தட்டிக் கொடுத்த ரஜினி... நம்பிக்கை தந்த கமல்..!



செம எனர்ஜி விஷால்

‘‘என் பிறந்த நாளுக்கு யாரும் கிஃப்ட், பொக்கே வாங்க வேண்டாம். அந்தப் பணத்தில் ஏழைகளுக்கு அன்னதானம் பண்ணி ரசீது கொடுங்க!’’  என கோரிக்கை வைக்கும் அளவுக்கு ஆளே மாறியிருக்கிறார் விஷால். நாடக நடிகர்கள், நடிகர் சங்க நிர்வாகிகள், சக நடிகர்கள் என ஏதோ  தேர்தல் பிஸியில் இருக்கும் கட்சி ஆபீஸ் போலவே பரபரக்கிறது அவரின் வடபழனி அலுவலகம். வருகிற 29ம் தேதி அவரின் 38வது பர்த்  டே. கூடவே ‘பாயும் புலி’ ரிலீஸ்  பரபரப்பு, பாண்டிராஜ் பட ஷூட்டிங், நடிகர் சங்கத் தேர்தல்  வேலைகள்... இதுவரை விஷாலை  இப்படிப் பார்த்ததே இல்லை!

‘‘என் பிறந்த நாளையே ஒரு ‘அவேர்னஸ் டே’யா கொண்டாப் போறேன். வழக்கம் போல அன்னதானங்கள், நலத்திட்ட உதவிகள் நடக்கும்.  கூடவே, வாழ்த்த வர்றவங்களையும் உதவி செய்ய பழக்கலாம்னு இருக்கேன். இது பப்ளிசிட்டிக்காக இல்லை பிரதர். விஷால் மட்டும்  உதவணும்னு இல்ல. எல்லாரும் சேர்ந்து உதவலாம்னு ஒரு நல்ல எண்ணம். சென்னை ரெட் ஹில்ஸ் பக்கம் உள்ள ஒரு கிராமத்துக்குப்  போறேன். அங்கே ரொம்பவும் வறுமையில் வாழ்ந்திட்டிருக்கும் குழந்தைகளுக்கு என்னோட தோழியின் தன்னார்வ அமைப்பு மூலமா ஒரு  அமெரிக்கன் கம்பெனி ஒரு லட்சத்து பத்தாயிரம் ஷூக்கள் கொடுக்கிறாங்க. என் ரசிகர் மன்றம் சார்பில் அந்தக் குழந்தைகளுக்குப்  பொருத்தமான சாக்ஸ்களை திரட்டிக் கொடுக்கப் போறோம்!’’



‘‘உங்க ஷூட்டிங்கை கூட கேன்சல் பண்ணிட்டு, நடிகர் சங்கப் பிரச்னைக்காக ரஜினி, கமலை சந்திச்சீங்களே..?’’

‘‘அவங்க வரச் சொன்ன டேட்ல ஷூட்டிங் இருந்துச்சு. என் தயாரிப்பில் உள்ள படம்ங்கிறதுனால கேன்சல் பண்ணினேன். ரெண்டரை  வருஷத்துக்கு முன்பே நடிகர் சங்கத்தை நாங்க கேள்வி கேட்டப்போ, அதுல முதல் கையெழுத்து போட்டு எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது  கமல் சார்தான். அவரோட தொலைநோக்குப் பார்வை எப்பவும் எங்களை வழி நடத்தும். ரஜினி சாரை சந்திச்சப்போ, ‘இளைஞர்கள் இந்த  விஷயத்தை கையில எடுத்திருக்கீங்க’ன்னு  எங்களைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். ‘வாக்குப்பதிவு அன்னிக்கு மலேஷியாவில்  இருப்பேன்.. பட், கண்டிப்பா வந்து வாக்களிக்கறேன்’னு சொல்லியிருக்கார். செப்டம்பர்ல தேர்தல். லயோலாவில் நடக்கலாம். எங்க  அணிக்கு ஓட்டுப் போடுங்கன்னு நாங்க ரஜினி, கமல் யார்கிட்டேயும் சொல்லலை. ‘நீங்க ஓட்டுப் போட வந்தாலே எல்லாருக்கும் உற்சாகமா  இருக்கும்’னுதான் வலியுறுத்தினோம்!’’



‘‘நடிகர் சங்கத் தேர்தலுக்கு எப்பவும் இவ்வளவு பரபரப்பு இருந்ததில்லை...’’

‘‘ஆமாங்க... நாங்களே எதிர்பார்க்கல. பரபரப்பான பை எலெக்‌ஷன் மாதிரி ஆகிடுச்சு! இந்த விஷயத்தை கையில எடுக்கும்போது எங்க  அம்மா கூட பயந்தாங்க. இப்போ அம்மா காய்கறி வாங்க போனாகூட, ‘உங்க பையன் படம் எப்போ ரிலீஸ்’னு யாரும் கேக்கறது  இல்லையாம்... ‘எப்போ எலெக்‌ஷன்’னுதான் கேக்கறாங்களாம். ‘என்ன ஆனாலும் சரி, நீ இந்த முயற்சியைக் கைவிட்டுடாதே... நீ ஜெயிச்சே  ஆகணும். உங்களுக்கு நல்லது நடக்கும்’னு அம்மா இப்ப உற்சாகப்படுத்துறாங்க!’’

‘‘இந்த பரபரப்பிலும் அடுத்தடுத்து நல்ல வரிசையா படங்கள் வச்சிருக்கீங்க..?’’

‘‘ஆமா! ‘பாயும் புலி’க்கு அடுத்து பண்ற பாண்டிராஜ் படம் முக்கியமானது. நானும் அவரும் இதுவரை பண்ணாத புது டைப் அது.  ரோடு  த்ரில்லர். நாங்க ப்ளான் பண்ணின ரிலீஸ் டேட், டிசம்பர் 18. அந்தப் படத்தை முடிச்சுட்டு ‘கொம்பன்’ முத்தையா டைரக்‌ஷன்ல நடிக்கறேன்.  ‘மருது’ன்னு டைட்டில் கூட முடிவாகிடுச்சு. அக்டோபர்ல  தொடங்கலாம். அதை முடிச்சிட்டு ஜனவரியில லிங்குசாமி சார் ப்ராஜெக்ட்  பண்றேன். நான் தயாரிப்பாளரா மாறினதாலதான், விஷாலை ஒரு சக்சஸ்ஃபுல் ஹீரோவா மாத்திக்க முடிஞ்சது. சொந்தப் படம் எடுக்கலாமா,  வேணாமான்னு யோசனையில இருந்தப்போ, டி.சிவாவும், வேந்தர் மூவிஸ் மதனும்தான் எனக்கு தைரியம் கொடுத்தாங்க!’’

‘‘அண்ணி ஸ்ரேயா ரெட்டி என்ன பண்றாங்க..?’’

‘‘நடிக்கக் கூடிய கதாநாயகிகளுக்கு இன்னும் இடம் காலியா இருக்கு. ஸோ, ‘நல்ல கதைகள், கேரக்டர்கள் வந்தா மிஸ் பண்ணிடாதீங்க’ன்னு  அவங்ககிட்டே நாலு வருஷமா சொன்னேன். இப்பதான் ரெண்டு படங்கள் கமிட் ஆகியிருக்காங்க. மறுபடி ஒரு ரவுண்டு வருவாங்க!’’

‘‘உங்க அம்மா பெயர்ல அறக்கட்டளை தொடங்கியிருக்கீங்களே..?’’

‘‘ஆமாம், ‘தேவி ஃபவுண்டேஷன்’. முறையா ரிஜிஸ்டர்கூட பண்ணியாச்சு. அதுல ஏழை மாணவிகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து  உதவலாம்னு இருக்கோம். இதுக்காக ஆக்டர்ஸ், டாக்டர்கள், தொழிலதிபர்கள்னு என்னோட ஃப்ரெண்ட்ஸைக் கொண்டு ஒரு நெட்வொர்க் உருவாக்கப் போறேன்!’’

‘‘இனி சேனல்களுக்கு பேட்டி கொடுக்கக் கூட பணம் கேட்கப் போறீங்களாமே..?’’

‘‘ஆமாம். சமீபத்தில் ஒரு ஐ ஹாஸ்பிட்டல்ல என்னை கெஸ்ட்டா கூப்பிட்டாங்க. ‘வர்றேன், ஆனா எனக்கு காசு வேண்டாம். அதுக்கு பதிலா  வருஷத்துக்கு 25 பேருக்கு இலவசமா கண் ஆபரேஷன் பண்ணிக் குடுங்க’ன்னு சொன்னேன்.  சம்மதிச்சாங்க! அப்போதான் இப்படி யோசனை  வந்துச்சு. இதே மாதிரி, பட புரொமோஷன் தவிர மத்த நிகழ்ச்சிகளுக்கு கெஸ்ட்டாவோ, ஜட்ஜாவோ சேனல்கள் கூப்பிட்டா பணம்   கேட்கலாம்னு இருக்கேன். அந்தப் பணத்தை எங்கிட்டதான் கொடுக்கணும்னு இல்லை.  நாங்க சொல்ற குழந்தைகளோட ஸ்கூல், காலேஜ்  ஃபீஸைக் கட்டினாலே போதும். இப்படி பணம்  கேட்குறதுக்காக நான் வெட்கப்படலை. யார் மூலமாகவேனும் நல்லது நடக்கணும்...  அவ்வளவுதான்!’’

‘‘மறந்தே போச்சு... ‘பாயும் புலி’ பத்தி சொல்லிடுங்க?’’

‘‘எனக்கும் சுசீந்திரனுக்கும் முக்கியமான படம் ‘பாயும் புலி’. முதல் பாதியில ரசிக்கற மாதிரி  நிறைய விஷயங்கள் இருக்கும். செகண்ட்  ஹாஃப் செம ஆக்‌ஷன் த்ரில்லர். சுசீந்திரன் பாணியில் ஒரு போலீஸ் கதை பண்ணினதை  வித்தியாசமா உணர்ந்தேன். ‘பாண்டிய நாடு’ல  க்ளைமேக்ஸ் எப்படி பேசப்பட்டதோ,  அதைவிட அசத்தலான க்ளைமேக்ஸ் இதுல இருக்கு. காஜல் அகர்வால் காம்பினேஷல்ல முதல் படம்  இது. ‘யார் இந்த முயல்குட்டி’ன்னு வைரமுத்து சார் எழுதின பாட்டுல ஒரு  க்யூட்டான இன்ட்ரோ இருக்கு அவங்களுக்கு. க்ளைமேக்ஸ்ல  இமானோட மியூசிக் மிரட்டியிருக்கு!’’

‘‘வரலக்ஷ்மி, உங்க கல்யாணம்... இதையெல்லாம் கேட்காம பேட்டி எப்படி முடியும்?’’

‘‘ஹையையோ... சொல்லிச் சொல்லி எனக்கே போர் அடிச்சுப் போச்சு. சத்தியமா  எனக்கு அந்த மைண்ட் செட் இன்னும் வரலைங்க.  உண்மையைச் சொல்லணும்னா, நடிகர் சங்க  வேலைகள் தொடங்கினதில இருந்து எங்க அப்பா, அம்மாவை நான் ஒரு டின்னருக்குக்  கூட  அழைச்சிட்டுப் போக முடியலை. நம்புங்க! ஜிம்முக்குப் போய் ஒன்றரை மாசம்  ஆச்சு. என்னோட பர்சனல் விஷயத்தை கவனிக்கக் கூட  நேரம் கிடைக்க மாட்டேங்குது.  கல்யாணம்ங்கறது அவசரப்பட்டு பண்ற விஷயம் இல்ல!’’

- மை.பாரதிராஜா