வாலு விமர்சனம்



தாதா மாமனிடமிருந்து ஹன்சிகாவை மீட்டு சிம்பு காதலில் வெற்றி பெறுவதே ‘வாலு’! மூன்று முழு வருடங்களாய் வெள்ளித்திரைக்கு  போக்குக் காட்டி வந்த படம். சும்மா ‘காட்டு... காட்டு...’ என்று படம் முழுவதும்  முகம் காட்டிய வகையில் சிம்பு ரொம்பவே க்யூட்!
வேலை இல்லாத சிம்புவிற்கு சந்தானத்துடன் ஊர் சுற்றுவது மட்டுமே வேலை. அழகான ஹன்சிகாவைப் பார்த்ததுமே காதல். ஹன்சிகா  தவற விட்ட செல்போனை திரும்பிக்கொடுக்க சிம்பு போக, அந்த நேரம் விபத்தில் சிக்குகிறார் ஹன்சிகா. அப்புறம் அடிக்கடி சந்திக்க, காதல்  சொல்ல, மாமன் பற்றி ஹன்சிகா சொல்ல, எதிர்ப்பை மீறி சிம்பு ஹன்சிகாவை மணம் முடித்தாரா என்பதே க்ளைமேக்ஸ்.

சிம்புக்காகவே அச்சு அசலாக எழுதப்பட்ட கதையில் ‘நச்’ என்று பொருந்துகிறார் அவர். குட்டிப் பையா வி.டி.வி கணேஷ், டயர் சந்தானம்  என இரண்டு நண்பர்களோடு சிம்பு அடிக்கும் அரட்டைகளில் தியேட்டர் கலகலக்கிறது. இவர்கள் ஒருவருக்கொருவர் போட்டுக்கொடுக்
கும் காமெடி கெமிஸ்ட்ரியே படத்தின் பம்பர் லாட்டரி! படம் முழுக்க இந்த மூன்று பேர் காம்பினேஷன் வந்து கொண்டிருந்தாலே போதும்  போலத் தோன்றுகிறது. ஆரம்பக் காட்சிகளில் இவர்கள் படத்தை அரவணைத்துச் செல்வதால் அறிமுக இயக்குநர் விஜய் சந்தருக்கு டேக்  ஆஃப் ஸ்மூத் ஆகிவிடுகிறது.



அப்பாவோடு எகிறும் போதும், பிறகு அவரின் அன்பில் உருகும்போதும் அசத்துகிறார் சிம்பு. ஹன்சிகா - சிம்பு காதல் டெவலப் ஆக  சந்தானம் ஒரு குவார்ட்டருக்கு சொல்லும் ஐடியாக்களும், அது நிஜத்திற்கு வரும் சம்பவங்களும் பெரிய வித்தியாசம் தராவிட்டாலும்  கலகலப்பு. பத்தடிக்கு ஒரு தரம் தரும் காதல் பன்ச் எல்லாமே அவரது சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே இருப்பதால் ரசிகர்களுக்கு  எல்லாமே புரிபட்டு சிரிக்கிறார்கள்.

ஹன்சிகா காதலியாக அசத்தல்! மாமாவையும் மறுக்க முடியாமல், சிம்புவையும் மறக்க முடியாமல் கண்ணீர் சிந்தும் காட்சிகளில் ஏனோ  நிஜம் மாதிரியே தோற்றம். பல காட்சிகளில் சிம்புவை விட ‘பல்க்’ ஆகத் தெரிகிற பொண்ணு, அடுத்த காட்சிகளில் இடை சிறுப்பது  வேடிக்கை! ‘சில பசங்களைப் பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும். உன்னைப் பார்த்ததுமே பிடிக்கும்’ என தனுஷ் வசனத்தைத் திருப்பிப்  போடுவதெல்லாம் சர்ப்ரைஸ் சிரிப்பு.

சிம்புவுக்கே வம்பு கொடுக்கும் வில்லனாக ஆதித்யா அறிமுகம். காமெடியும், கலகலப்புமாக நகரும் கதைக்கு அவர்தான் இறுதியில் டஃப்  ஆக்‌ஷன் கொடுப்பார் எனப் பார்த்தால் ‘உன்னை எனக்கே பிடிக்குது. அந்தப் பொண்ணுக்கு எப்படி பிடிக்காமல் இருக்கும்?’ என்று  விருட்டென விட்டுக்கொடுப்பது புஸ்ஸ்..! ‘இப்படியுமா’ என தியேட்டரே திகைக்கிறது!

இடைவேளை வரை சிம்புவின் பெயரைப் போலவே, படமும் ஷார்ப். படம் முடிகிற நேரத்தில் வருகிற பாடலில் சிம்பு போடும்  எம்.ஜி.ஆர் வேஷம் சூப்பர்! இவ்வளவு பொருத்தமாக இந்த கெட்டப் இளையவர்களில் யாருக்காவது அமையுமா என்பது சந்தேகம். கடைசி  வரைக்கும் ஹன்சிகா சிம்புவிடம் காதலைச் சொல்லாமல் இருப்பது ரொம்பவே ஓவர்! பின்னணி இசையில் ஸ்கோர் செய்யும் தமன்,  பாடல்களில் பெரிதாக சோபிக்காதது ஏனோ? படம் முழுக்க சிம்புவுக்கு இணையாக சுறுசுறுப்பாக இருப்பது சக்தியின் துறுதுறு கேமரா!
பெரிதாக எதிர்பார்க்காமல் போனால், இது ஜாலி வாலு!

- குங்குமம் விமர்சனக் குழு