கைமண் அளவுசமீபகாலமாக எதிர்பாராத நாட்களில், எதிர்பாராத நேரங்களில் எல்லாம் கோவையில் போக்குவரத்து நெருக்கடி. அது வாகனத்தில்  போவோருக்கு மட்டும்தான் என்றில்லை, எம்மைப் போல நடந்து போகிறவருக்கும்தான். அதற்கு நாம் மாநகராட்சி அதிகாரிகளை,  காவல்துறை அதிகாரிகளை, பொதுப்பணித்துறை அதிகாரிகளை குற்றம் காண இயலாது. அவர்கள் அனைவருமே திறமைசாலிகள், மக்கள்  நலன் பேணுகிறவர்கள், ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்று சிந்தித்திருப்பவர்கள். அவர்களுக்கு நாளுக்கு 24 மணி நேரம்  போதவில்லை. பலர் கைக் காசு செலவிட்டு அல்லும் பகலும் பணி செய்து கிடப்பவர்கள் என்பதில் எவருக்கும் இரண்டு பேச்சு இருக்க  இயலாது.அண்மையில் மலையாள சாகித்ய உல்சவம் ஒன்றில் கலந்துகொள்ள கேரளத்தினுள் நுழையும்போது வாளையார் செக் போஸ்ட் தாண்டினோம்.  செக்போஸ்ட் எல்லை தாண்டியதுமே கருமேக மூட்டமும் சரம் சரமாய்ப் பொழியும் மழையும். ‘‘ஆனாலும் பாருங்க இந்த மழைக்கு  ஓரவஞ்சனையை... கேரள எல்லை வரைக்கும் பெய்து கொண்டாடுது... தமிழ் நாட்டுக்குள்ளே நுழைய மாட்டேங்குது!’’ என்றேன். காரில்  என்னுடன் பயணித்த விஜயகுமார் குன்னிசேரி என்னும் விகடகவி சொன்னார், ‘‘மழை எப்பிடிங்க செக் போஸ்ட் தாண்ட முடியும்? லஞ்சம்  கொடுக்க அதன் கையில் காசுண்டோ?’’ என்று. மலையாளிகள் எப்போதுமே தமிழன் மாரைத் துச்சமாகக் கருதுகிறவர்கள் என்பதால் நாமதைப்  பொருட்படுத்த வேண்டாம்.

எதிர்பாராத விதமாகப் பண்டிகைகள் வந்து சேர்கின்றன. எதிர்பாராத விதமாகக் கோயில் திருவிழாக்கள் நடக்கின்றன - குடமுழுக்கு,  பூச்சாட்டு, குண்டம் என. எந்த முன்னறிவிப்பும் இன்றி மழை பொழிகிறது. மழைக்குத் தெரியுமா வானிலை அறிக்கை பற்றி எல்லாம்! எந்த  முன்னேற்பாடும் இன்றி ரயில்வே மேம்பாலம், சாலைச் சந்திப்பு மேம்பாலம் கட்ட ஆரம்பித்து அது ஐந்தாண்டுத் திட்டம் போல நடக்கிறது.  யாரையும் கேட்காமல் முகூர்த்த நாட்கள் வந்து விடுகின்றன. ஒரு முகூர்த்தப் பட்டு எடுக்க அறுபது, எழுபது பேர் வந்து துணிக்கடை  வாசலிலும் உணவு விடுதி வாசலிலும் காத்துக் கிடக்கிறார்கள்.  

ஆழ்குழாய்ச் சாக்கடைகள் அமைக்க நீண்ட நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் தோண்ட வேண்டியதிருக்கிறது. வளர்ச்சிப் பணிகளைத்  தாமதிக்க இயலுமா? திடீர் என கேரளத்தில் இருந்து பாலக்காடு மார்க்கமாக, ஊரைக் காலி செய்கிறார்களோ எனும் விதத்தில் சாரிசாரியாக  வாகனங்கள் கோவைக்குள் புகுந்து உதகைக்குப் பயணிக்கின்றன. சபரிமலை சீசன் என்றால் ஆந்திர, கர்நாடக, தமிழ்நாட்டு வெள்ளம்  திசைமாறி கேரளத்துக்கு கோவை வழியாகவும் பயணிக்கின்றது. சில பொழுதுகளில், முழு நிலா நாளில் கிரிவலம் நடக்கும்  திருவண்ணாமலை போல் தெரிகிறது கோயம்புத்தூர்.

இருசக்கரதாரிகள், சொந்த ரதம் வைத்திருப்பவர், திரிசக்கரக் கொடுங்கோலர்கள், கால் டாக்சிகள் தோதான தெருக்கள், குறுக்குச் சந்துகள்  எனப் பயன்படுத்தி போர் முனையில் இருந்து தப்பித்து ஓடிவிடுகிறார்கள். பெரும்பாடு பேருந்துப் பயணிகளுக்கும் சரக்கு  வாகனங்களுக்கும்தான். என் வசிப்பிடத்தில் இருந்து கோவை காந்திபுரம் வருவதற்கு நகரப் பேருந்தில் நாற்பது நிமிடங்களுக்கு மாற்றாக,  சமயங்களில் ஒன்றே கால் மணி நேரம் எடுக்கிறது. நானொரு எளிய மனிதன். காரணமின்றி என் வாழ்நாளில் தினமும் போக வர ஒன்றரை  மணி நேரம் களவாடப்படுவதில் எனக்கு வழக்கில்லை. அரசு ஊழியர்களுக்கு போய்ச் சேர்ந்த நேரமே அலுவலக நேரம். ஆனால், தனியார்  நிறுவனப் பணியாளர்கள், தொழிலாளிகள், கடைகளில் வேலை செய்வோர், தொழிற்சாலைகளில் வருகைக்கு கார்டு பன்ச் செய்கிறவர், பள்ளி  மாணவர், நோயாளிகள், முதியவர் பாடு பெரும்பாடு! அதனால் என்ன? வல்லரசுக் கனவில் தேசம் திரும்பி நிற்கும்போது சில்லறைக்  கவலைகள் நம்மைத் தின்னத் தகுமோ?

நகர் மண்டபத்துக்குப் பயணச்சீட்டு வாங்கி இருப்போம். ‘‘டவுன் ஹால் எல்லாம் போகாதுங்க, ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிக்குங்க’’  என்பார் நடத்துநர். ரயில்வே ஸ்டேஷனுக்குப் பயணச்சீட்டு வாங்கி இருந்தால், ‘‘சுங்கம் வழியாப் போகுது சார்’’ என்பார். நமக்கு ேவறு  மார்க்கம் இல்லை... வெயிலில், புகையில், தூசியில், வியர்வையில் சில கிலோமீட்டர் நடப்பதைத் தவிர! இதில் அரசுப் பேருந்து நடத்துநர்,  ஓட்டுநரை நாம் கடிந்து கொள்ள இயலாது. அவர் நெருக்கடி அவருக்கு. சந்தேகம் இருந்தால் அரசுப் போக்குவரத்துப் பணியாளருமான  எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் நாவல் ‘நெடுஞ்சாலை’ வாசித்துப் பாருங்கள்; ‘தமிழினி’ வெளியீடு.

ஆனால் தனியார் துறை பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மக்களைப் படுத்தும் அலைக்கழிப்பை அரசியல்வாதிகள், அதிகாரிகளின்  மக்கள் விரோதச் செயல்பாடுகளுக்கு ஒப்பிடலாம். முரட்டுத்தனமான பேச்சு, ஆபாசமான சைகைகள்... எங்கு வேண்டுமானாலும் பயணிகளை  இறக்கி விடுவார்கள். விரையும் போக்குவரத்து நெரிசலில், நடுச்சாலையில் வண்டியை நிறுத்தி, இறங்க அவசரப்படுத்துவார்கள். பெண்களும்  வயோதிகர்களும் விழாத குறையாக பதற்றப்பட்டு இறங்குவார்கள். யாரும் தட்டிப் பேச இயலாது. பேருந்து உடைமையாளர்களின் வேர்கள்,  கோட்டை வரைக்கும் பரவிப் படர்ந்திருக்கலாம்.

பெரும்பாலும் இளைஞர்களே நடத்துநர்களும் ஓட்டுநர்களும். அண்மையில் நகர் மண்டப நிறுத்தத்தில் ஒரு அனுபவம். நகர் மண்டப  நிறுத்தமே ஆனாலும், நடைபாதையின் பாதி இடம் வரை கடைக்காரர்களின் அபகரிப்பு. காத்திருப்பவர் காலடியில் கொட்டப்பட்டிருக்கும்  அடுமனைகளின் குப்பைகள். நரகத்தில் பாவம் செய்தவர்களை வறுக்க என கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிகள் வைத்திருப்பார்களாம்... அது  போல எந்நேரமும் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெய்ச் சட்டிகள். அதில் வறுபட்டுக் கொண்டே இருக்கும் எந்த தேசத்தைச் சார்ந்ததென  அறிய முடியாத பலகாரங்கள். புகை, தொண்டைக் கமறல், இருமல். நிழலைப் பயன்படுத்தி நின்று கொண்டிருக்கும் பழ வண்டிகள்.  வெயிலில் பேருந்துகளுக்குக் காத்துக் கிடக்கும் பயணிகள். இவை யாவும் மேயர்வாளும் ஆணையர் சார்வாளும் அடிக்கடி வாகனங்களில்  பயணம் செய்யும் அலுவலக வாசலின் காலெட்டும் தூரத்தில்.

கோவையில் கால் நூற்றாண்டாக வசிக்கும் நான், கூடுமானவரை தனியார் பேருந்துகளில் ஏறுவதில்லை என்ற முடிவில் இருப்பவன்.  காதடைக்கும் காமப் பாடல்கள், நெரிசல், ஒழுக்கம் இல்லாத மொழி, நிறுத்தத்தில் பொழுதுக்கும் நின்று கிடக்கும் பேருந்து எனப் பற்பல  காரணங்கள். என்றாலும் நமக்கிருக்கும் நெருக்கடிகள், முன் தீர்மானங்களை உடைத்தும் விடுகின்றன. நான் காத்திருந்த அந்தப் பொழுதில்,  பேருந்துகள் ரயில் நிலையம் வழியாகப் போகுமா எனத் தெரியாது. ‘‘தம்பி, ரயில்வே ஸ்டேஷன் போகுமா?’’ என்றேன் கண்டக்டர்  சிறுவனிடம். ‘‘போகும்யா... ஏறு மொதல்லே!’’ என்றான் சிறுவன்.

நாம் தமிழ்நாடு அரசுப் பரிசு, கலைமாமணி, சாகித்ய அகாதமி விருது, கண்ணதாசன் விருது, அமுதன் அடிகள் விருது, கனடாவின் வாழ்நாள்  சாதனைக்கான இயல் விருது எல்லாம் பெற்றவன். இந்தியா முழுக்கவும், உலகின் பல நாடுகளும் சுற்றியவன். முப்பத்தைந்து நூல்கள்  எழுதியவன். மூத்த எழுத்தாளர் எனும் பெத்த பேரு பெற்றவன் என்பதை எல்லாம் அவன் அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.  அதுவென் மனக்குறையும் இல்லை. ஆனால் தன்னைவிட ஐம்பதாண்டுகள் மூத்தவன் எனும் அறிவு கூடவா இருக்காது?
என் கதையைப் பொருட்படுத்த வேண்டாம், நானொரு எளிய தமிழ் எழுத்தாளன். பேருந்தினுள் எனக்கு முன்னால் ஒருவர் நின்றிருந்தார்.  எழுபத்தைந்துக்கும் மீறிய முதியவர் மாத்திரம் அல்ல, இயலாதவர். கையில் ஒரு கட்டைப் பை நிறைய சாதனங்கள். வேட்டியை மடித்துக்  கட்டியிருந்தார். கசங்கிய அரைக்கைச் சட்டை. தோளில் துண்டு. தள்ளாமை உடைய முதியவர்.

‘‘ஐயா, சுங்கம் போகுதுங்களா?’’ என்றார் நடத்துநரைப் பார்த்து. மூர்க்கத்துடன் இருந்தது சிறுவனின் மறுமொழி... ‘‘இறங்குய்யா! கேட்டு ஏற  மாட்டியா? சுடுகாட்டுக்கெல்லாம் பஸ் போகாது!’’ நடு மதியம்தான். பேருந்தினுள் நெரிசல்தான். போக்குவரத்து நெருக்கடிதான். தாமதமான  பயணச் சூழல்தான். எல்லாம் சரிதான். எனினும் எளிய, முதிய, ஏழைக் குடிமகனை மனிதனாகக் கூடப் பொருட்படுத்தாமல், முதுகில் கை  வைத்துத் தள்ளினான் படிக்கட்டை நோக்கி. பெரியவர் ஏதோ பெரும் பாதகம் செய்த மருட்சியுடன் தள்ளாடி இறங்கிப் போனார்.  
எனது ஆச்சரியம், தனியார் பேருந்து நடத்துநர் எவரும் எம்.பி.ஏ பட்டதாரி அல்ல. ஐ.ஐ.டி பட்டதாரிகளும் இல்லை. ஒரு முனிசிபல்  கவுன்சிலர் மகன் அல்லது அரசாங்கத்தில் இளநிலை எழுத்தர் மகன் வருவாரா இந்தப் பணிக்கு? அவர்களும் சமூகத்தின் அடித்தட்டு  மாந்தர்தான். பிறகேன் சக மனிதர் மீது பரிவோ, அனுதாபமோ இல்லாமற் போகிறது?  

கதையொன்று சொல்வார்கள் மேடைதனில். வட்டாட்சியர் வீட்டு நாய் செத்தால் கூட்டம் கூட்டமாகப் போவார்களாம் ஊழியர்கள், துக்கம்  கேட்டு. தொண்டை அடைக்க, கண்கள் கசிய விசாரிப்பார்களாம். ஆனால் அந்த வட்டாட்சியரே செத்துப் போனால் ஈ, காக்கை கூடக் காணக்  கிடைக்காதாம். கற்பனை செய்து பார்த்தேன். சினிமாவில் எளிய வேடம் தரிக்கும் நடிகர் ஒருவர் பேருந்தில் நுழைந்தால் - கடவுளால்  ஆசீர்வதிக்கப்பட்ட அவர்கள் நுழைய மாட்டார்கள். எனினும் கற்பனைதானே! - என்ன நடக்கும்? இதுதான் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த  தமிழன் பண்பாடு!

இந்தக் கோளாறில், முதியவர்களை மதித்து ஆகப் போவதென்ன என்று நினைக்கிறது சமூகம்! ‘சோத்துக்குச் செலவு, பூமிக்குப் பாரம்!’   தினமும் இருமுறை எனது பேருந்துப் பயண வழித்தடத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய, பட்டீசுவரம் எனப் புகழ்பெற்ற, பேரூர் எனும்  சிவத்தலம் குறுக்கிடும். சில சமயம் அங்கே இறங்கிப் பேருந்து மாறுவேன். கோயிலை ஒட்டியே பேருந்து நிறுத்தம். அன்று அங்கே  இறங்கியபோது, சோர்ந்த நடையில் தெரிந்த முகம் ஒன்று. எழுபத்தைந்து வயதிருக்கும். பதினைந்து நாள் தாடி. காவி வேட்டி - வெள்ளை  அரைக்கைச் சட்டை. எங்கே  பார்த்தோம் என்று  நினைவு நதியில் துழாவினேன். எனக்கும்தானே வயதாகிறது! சற்றுக் கூர்ந்து கவனித்ததில் -  உண்மையில் நாங்கள் தீவிர இலக்கியவாதிகள் அவதானித்ததில் என்றே எழுத வேண்டும் - புலனாயிற்று. எங்கள் நிறுவனம் கணக்கு  வைத்திருந்த வங்கியில் மூத்த மேலாளராக இருந்தவர். மனிதனாகவும் இருந்தவர்.

‘‘என்ன சார் இப்படி?’’ என்றேன் அதிர்ச்சியில். அவர் பக்கம் சென்று கைகளைப் பற்றினேன். மெலிதாகச் சிரித்தார். எப்போதும் வாய்விட்டுச்  சிரிப்பவர்தான்.

‘‘வாங்க டீ குடிப்போம்!’’ என்றார்.

‘‘என்ன சார் ஆச்சு? இப்பிடிப் பரதேசிக் கோலம்?’’ என்றேன்.

கொஞ்சம் சாலையை வெறித்தார். கண்கள் கலங்கினாற் போலவும் முகம் சற்றுக் கோணினாற் போலவும் இருந்தது.
‘‘வீட்டுக்காரி போயிட்டா... ஆறு வருஷம் ஆச்சு! ரெண்டு பொண்ணுங்க... ஒருத்தி மிச்சிகன்லே... ஒருத்தி ஆர்ம்ஸ்டர்டாம்லே...’’
அதற்குமேல் ஒரு கதாசிரியனுக்கு சொல்லத் தேவை இல்லை. வடவள்ளியில் அவர் வீடு. மருதமலையில் இருந்து வடவள்ளி,  தொண்டாமுத்தூர், பேரூர் வழியாகக் கோவைப் புதூர் வந்து ஈச்சனாரி போகும் பேருந்து ஒன்று உண்டு. தம்பி முருகனில் தொடங்கி அப்பன்  சிவனைக் கண்டு அண்ணன் விநாயகனைத் தரிசிக்கலாம். மூன்றுமே முக்கியமான இறைத் தலங்கள். சும்மா ஏறி உட்கார்ந்து பயணச்சீட்டு  வாங்கி, போய்த் திரும்பினால் நான்கு மணி நேரம் செத்துவிடும்.

சாய் போடத் தெரிந்திருக்கலாம். சமைக்கவும் தெரிந்திருக்கலாம். வாசிப்புப் பழக்கம் உண்டென்றும் இசை கேட்பதில் நாட்டம்  உண்டென்றும் அறிவேன். ஆனால், அவை எல்லாம் போதுமா... உறங்கும் ஐந்து மணி நேரம் தவிர்த்து மீதி நேரம்
கொல்ல? சேமிப்பு இருக்கும், ஓய்வூதியம் வரும், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து வரும் அன்புப் பொழிவுக்குப்  பங்கமில்லை.

‘‘உடம்பைப் பாத்துக்கங்கப்பா... வேளைக்குச் சாப்பிடுங்கப்பா... மாத்திரை மறக்காம எடுத்துக்குங்கப்பா... வாக்கிங் போங்கப்பா... ரெகுலரா  பிரஷர், சுகர் செக் பண்ணுங்கப்பா... எதானாலும் கூப்பிடுங்கப்பா... வச்சிரட்டாப்பா...’’ மேலும் சில யாண்டுகள் சென்று, கால்கள் சற்றுத்  தள்ளாடும்போது, நெரிசலான நகரத் தனியார் பேருந்தில் அவரைக் கற்பனை செய்து பார்த்தேன். முட்டிக்கொண்டு வந்தது அழுகை. அந்த  நாளுக்கு நானும் வெகு தூரத்தில் இல்லை. இறைவனிடம் எதை யாசித்து நின்றிருப்பார் அவர்? மக்கள் நல்வாழ்வை? உடல்நலத்தை?  வெள்ளைக் குதிரையில் மேக மூட்டங்களுக்கு நடுவே பூந்தென்றல் தழுவுவது போலொரு மரணத்தை?

அப்படியும் இப்படியும் ஆன சகல முதியோர்களிடமும் கருணையற்று இருக்கிறார்கள் சக மனிதர்கள்? கோவையில் தொண்டாக, மிக மிக  நியாயமான விலையில் மிக மிக ருசியான உணவு படைக்கும் நிறுவனம் ஒன்றுண்டு. அவர்களுக்கு பெட்ரோல் பங்கும், பெரிய அளவிலான  மருந்துக்கடையும் மருத்துவ ஆலோசனை மையமும் உண்டு. அவர்கள் உணவு விடுதியில் இருபத்தைந்து ரூபாய்க்கு திருத்தமான, சூடான,  சுவையான மதிய உணவுக்கு வரிசையில் நின்றிருப்பார்கள் மக்கள். உணவருந்தும் கூடத்தில் ‘முதியோருக்கு இலவசம்’ என்று தனிப்பிரிவு  உண்டு. அங்கு எவரும் விலையில்லா உணவுக்காக நின்றிருப்பதில்லை. காரணம், முதியவர்கள் கோருவது அன்பையும் ரவணைப்பையும்தான்.  இலவசங்கள் கூட வேண்டாம். ஆனால் மரியாதையையும் பரிவையும் சமூகம் அவர்களுக்கு மறுக்கிறது.

ஊரில் சொல்வார்கள், ‘பழுத்தோலையைப் பார்த்து குருத்ேதாலை சிரிக்கிறது’ என்று. பெரும்பாலும் அனைத்து முதியவர் உள்ளத்திலும் ஏக்கம்  ஒன்று முளைத்துப் படர்ந்து கிளைத்து வளர்ந்து பூத்துக் காய்த்துக் கனிந்து உதிரலாம். ‘மணிச்சித்திர தாழ்’ என்ற, மோகன்லாலும் சுரேஷ்
கோபியும் ஷோபனாவும் நடித்த மலையாளப்படத்தில் தமிழ்ப் பாடல் ஒன்றுண்டு. குந்தளவராளி ராகத்தில், ‘ஒரு முறை வந்து பார்த்தாயா?’  என்று. கல்யாணி ராகத்தில் பாபநாசம் சிவன் எழுதிய பாடல் ஒன்றும் கர்நாடக இசைவானில் கேட்கக் கிடைக்கும். பாடுபவர் பாடிக் கேட்க  வேண்டும்.

‘உன்னையல்லால் வேறே
கதி இல்லை அம்மா!
உலகெலாம் ஈன்ற அன்னை
உன்னையல்லால் வேறே கதி இல்லை’ என்று.

மரணத்துக்கான காத்திருப்பு அன்றி வேறேதும் செய்ய ஏலாத ஒற்றைத் தனியன்கள் ஆணும் பெண்ணுமாய் பல மொழி பேசும் எத்தனை  கோடிப் பேர் இருப்பார்கள் இந்திய வளநாட்டில்? ‘யாத்திரைப் பத்து’ பகுதியில் மாணிக்க வாசகர் பாடுகிறார்... ‘தாமே தமக்குச் சுற்றமும்  தாமே தமக்கு விதிவகையும், யாமார் எமதார் பாசமார் என்ன மாயம்?’ என்று! தாமே தமக்கு உறவினர்கள். தாமே தமக்கு ஆணையிடும்  அதிகாரி. நாம் யார்? எமதென்று எவருளர்? நம்மைப் பிணிக்கும் கட்டுக்கள் என்ன? என்ன மாயங்கள் இவை எல்லாம்?
சைவத் திருமுறை சொல்வது போல், ‘தந்தை போனார், தாயார் போனார், தாமும் போவார்’.

வாழ்க்கை என்பது என்றும் நிரந்தரமான குத்தாட்டம் அல்ல. செல்வம் கொய்து சேர்க்கும் சூதாட்டம் அல்ல. இறுதியில் ஒரு காலாட்டமும்  உண்டெனத் தெளிவீர் உலகத்தீரே! சக மனிதனிடம் சற்றுக் கருணை காட்டுங்கள். எல்லோருக்கும் காது மந்தமாகும், பல் விழுந்து மொழி  குழறும், கண் பார்வை குன்றும், முடி நரைக்கும், உடலும் உள்ளமும் தளரும். இன்று வட்டத்தை, மாவட்டத்தை, மாநிலத்தை ஆளுகிறோம்  எனத் தினவெடுத்து, ஆடாத ஆட்டம் ஆடினாலும் நாளை காட்டைத்தான் ஆளவேண்டியது இருக்கும்!

"தனியார் துறைப் பேருந்து ஓட்டுநர்களும்  நடத்துநர்களும் மக்களைப் படுத்தும் அலைக்கழிப்பை அரசியல்வாதிகள்,  அதிகாரிகளின் மக்கள்  விரோதச் செயல்பாடுகளுக்கு ஒப்பிடலாம்."

"இறைவனிடம் எதை யாசித்து நின்றிருப்பார்  அவர்? மக்கள் நல்வாழ்வை? உடல்நலத்தை? வெள்ளைக் குதிரையில் மேகமூட்டங்களுக்கு  நடுவே பூந்தென்றல் தழுவுவது போலொரு மரணத்தை?"

"வாழ்க்கை என்பது என்றும் நிரந்தரமான  குத்தாட்டம் அல்ல. செல்வம் கொய்து சேர்க்கும் சூதாட்டம் அல்ல. இறுதியில்  ஒரு  காலாட்டமும் உண்டெனத் தெளிவீர் உலகத்தீரே!

- கற்போம்...