தூக்கித் தரணும். அதுக்கு ‘மாநகராட்சியால குப்பையைக்கூட  சரியா அள்ள முடியல’ன்னு மக்களை நம்ப வைக்கணும். அதுதான் நடக்குது. தனிநபர்களோட சுயநலத்துக்காக சென்னை மக்களோட  ஆரோக்கியத்தை பலி கொடுக்கிறது நல்லதில்லை...’’ என்கிறார், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த ஜார்ஜ். கொடுங்கையூர் குப்பைக்  கிடங்கில் தினமும் 2300 டன் குப்பையைக் கொட்டுகிறார்கள். பெருமளவு நிலம் நாசமாகி விட்டது. பெரம்பூர் தொடங்கி எழில் நகர்,  கண்ணகி நகர், அண்ணா நகர், கவியரசு கண்ணதாசன் நகர் வரை ஏராளமான குடியிருப்புகளை நோய்க்காடாக மாற்றிவிட்டது இந்தக்  குப்பைக் கிடங்கு. இதைச் சீரமைக்கவோ, மேம்படுத்தவோ அதிகாரிகளிடம் எந்த மாற்றுத்திட்டமும் இல்லை. கொட்டிக் கொண்டே  இருக்கிறார்கள். மாநகராட்சியில் பழி வாங்க வேண்டிய அதிகாரிகளை இந்தக் குப்பைக் கிடங்குக்கு மாற்றி தண்டனை தருகிறார்கள்.

அம்பத்தூரில் அதிகாரிகளின் அலட்சியத்துக்கும், அக்கறையின்மைக்கும் சான்றாக எழும்பி நிற்கிறது குப்பை மலை. நிறைய நிபுணர்கள் இதை  அசைத்துப் பார்த்து விட்டார்கள். வளர்ந்து கொண்டுதான் இருக்கிறதே ஒழிய தேய்ந்தபாடில்லை. இப்போது, மேலும் வளராமல் தடுக்க  அங்கிருப்பதை அள்ளி கொடுங்கையூருக்கும், பெருங்குடிக்கும் பார்சல் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெருங்குடி குப்பைக்கிடங்கும்  குடியிருப்புகளுக்கு மத்தியில்தான் இருக்கிறது. நடக்க முடியாத அளவுக்கு நாற்றம் குடலைப் பிடுங்குகிறது. சென்னை மாநகராட்சி இழைத்த  பெருங்கொடுமை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை குப்பைகளால் அழித்ததுதான். ‘வாட்டர் பேசின் ஆஃப் சென்னை’ என்று பெயர் பெற்ற  அற்புதமான நீர்ப்பிடிப்பு பகுதி அது.

‘‘பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னையின் தாய் மாதிரி. கிட்டத்தட்ட 5500 ஹெக்டேர் பரப்பு கொண்டது. இப்போது வெறும் 500  ஹெக்டேர்தான் மிஞ்சியிருக்கிறது. பெரும்பகுதியை குப்பை தின்று விட்டது. மீதமுள்ளவற்றை ஆக்கிரமிப்புகள் அழித்து விட்டன. இந்த  நிலப்பரப்பே பஞ்சு மாதிரி இருக்கும். மழை நீரை வெளியேற விடாமல் தேக்கி வைத்துக்கொள்ளும். அதனால் அந்தப்பகுதி முழுவதிலும்  வற்றா நீர் கிடைக்கும். அதை இழந்ததால், இன்று எத்தனை அடி தோண்டினாலும் கழிவுநீர்தான் வருகிறது...’’ என்று வருந்துகிறார்  எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல். கொடுங்கையூர், பள்ளிக்கரணை பகுதிகளில் அரசு சார்பில் வெளிப்படையாக இதுவரை எந்த  ஆய்வும் நடக்கவில்லை. பல்வேறு தனியார் அமைப்புகள் ஆய்வு செய்ததில் ஏராளமான விபரீதங்கள் வெளியாகி உள்ளன. பெரம்பூர்  சட்டமன்ற உறுப்பினர் சவுந்தர்ராஜன் கொடுங்கையூரில் குடியிருந்தபோது அவரது வீட்டிலேயே ஒரு ஆய்வை மேற்கொண்டார். அவர்  மனைவியே குப்பைப் புகையால் பாதிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள் தோழர்கள். சவுந்தர்ராஜன் இந்த விபரீதத்தை சட்டமன்றத்திலும் பதிவு  செய்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. நாற்றத்திலும், புகையிலும், கொசுவிலும், நோயிலும், ஈயிலும் சிக்கித் தவிக்கிற அப்பாவி மக்கள்  பற்றி கவலைப்பட அரசுக்கு நேரமில்லை.

ஏன் குப்பை நிர்வாகத்தில் அரசு பாராமுகமாக இருக்கிறது? அதற்குப் பெரிய பின்னணி இருக்கிறது. பொன் முட்டையிடும் வாத்தாக  இருக்கிறது குப்பை. எல்லாவற்றிலும் பணம். பலனடைபவர்கள் குப்பைப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர விடாமல் அக்கறையாக  பார்த்துக் கொள்கிறார்கள். அதுபற்றி அடுத்த வாரம் அலசுவோம்...

சுவாசத்தில் கலக்கும் விஷம்!

இந்தியாவின் மிக அபாயகரமான சுற்றுச்சூழல் சிக்கலைக் கொண்ட பகுதிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது கொடுங்கையூர். பல தன்னார்வ  அமைப்புகள் இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. கார்பன்-டை-சல்பைடு என்ற கொடூர ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட  5 மடங்கு அதிகமாக இப்பகுதி மக்களின் சுவாசத்தில் கலக்கிறது. இதனால் வயிற்று உபாதைகள், சிறுநீரகம் மற்றும் ஈரலில் காயம்,  மலட்டுத்தன்மை, நரம்புக்கோளாறுகள் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். அக்ரோலின், குளோரோ மீத்தேன், அசிட்டோன்,  டியூட்டோன், பென்சீன், டொலுவின், டை குளோரோ பென்சீன், டி.லிமினேன் போன்ற ஆபத்தான ரசாயனங்களும் அளவு கடந்து இருப்பது  தெரிய வந்துள்ளது. குப்பையில் இருந்து உருவாகும்  ‘லீச்சட்’ எனப்படும் கசிவுநீர், மிகுந்த விஷத்தன்மை மிக்கது. மழைக்காலத்தில் நீரோடு  நீராக அதுவும் குடியிருப்புகளை நிறைத்து விடுகிறது. ‘‘இப்பகுதிகளில் ஏராளமான சுவாச நோயாளிகள் இருக்கிறார்கள். மாதந்தோறும்  நான்கைந்து பேர் இதய நோயால் உயிரிழக்கிறார்கள். அரசு இப்பகுதிகளில் ஒரு மருத்துவ முகாம் கூட நடத்த மறுக்கிறது...’’ என்று  வருந்துகிறார் ராஜரத்தினம் நகரைச் சேர்ந்த துரை.

விபத்துகள் ஏராளம்!

இந்தியாவில் அதிக விபத்துகள் நடக்கும் நகராக சென்னையை மாற்றியதில் குப்பை அள்ளும் வாகனங்களுக்கு மிகுந்த பங்குண்டு.  மாநகராட்சி வாகனங்கள் தவிர ஏராளமான ஒப்பந்த வாகனங்களும் இப்பணியில் ஈடுபடுகின்றன. போதிய அளவில் மெக்கானிக்குகள்  இல்லாததாலும், வாகனங்களை சரிவர பராமரிக்காததாலும், தகுதிபெற்ற ஓட்டுனர்களை பணியில் அமர்த்தாததாலும் குப்பை வாகன  விபத்துகள் அதிகமாகி வருகின்றன. ஒப்பந்த டிரைவர்களுக்கு மிகக்குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. தவிர, பணி நேரமும்  வரையறுக்கப்படுவதில்லை. அதனால் மிகுந்த மன உளைச்சலுடனே பணிக்கு வருவதாகச் சொல்கிறார்கள் ஓட்டுனர்கள். ஓட்டுனர்களின் மன  அழுத்தத்தைக் குறைக்க ஓராண்டுக்கு முன்பு யோகா, தியானப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதையும் இப்போது நிறுத்தி விட்டார்கள்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்