வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்கவிமர்சனம்

ஆர்யாவும், சந்தானமும் நெருங்கிய நண்பர்கள். அவர்களின் நட்பின் நெருக்கம் தாங்காமல் வில்லங்கம் செய்கிறார்கள் ஆர்யாவின் காதலியும்,  சந்தானத்தின் மனைவியும். கடைசியில் அனைத்துத் தடைகளையும் தாண்டி நட்பை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்களா என்பதே ‘வாசுவும்  சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’.

பெயருக்கு ஒரு மொபைல் ஷாப் வைத்துக்கொண்டு, மீதி நேரம் எல்லாம் டாஸ்மாக் பாரில் கொண்டாட்டமாகக் கழிக்கிறார்கள் ஆர்யா -  சந்தானம். தன் மனைவியோடு சேர்ந்திருக்க விடாமல், அழிச்சாட்டியம் செய்யும் ஆர்யாவையும் திருமண பந்தத்தில் மாட்ட நினைக்கிறார்  சந்தானம். அதற்கான முயற்சியில் தீவிரமாக இயங்க, ஆர்யாவுக்கென வந்து சேரும் தமன்னாவும் சந்தானத்தின் நட்பை வெறுக்கிறார். அதை  சமாளிக்க என்னவெல்லாம் வியூகம் அமைக்கிறார்கள் என்பதுதான் காமெடி கலாட்டா.இப்போதைய தமிழ் சினிமா டிரண்ட், அர்த்தமான சினிமா என எந்த வருத்தமும் பட்டுக்கொள்ளாமல் சீனுக்கு சீன் சிரிக்க வைத்தால்  போதும் என எப்போதும் போல் இறங்கி வந்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். முதல் ஃப்ரேமிலிருந்தே சிரிக்க வைக்கிற டியூனில் நம்மைச்  சேர்த்து விடுவதால் ஆர்யாவும் சந்தானமும் வந்து நின்றால் கூட சிரிப்பு வருகிறது. பெரும்பாலும் கலாய்க்கிற காமெடிதான். பட்டுத்  தெறிக்கும் டைமிங்கில் மட்டுமே தப்பிக்கிறது நிறைய வசனங்கள். உயிர் நண்பர்கள் இமேஜுக்கு ஆர்யா - சந்தானம் இரண்டு பேருமே  பொருந்திப் போவதால் அவர்கள் செட்டானது மாதிரியே நாமும் செட்டாகிவிட்டோமோ என்றே தோன்றுகிறது. ‘ஹீரோவாயிற்றே, இப்படி  நாலு பேர் நம் மீது பல்லு போட்டு பேசலாமா?’ என்றெல்லாம் பார்க்கவில்லை... எப்படி சந்தானம் வார்த்தையில் அடித்தாலும் தாங்குகிறார்  ஆர்யா.

நண்பனின் முதலிரவுக் கட்டிலை உடைத்து சலம்பு வதில் ஆகட்டும், ‘எனக்கு நயன்தாரா அளவுக்கு மனைவி அமைவாளா’ என்று  வருத்தப்படுவதில் ஆகட்டும், நண்பன் மனைவியின் அட்டாக் பொறுக்க முடியாமல் ஃபீலிங் விடுவதாகட்டும்... ஆர்யா பாந்தம்! அதிலும்  தமன்னாவை ஆபீஸில் பார்த்துவிட்டு பின்னாலேயே அலைந்து நூல் விடும் ரியாக்‌ஷன்... நச்! படத்தின் இன்னொரு நாயகன் அல்ல... இணை  நாயகனாக வருகிறார் சந்தானம். டைரக்டர், ஹீரோ இரண்டு பேரும் சாருக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டதால் மனிதர் புகுந்து  விளையாடுகிறார். ஆர்யாவைக் கலாய்த்து சிரிப்பை வெடிப்பதிலும், ‘மகிழ்ந்திரு’ என ட்ரேட் மார்க் வசனத்தில் ரகளை விடுவதிலும் மனிதர்  அசரடிக்கிறார். பெண் வர்க்கத்தை அவர் வார்த்தைகளில் அவ்வப்போது கூறு போடுவதற்கு இந்தக் கூட்டணிதான் காரணமா? எவ்வளவு  சொன்னாலும் கேட்கிற ஆள் இல்லை சந்தானம்! இப்படி பெண்களின் தோற்றத்தை வைத்துக் கிண்டலடிக்கிற காமெடிகளைத் தவிர்த்தால்,  அவர் முழு நேர ஹீரோவாகும்போது நல்லது.

தமன்னா ‘பாகுபலி’யில் பார்த்த அழகில் கூட கொஞ்சம் மாற்றுக் குறைந்துவிட்டார். இருந்தாலும் காமெடியில் இரண்டு பேருக்கும் ஈடு  கொடுத்து பதிலடி தருகிறார். பாடல்களில்  ‘லக்கா மாட்டிக்கிச்சு’ ஈர்க்கிறது. மற்றபடி இமான்தானா மியூசிக்? பார்த்துப் பழகிய கதை  என்றாலும் பார்க்க வைப்பதில் ராஜேஷ் வெற்றி பெற்று விடுகிறார். படம் முடிந்த பிறகும் ஓடிக்கொண்டிருப்பதாக நினைவு.  என்னதான் சிரிக்க வைத்தாலும் ஒரே மாதிரி இன்னொரு படம் எடுக்கலாம். ஒரே கதையை மூணு தடவை எடுக்குறது பெரிய தைரியம் பாஸ்!

- குங்குமம் விமர்சனக் குழு