ஐந்தும் மூன்றும் ஒன்பது



இந்திரா சௌந்தர்ராஜன் / ஓவியம்: ஸ்யாம்

“ஜோசப் சந்திரன் சொன்னதைக் கேட்டு நான் என் அதிர்ச்சியை வெளிப்படுத்தினேன். அவருக்கும் அது புரிந்தது.
‘என்ன கணபதி... என் பதில் வியப்பை அளிக்கிறதா?’ என்று கேட்டார்.
‘ஆம்’ என்றேன்.
‘அந்த வியப்பைக் கடந்து விடுங்கள். வியப்பு ஏற்படுகிறது என்றாலே நாம் அதன் முன் சிறிதாகி விட்டோம் என்று பொருள்.  அதேவேளையில், எந்த ஒரு விஷயமும் தொடர்ந்து வியப்பளிக்காது. முதல் முறை மட்டுமே வியப்பு ஏற்படும்’ என்று பதற்றமே இல்லாமல்  மிக சரளமாகப் பேசினார்.
நான் திரும்ப அந்த தங்க விஷயத்தைத் தொடத் தொடங்கினேன். ‘அங்கே சித்தர் நடமாட்டமும் இருக்கிறது, தங்கமும் இருக்கிறது என்றால்  முரணாகத் தெரிகிறதே’ என்றேன்.
‘எப்படி’ என்று கேட்டார்.
‘சித்தர்கள் துறவிகளைப் போன்றவர்கள். அதாவது முற்றும் துறந்தவர்கள். அவர்களுக்கு எதற்கு தங்கம்? அதைப் பிறர் தெரிந்து கொண்டு  விடாதபடி ஏன் அவர்கள் தடுக்க முயற்சி செய்ய வேண்டும்?’ என்றேன்.
‘ஒரு கோணத்தில் இது நல்ல கேள்வி. அவர்கள் சூட்சுமமாக அங்கே திரிகிறார்கள். ஸ்தூல உடம்பு போல சூட்சும உடம்பு என்று ஒன்று  இருக்கிறது. அந்த உடம்புக்கு ஏற்றதாக அந்த இடத்தின் தட்பவெப்பம் இருக்கலாம். அதைக் கடந்து பூகோள ரீதியாகவும் கோள்கள்  சம்மந்தமாகவும் ஏதாவது காரணங்கள் இருக்கலாம்’ என்றார் அவர்.
‘எப்படி இப்படி எல்லாம் இவரால் யோசிக்க முடிகிறது?’ என்று எண்ணிய நான், அதைக் கேட்கவும் செய்தேன். அதற்கு அவர் சொன்ன  பதிலில் மேலும் பல ஆச்சரிய அதிர்ச்சிகள் எனக்கு ஏற்பட்டன.



‘சித்த புருஷர்கள் பல வகைகளில் தங்களையே வென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் எல்லாவிதங்களிலும் நம்மிலிருந்து வேறுபட்டவர்கள்.  அவர்களது பல இயல்புகள் நம்மைப் போன்றதாக இராது. அவர்கள் உடம்பின் ‘ஆரா’வும் இதனால் நம்மிலிருந்து மிக வேறுபட்டது.  இதனால் பஞ்ச பூதங்களில் நிலம் எனும்  பூதத்திடம் எங்கே அபரிமிதமான சக்திப்பாடு உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு, அங்கே தங்கள்  இருப்பிடத்தை அமைத்துக் கொள்வார்கள். அவர்களின் பஞ்ச பூத அறிவு அசாதாரணமானது. அதனாலேயே போகர் எனும் சித்தர் பழநிமலை  மேல் முருகனின் நவபாஷாண சிலையை உருவாக்கினார். பழநிமலையில் முருகன் சன்னதி உள்ள இடத்தின் மேல் மார்ஸ் எனப்படும்  செவ்வாய்க் கிரகத்தின் கதிர்வீச்சு ஒரு சராசரி அளவுக்கு மேலாக பட்டுத் தெறிக்கிறது.

அப்படி ஒரு இடத்தில் நவபாஷாணம் எனும் ஒன்று இருக்க, அந்த பாஷாணத்தோடு கதிர்வீச்சு கூடி, அதனால் அந்தக் கதிர்வீச்சானது மாறும்  ஒரு அமைப்பு அங்கே ஏற்படுகிறது. அவ்வாறு அங்கே முருகன் வடிவில் நவபாஷாணம் இடம்பெறாது போனால், அந்த மலையைச் சுற்றி  உள்ள பாகங்களில் நாம் உணர முடியாத அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு, அது ஒருவித தீமையாகக் கூட அமையலாம். அதுபோல  கஞ்சமலையின் அந்தப் பகுதியும் பூகோள ரீதியாக ஒரு சிறப்பிடமாக சூட்சும சித்தர்களுக்கு உகந்திருக்கலாம்’ என்று ஜோசப் சந்திரன்  பழனிமலை வரை போய் விட்டார்.’’ - கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...



பெட்டியைத் திறந்து பார்த்ததில் நல்லவேளையாக உள்ளிருந்த பொருட்களுக்கு ஒரு சிறு சேதமும் இல்லை. ‘அப்பாடா’ என்கிற பெருமூச்சு  எல்லோரிடமிருந்தும் வெளிப்பட்டது. அனந்தகிருஷ்ணனுக்கோ அந்தப் பெட்டிக்குள் இருப்பவை நொறுங்கி நாசமாகப் போயிருக்கக் கூடாதா  என்று தோன்றியது. ‘‘குட்டி... இனி ஒரு நிமிஷத்தைக் கூட விரயம் பண்ணாதே! முதல்ல இந்தப் பெட்டியோட வீட்டுக்குப் புறப்படு.  ஏடுகளை தனித்தனியா ஸ்ேகன் பண்ணி கம்ப்யூட்டர்ல பக்காவா சேவ் பண்ணிடு. அதுக்குள்ள நான் வந்துடுவேன்னு நம்பறேன். வள்ளுவர்  இங்க என் கூட இருக்கட்டும். நாம ஏடுகளில் உள்ள குறிப்புகளை வெச்சு முதல்ல காலப்பலகணி உள்ள இடத்தைக் கண்டுபிடிப்போம்.  அதன் பிறகு அங்க போய் அதை நெருங்குவது பற்றி முடிவு செய்யலாம்...’’ என ப்ரியாவிடம் படபடப்பாகப் பேசினார் கணபதி  சுப்ரமணியன்.

‘‘ஓகே தாத்தா... நீ சொன்னதுதான் சரி. இதை முதல்ல நாம் டிஜிடலைஸ் பண்ணிடணும். அப்புறம் இந்த ஏட்டுக்கு ஏதாவது ஆனாலும்  கவலையில்லை...’’ ப்ரியா சொன்ன கருத்தை வள்ளுவர் மறுப்பது போல பார்த்தார். அதை ப்ரியா கவனித்தாள்.

‘‘என்னய்யா! நான் தப்பா சொல்லிட்டேனா?’’
‘‘ஆமாம்மா. ஏடுகள் பத்திரமா இருக்கறது ரொம்ப முக்கியம். உள்ளே இருக்கற பாடல்கள், அதன் கருத்துகள் எல்லாமே ரொம்ப சக்தி  வாய்ந்தவை. இந்த நேரத்துல நான் சில நுட்பமான விஷயங்களை சொல்ல விரும்பறேன். ஏடுகளுக்குள்ள இருக்கற எந்திர வரைவும், அதை  இயங்க வைக்கற மந்திர வரைவும் சாதாரணமில்லை.

அந்த எந்திர - மந்திர வரைவை எழுதினவங்க, ஒரு சரியான காலகட்டத்துலதான் அதை எழுதியிருப்பாங்க. நினைச்ச நேரத்துல நாம பேனா  எடுத்து பேப்பர்ல எழுதற மாதிரியான ஒரு விஷயமல்ல அது. குறிப்பா ஜோதிடக்கணக்கு இதுக்குப் பின்னால இருக்கு. எந்த நாளா  இருந்தாலும், மதிய நேரமான 12 மணி காலப் பொழுதுக்கு ‘அபிஜித் முகூர்த்த காலம்’னு பேர். இந்த நேரத்துல தொடங்கப்படற செயல்கள்  வெற்றியா முடிவடையும். அதே போல இந்த அபிஜித் முகூர்த்த காலத்துல சில சமயங்கள்ல நாள், நட்சத்திரம், திதி... இதெல்லாமும்  வெற்றிக்கு உகந்ததாகக் கூடி வரும்.

இப்படி எல்லாம் கூடி வரும் காலத்துல தொடங்கப்படுகிற விஷயங்களும் மிகப் பெரிய வெற்றியை அடையும். இந்த மாதிரி அபூர்வ  ஏடுகளை எழுதறவங்க, நிச்சயம் இப்படிப்பட்ட கால கட்டத்தைத் தேர்வு செய்துதான் இதை எழுதியிருப்பாங்க. அப்படி எழுதி முடிச்ச  நொடியில இருந்தே அதோட சக்தி செயல்பட ஆரம்பிச்சிடும். எப்படி ஒரு டி.வி. ரிமோட்ல பட்டனை அழுத்தினதும், மின்சக்தி கண்ணுக்குத்  தெரியாத அலைகளா மாறி டி.வி.க் குள்ள புகுந்து அதை இயங்கச் செய்யுதோ, அதே மாதிரிதான் இந்த ஏடுகளும் இயங்குது...’’ - என்ற  வள்ளுவரிடம் வர்ஷன் வேகமாக ஒரு கேள்வியை முன் வைத்தான்.

‘‘அய்யா... ரிமோட்ல மின்சக்தியைத் தருகிற பேட்டரி இருக்கு. அந்த சக்தியும் நாம அதை இயக்கும்போதுதான் செலவாகுது. அந்த பேட்டரி  தீர்ந்துட்டா அந்த ரிமோட்டும் வேலை செய்யாது. இங்க அந்த மாதிரி எதுவுமில்லையே..?’’ - என்றான். ‘‘தம்பி! காளிதாசன்னு ஒரு கவிஞன்...  போஜராஜன்னு ஒரு அரசன். இவங்க இரண்டு பேரும் ரொம்ப நெருக்கமான நண்பர்கள். இதுல காளிதாசன் காளியோட அருளால கவிஞன்  ஆனவன். அவன் சொற்களுக்கு மந்திர சக்தி உண்டு. காளிதாசன் மட்டுமில்ல... நல்ல கவிதைகள் படைக்க முடிஞ்ச கவிஞர்கள் அவ்வளவு  பேருக்குமே பெரும் சக்தி உண்டு. அதனால கவிஞர்கள் மனம் நோக நடந்துக்க மாட்டாங்க! அவங்க நம்ம மேல கோபப்படாதபடியும்  பாத்துப்பாங்க.

எதுக்கு சொல்றேன்னா, காளிதாசனும் போஜனும் ஒருநாள் விளையாட்டா பேசிக்கும்போது, ‘நண்பா! நான் உனக்கு முன்னால இறந்துட்டா நீ  என் நினைவா இரங்கற்பா எனப்படுகிற சரம கவிதை பாடுவேதானே’ன்னு கேட்க, காளிதாசனும் ‘இப்ப எதுக்கு அந்தப் பேச்
சு’ன்னு சொல்றான். ‘இல்ல, நீ பதில் சொல்லு’ன்னு அழுத்தம் கொடுக்கிறான் போஜன். ‘நிச்சயம்  பாடுவேன்... அதாவது எழுதுவேன்’னு  சொல்றான். ‘அப்படி நீ பாடினா அதை நான் கேட்க முடியாது இல்லையா’ன்னு போஜன் திருப்பிக் கேட்க, ‘ஆமாம்’னு சொல்றான்  காளிதாசன்.

‘அதனால நான் உயிரோட இருக்கற இப்பவே நான் செத்துட்டதா நினைச்சுப் பாடு’ன்னு சொல்றான் போஜன். காளிதாசனோ,  ‘முடியாது’ங்கறான். ஏன்னா சரம கவிதைங்கறது இறந்தவர்களுக்கு மட்டுமே எழுதப்படுவது. அது பொய்யாகவே ஆகாது. உயிரோடு  இருக்கும்போது பாடினா, பாடினது உண்மையாகி போஜன் உயிர் போயிடும். அதனால காளிதாசன் ‘முடியாது’ங்கறான். இந்த விஷயம்  விவகாரமாகி காளிதாசனை நாட்டைவிட்டே துரத்தறான் போஜன். காளிதாசனும் போஜன் உயிரோட இருந்தா போதும்னு நாட்டை விட்டு  வெளியேறுகிறான். ஆனாலும் போஜன் தந்திரமா தான் இறந்துட்டதா காளிதாசனை நம்ப வெச்சு சரம கவிதை பாட வைக்க, கடைசில  அதைக் கேட்காமலே நிஜமா போஜன் இறந்தும் போனான்.

இது வரலாறு, தம்பி! ஒரு கவிதைக்கே கொல்லும் சக்தி இருக்குங்கறதுக்கு ஒரு சான்று இது. இதோட மாறுபட்ட வடிவம்தான் அறம் பாடி  கொல்லுதல்ங்கற விஷயங்கள். இந்தப் பாடல் வரிகளுக்குள்ளயே நீ குறிப்பிடற பேட்டரி மின்சாரம் ஒளிஞ்சிருக்குப்பா. அதுமாதிரிதான் இந்த  ஏடுகளும்... இதுக்குள்ள உள்ள எந்திர வரைவும்...’’ என்றார் வள்ளுவர்.

‘‘இந்த போஜன் - காளிதாசன் கதை ஒரு புனைகதையா இருக்கலாம் இல்லையா?’’
‘‘இதுக்கு மேலே என்னால உனக்கு விளக்கம் தர முடியாது. அமானுஷ்ய விஷயங்களை ஏதாவது ஒரு இடத்துல நம்பத் தொடங்கினா  மட்டுமே அதைக் கொஞ்சமாவது புரிஞ்சுக்க
முடியும்!’’
‘‘போதும்... இப்படி விவாதம் பண்ணிக்கிட்டு போனா காரியம் கெட்டாலும் கெட்டுடும். இதுவரை நடந்த அமானுஷ்யங்களை  அடிப்படையா வச்சு, இதை நம்பி நாம காரியத்துல இறங்குவோம்.  இனி ஒரே எய்ம்தான். அது அந்த காலப்
பலகணி!’’  என்றாள் ப்ரியா.
பின் இருவரும் புறப்பட்டனர். அனந்தகிருஷ்ணன் அவர்களோடு இணைந்துகொள்ள, வள்ளுவர் மட்டும் கணபதி சுப்ரமணியனோடு  ஆஸ்பத்திரி யிலேயே தங்கி விட்டார்.
அவர்கள் வெளியேறியதும் கணபதி சுப்ரமணியன் கேட்டார், ‘‘என்ன வள்ளுவரே! நாம் அதை கண்டுபிடிச்சிடுவோமா?’’
‘‘நிச்சயமா! அதுல என்ன சந்தேகம்?’’
‘‘நீங்க இன்னிக்கு உயிரோட இருக்கறதே உங்க வரையில ஒரு ஆச்சரியமான விஷயம்தானே?’’
‘‘ஆமாம்... அந்தக் காலப்
பலகணியில அதுக்கு நிச்சயம் விடை இருக்குன்னும் நான் நம்பறேன்!’’
‘‘அது மட்டுமா? எவ்வளவோ விஷயங்களை நாம தெரிஞ்சிக்கப் போறோம். குறிப்பா ‘இந்தியா வல்லரசாகுமா’ங்கற கேள்விதான் என்  வரையில பிரதானம்!’’
‘‘காசுக்கு தண்ணி வாங்கற நிலை வந்துடுச்சுங்களே... இதை மாத்தற மாதிரி இந்த நாடு தண்ணிப் பிரச்னை இல்லாம இருக்குமாங்கறது என்  கேள்வி...’’
‘‘நம்ம தேசத்துல எங்கே பெட்ரோல் கிடைக்கும்? எங்கே தங்கச் சுரங்கம் இருக்குங்கற கேள்வியும் பிரதானமானது. இந்த இரண்டும் இருக்கற  இடம் தெரிஞ்சுட்டா நம்மளைக் கையிலயே பிடிக்க முடியாதே?’’

அவர்கள் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்க, வெளியே  ஒரு விஜிலென்ஸ் போலீஸ்காரர் வந்து நின்றார். ஏதோ வேலையாக நடப்பது  போன்ற பாவனையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.  வள்ளுவர் உடனேயே சுதாரித்தவராக ‘‘நாம ஒண்ணுக்கும் உதவாத விஷயம் பேசு
வோமா?’’ என்று கேட்க, ‘‘உங்களால முடியுமா?’’ என கணபதி சுப்ரமணியன் சீரியஸாகக் கேட்க, ‘‘முயற்சிக்கறேன்... ஆமா, அந்த உயரமான  நடிகைக்கும் ஜாலி நடிகருக்கும் சீரியஸான காதல் இருக்கறதா கிசுகிசு வந்துச்சே, நீங்க படிச்சீங்களா?’’ என்று ஆரம்பித்தார். கணபதி  சுப்ரமணியன் பங்களா. தங்கவேலு கதவைத் திறந்துவிட கார் உள்ளே பிரவேசித்தது. பெட்டியோடு இறங்கிய ப்ரியாவைப் பார்த்து பத்மாசினி  பெரிதாகவே அதிர்ந்தாள்.

‘‘ஐயோ, என்னடி இது..?’’ என்றவளுக்கு அனந்தகிருஷ்ணனை பதில் சொல்லச் சொல்லிவிட்டு இருவரும் நேராக கணபதி சுப்ரமணியன் அறை  நோக்கித்தான் சென்றனர்.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவர்கள் தாழ்ப்பாள் போட்டுக்கொள்ள பத்மாசினி புலம்பத் தொடங்கினாள்.
‘‘என்னங்க நடக்குது இங்க?’’
‘‘சொல்றேன்... நீ கொஞ்சம் பதற்றப்படாம இரு!’’
‘‘எப்படி இருக்கறது? திரும்ப அந்தப் பெட்டி வந்துடுச்சே?’’
‘‘வந்துடுச்சிதான்... என்ன செய்யச் சொல்றே?’’
‘‘இப்படிச் சொன்னா எப்படிங்க..?’’
‘‘இதோ பார்.... இங்க நாங்க போனபிறகு உனக்கு எதுவும் ஆகலையே?’’
‘‘ஏன்... எனக்கு ஏதாவது ஆகணுமா! என்னங்க கேள்வி கேக்கறீங்க..?’’
‘‘பைத்தியம்!  அந்த முத்தழகு ஆவியால ஏதாவது திரும்பத் தொல்லை ஏற்பட்டுதான்னு கேட்டேன்!’’
‘‘அதை ஞாபகப்படுத்தாதீங்க... ஆமா, உங்க அப்பாவுக்கு இப்ப எப்படி இருக்கு?’’
‘‘அவருக்கு எதுவுமில்லை... நல்ல இருக்கார். ஆனா அவருக்கு ஏதாவது ஆயிருந்தா எவ்வளவோ நல்லா இருந்திருக்கும்!’’
‘‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’’
‘‘வேற எப்படிச் சொல்றதுன்னு தெரியல பத்மா. ஒரு விஷயத்தை மட்டும் நல்லா தெரிஞ்சிக்கோ. இதுவரை பெருசா எதுவும் நடக்கலை.  இனிமேதான் எல்லாம் நடக்கப் போகுது...’’
‘‘எல்லாம்னா..?’’
‘‘எல்லாம்னா எல்லாம்தான்... அனேகமா உனக்கும் எனக்கும் பைத்தியம் பிடிக்கறதுங்கறது அதுல ஒண்ணா இருக்கலாம்!’’
‘‘புரியற மாதிரியே பேச மாட்டீங்களா?’’

- பத்மாசினி கெஞ்சல் குரலில் கேட்க, பேசறேன் என்பதுபோல, நடந்த எல்லாவற்றையும் அவளிடம் பகிர்ந்துகொள்ள அவர் தயாரானார்.
உள்ளே வர்ஷனும், ப்ரியாவும் ஏட்டுக்கட்டைத் திறந்திருந்தனர். முதல் பக்கத்தில் ஒரு ஸ்வஸ்திக் குறி, அடுத்த பக்கத்தில் ‘ஆனைமுகன்
காப்பு’ என்கிற தலைப்புக்குக் கீழே பிள்ளையாரைத் துதி செய்யும் நான்கு வரிப் பாடல்... மூன்றாவது ஏட்டில் ‘பதிமூன்று முறை  பிராணாயாமம் செய்து முட்டி மடக்கி தரை மீதமர்ந்து ஏட்டைத் தொடர்க!’ என்கிற குறிப்பு இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர்  திருதிருவென பார்த்துக் கொண்டனர்.

"மூன்றாவது ஏட்டில் ‘பதிமூன்று முறை பிராணாயாமம் செய்து முட்டி மடக்கி தரை மீதமர்ந்து ஏட்டைத் தொடர்க!’ என்கிற குறிப்பு இருந்தது.  ப்ரியாவும் வர்ஷனும் ஒருவரை ஒருவர் திருதிருவென பார்த்துக்கொண்டனர்."

‘‘மாப்பிள்ளை தலை தெரிஞ்சா போதும்... எங்க வீட்டுக்காரர் உடனே அடுப்புல தோசைக்கல்லைப் போட்டுடுவார்...’’
‘‘ஏன்?’’
‘‘கண்டதும் சுட உத்தரவாம்..!’’

‘‘தலைவர் பயங்கரமா இங்கிலீஷ் பேசுவார்...’’
‘‘எப்படி..?’’
‘‘ஹலோ... மைக் டெஸ்ட்டிங் ஒன் டூ த்ரீன்னுதான்!’’

‘‘தலைவர் எல்லாத்துலயும் கௌரவம் பார்ப்பாரு...’’
‘‘எப்படி?’’
‘‘குற்றப் பத்திரிகையா இருந்தாக் கூட முதல் பத்திரிகையை தனக்குத்தான் கொடுக்கணும் என்பார்...’’
- சுப.தனபாலன், முத்துப்பேட்டை.

- தொடரும்...