மூன்றே வரிகளில் 12 லட்சம்! இப்படியும் சம்பாதிக்கும் நடிகைகள்



‘நேத்து ஒரே தலைவலி... ’ என உங்கள் அபிமான ஹீரோயின் தைல பாட்டிலோடு ட்விட்டரில் சோக முகம் காட்டுகிறாரா? உடனே,  ‘என்னாச்சோ... ஏதாச்சோ?’ என உருகாதீர்கள். அது அந்தத் தலைவலி தைலத்துக்கான மறைமுக விளம்பரமாகவும் இருக்கலாம். ‘ஸ்பான்ஸர்டு  ட்வீட்’ - இதுதான் இப்போது உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் டிரெண்ட். அதாவது பிரபலங்கள் தங்களை இணையத்தில் பின்பற்றும்  லட்சக்கணக்கான ரசிகர்களுக்குத் தரும் குறுஞ்செய்திகளிலேயே விளம்பரத்தை ஊசி ஏற்றுவது!

முந்தைய காலம் மாதிரியெல்லாம் பிரஸ் மீட் வைத்து கஷ்டப்படாமல், பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்  தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளவும்தான் இன்று ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன. ஒவ்வொரு சினிமா  பிரபலத்தையும் ட்விட்டரில் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள். அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் போட்டோ  போட்டாலும், வீடியோ போட்டாலும், ஏன்... தும்மல் போட்டாலும் கூட அடுத்த நிமிடமே அது லட்சக்கணக்கானவர்களுக்குப் போய்ச்  சேர்ந்துவிடும். விளம்பரம் போட்டால்..? இங்கேதான் ஆரம்பிக்கிறது கமர்ஷியல் புலிகளின் கலக்கல் ஐடியா.



ஹிந்துஸ்தான் யுனி லிவர் போன்ற பெரிய கம்பெனிகளே இன்று பிரபலங்களின் ட்விட்டர் மூலம் விளம்பரம் தேட இறங்கி வந்துவிட்டதாகச்  சொல்கிறார் எக்ஸீட் என்டர்டெயின்மென்ட் எனும் டேலன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைவரான உதய் சிங் கௌரி. ‘‘கம்பெனிகளின் பார்வையில் யோசியுங்களேன். ஒரு நடிகரை அழைத்து எக்கச்சக்கமாய் செலவு செய்து பெரிய நிகழ்ச்சி நடத்தினால் கூட அது  சில நூறு பேரிடம்தான் போய்ச் சேரும். ஆனால், ஒரு நடிகரைப் பிடித்து அவரது ட்விட்டரில் ஒரே ஒரு ட்வீட்டாக தங்கள் நிறுவனத்  தயாரிப்பு ஒன்றைச் சேர்த்துக்கொள்ளச் சொன்னால், லட்சக்கணக்கான மக்களிடம் போய்ச் சேரும்! மிக மலிவு விலையில் கிடைக்கும்  மகத்தான விளம்பரம் இது’’ என்கிறார் அவர்.



பாலிவுட் நடிகர்களில் யாருக்கு அதிகம் ட்விட்டர் ஃபாலோயர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் நிறுவனங்களிடையே கிராக்கி  அதிகமாம். இப்போதைக்கு அதிகபட்சம் அமிதாப் பச்சன் தான். அவரை ஃபாலோ செய்பவர்கள் மட்டும் 1 கோடியே 60 லட்சம் பேர்.  நடிகைகளில் ப்ரியங்கா சோப்ராதான் நம்பர் ஒன். 1 கோடி ஃபாலோயர்கள் கொண்ட அவர், மூன்றே வரிகளில் ஒரே ஒரு விளம்பர ட்வீட்  போட 10 முதல் 12 லட்ச ரூபாய் பணம் வாங்குகிறார். தீபிகா படுகோனேவுக்கும் இதே அளவு ரசிகர்களும் சம்பளமும் உண்டு.
50 லட்சம் ரசிகர்களைக் கொண்ட ‘லிங்கா’ நாயகி சோனாக்‌ஷி சின்ஹா, தனது ட்வீட் மூலம் ஒரு பொருளை பிரபலப்படுத்த 4 முதல் 5 லட்ச  ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். இப்போதைக்கு இந்த வகை ஸ்பான்ஸர்டு ட்வீட் விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிப்பவர்கள்  என்றால் அது சோனாக்‌ஷியும், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும், பாலிவுட் போட்டோகிராஃபர் அடுல் கஸ்பகரும்தான். இவர்கள்  வசூலிப்பது ரூ.1 முதல் 5 லட்சம் வரைதான் என்றாலும், ஒப்புக்கொள்ளும் விளம்பரங்கள் நிறைய. அதாவது சோனாக்‌ஷி தினம் நான்கு  செய்திகளை தன் ட்விட்டரில் வெளியிட்டால், அதில் ஒன்று நிச்சயம் விளம்பரமாக இருக்கும் என்ற நிலைமை!

இந்தியாவில் விளம்பர ட்வீட்டுகள் வளர்ந்து வரும் வேகத்தைப் பார்த்தால், வருங்காலத்தில் பிரபலங்கள் ட்வீட் செய்தாலே அதில் 50  சதவீதம் விளம்பரம்தான் இருக்கும் என்கிறார்கள் மார்க்கெட்டிங் நிபுணர்கள்.  சீக்கிரமே நம்மூரில் சூர்யா, தனுஷ், விஜய், சமந்தா  போன்றவர்கள் டன்டன்னாக தங்கள் ட்வீட்டில் விளம்பரங்களைக் குவிக்க நூறு சதவீதம் வாய்ப்புண்டு. ஒருவேளை ட்விட்டரில் நடிகர்  நடிகைகள் புரமோட் செய்யும் ஒரு ஷாம்புவைப் போட்டு, ரசிகன் ஒருவனுக்கு மொத்த முடியும் போய்விட்டால்..?

அமெரிக்காவில் இது போல நடந்திருக்கிறது. அங்கே டி.வி செலிபிரிட்டியான கிம் கர்தாஷியன் சமீபத்தில் ஒரு மாத்திரை பாட்டிலை கையில்  வைத்தபடி விளம்பர செல்ஃபி ஒன்றை ட்வீட் செய்திருந்தார். காலை நேரச் சோர்வைப் போக்கும் அந்த மாத்திரைக்கு எக்கச்சக்க பக்க  விளைவுகள் உண்டாம். ‘பக்க விளைவுகள் பற்றிய எச்சரிக்கையை வெளியிடாமல் இப்படி விளம்பரம் செய்வது நியதியல்ல’ என அமெரிக்க  உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு கருத்து சொல்ல, உடனே கிம் அந்த ட்வீட்டை அழித்துவிட்டார். இங்கே தடை  செய்யப்பட்ட நூடுல்ஸை கூவிக் கூவி விற்றவர்களுக்கே எந்தக் கண்டிப்பும் இல்லை. ட்விட்டர் விளம்பரத்தை எல்லாம் இவர்கள்  கவனிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? உஷாராய் இருக்க வேண்டியது நீங்கள்தான் மக்களே!

‘லிங்கா’ நாயகி சோனாக்‌ஷி சின்ஹா, தனது ட்வீட் மூலம் ஒரு பொருளை பிரபலப்படுத்த 4 முதல் 5 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம்.

- நவநீதன்