ரத்தம் கொடுத்தால் டிக்கெட் ஃப்ரீ!



விநோத ரஸ மஞ்சரி

பிரமாண்டமான மியூசிக் ஷோ... ஆட்டம், பாட்டம், கலக்கல், கொண்டாட்டம் என எல்லாம் அங்கே உத்தரவாதம். ‘எவ்வளவு டிக்கெட்...  எங்கே நடக்கிறது’ என ஆர்வமாகிறீர்களா? காசு மட்டும் கொடுத்தால் போதாது... ஒரு பாட்டில் ரத்தமும் கொடுக்க வேண்டும்.  அப்போதுதான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும். உலகில் முதல் முறையாக ‘பே பை பிளட்’... அதாவது ரத்தத்தால் பணம்  செலுத்துங்கள் என்கிற கோஷத்தோடு இப்படியொரு புதுமை விழா நடந்தேறியிருப்பது ருமேனியாவில்.

ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ரத்த தானம் மிக மிகக் குறைவாம். இங்குள்ள மக்களில் வெறும் 1.7 சதவீதம் பேர்தான் ரத்த தானம்  செய்கிறார்கள். அதுவும் சுயநல அடிப்படையில் சொந்த பந்தங்களுக்கு மட்டுமே ரத்தம் கொடுக்கிறார்கள். ‘‘நாட்டில் அவசரம்,  ஆபத்துகளுக்குக் கூட போதுமான ரத்தம் கையிருப்பு இல்லை. இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் நிறைய. இந்நிலையை மாற்றி ரத்த  தானத்தை ஊக்குவிக்கத்தான் இப்படியொரு நிகழ்ச்சியையே வடிவமைத்தோம்!’’ என்கிறார் இந்நிகழ்ச்சியின் இயக்குனரான பாக்டான் புடா.

 

Untold Festival... அதாவது, ‘சொல்லப்படாத திருவிழா’ எனப் பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே நடந்து  முடிந்துவிட்டது. நிகழ்ச்சி மிக நார்மலான இசைக் கொண்டாட்டம்தான். ஆனால், ரத்தம் கொடுக்கும் கான்செப்ட் ஹிட் அடித்திருக்கிறது.
‘‘நாடு முழுவதும் உள்ள 42 மையங்களில் சென்று ரத்தம் செலுத்தினால் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் விலையில் 30 சதவீதம் தள்ளுபடி  செய்யப்படும். நாங்களே கொண்டு வரும் மொபைல் மையத்தில் ரத்தம் கொடுத்தால் முழுமையாக ஒரு டிக்கெட்டே இலவசம். இதுதான்  நாங்கள் அறிவித்த சலுகை. அறிவித்த சில மணி நேரங்களிலேயே 45 இளைஞர்கள் முன்வந்து ரத்தம் கொடுத்தது இந்நிகழ்ச்சிக்குக் கிடைத்த  வெற்றி!’’ என மகிழ்கிறார் இந்நிகழ்ச்சியின் செய்தித் தொடர்பாளர், ஸ்டெஃபானா.

ரத்த தானத்தை ஊக்குவிக்க இவர்கள் பிராண்ட் அம்பாஸிடராக பயன்படுத்தியது யாரைத் தெரியுமா? டிராகுலாவை! ‘உங்கள் ரத்தம்  டிராகுலாவுக்கு மட்டும்தான் தேவைப்படும் என்றில்லை...’ என்பதே இவர்களின் டேக் லைன்! என்னமா சிந்திக்கிறாய்ங்க!

- ரெமோ