ரகசியம் காக்கும் மொழிபெயர்ப்பாளர்கள்!



பின்னணியில் இரண்டு நாடுகளின் தேசியக் கொடிகளும் கம்பீரமாகக் காட்சி தர, பிரதமர் நரேந்திர மோடியும் ஏதோ ஒரு வெளிநாட்டுத்  தலைவரும் அமர்த்தலான இரண்டு இருக்கைகளில் அருகருகே அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் காட்சியை அடிக்கடி பலர்  பார்த்திருக்கலாம். (நம் பிரதமர்தான் உலகம் சுற்றும் வாலிபன் ஆயிற்றே!) அதில் மோடிக்குப் பின்புறம் அறிமுகம் இல்லாத ஒரு நபர்  இருப்பதைப் பார்த்து பலர் குழம்பியிருக்கலாம். ‘இரண்டு தேசத் தலைவர்கள் நிகழ்த்தும் அதிமுக்கியமான, படு ரகசியமான உரையாடலில்  யாரோ ஒரு முகம் தெரியாத நபருக்கு என்ன வேலை?’

உண்மையில் சொல்லப் போனால், மோடியின் சார்பில் அந்த வெளிநாட்டுத் தலைவருடன் உரையாடுவதே இந்த முகம் தெரியாத நபர்தான்.  நமது வெளியுறவுத் துறையில் ‘மொழிபெயர்ப்பாளர்கள்’ என்ற வேலையில் 33 பேர் இருக்கிறார்கள். அதிகம் அறியப்படாத இவர்கள்தான் இந்தியாவுக்கும் உலகத்துக்கும் பாலம் கட்டுகிறார்கள்.



நிலாக்‌ஷி சஹா சின்ஹா. மோடிக்கு மிகப் பிடித்தமான மொழிபெயர்ப்பாளர் இவர். வெளிநாடுகளில் எடுத்த படங்களில், மோடிக்குப்  பின்புறம் புன்னகை முகத்தோடு இவரைப் பார்த்திருக்கலாம். கடந்த ஆண்டில் மோடியோடு 14 நாடுகளுக்குப் போயிருக்கிறார். என்னதான்  ஆங்கிலம் பேசினாலும், தான் நினைப்பதை முழுமையாக இந்தியில் மட்டுமே சொல்லமுடியும் என மோடி கருதுகிறார். ரஷ்ய அதிபர்  புடின், பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் என யாரைச் சந்தித்தாலும் அவர் இந்தியிலேயே உரையாடல்  நிகழ்த்துகிறார்.

மோடி சொல்வதை அப்படியே மொழிபெயர்த்து, அவரோடு உரையாடும் அந்தத் தலைவர்களிடம் சொல்வது மொழிபெயர்ப்பாளரின்  வேலை. ரஷ்ய அதிபர் புடின் இதேபோலவே ரஷ்ய மொழியில் பேசுவதே வசதி என நினைப்பவர். அவருக்குப் பின்னாலும் ஒரு  மொழிபெயர்ப்பாளர் இருப்பார். ரஷ்ய மொழி தெரியாத மோடியும், இந்தி தெரியாத புடினும் உண்மையில் உரையாடிக்கொள்வது, இந்த  இரண்டு மொழிகளோடு ஆங்கிலமும் தெரிந்த இந்த மொழிபெயர்ப்பாளர்களால்தான்.



தலைவர்கள் பேசுவதை அப்படியே ஒரு நோட்டில் அவசரமாக எழுதிக்கொண்டு, இவர் சொல்வதை அவரிடமும், அவர் சொல்வதை  இவரிடமும் விளக்க வேண்டும். சொல்லும் மொழியில் கண்ணியம் வேண்டும்; எதையும் விட்டுவிடக் கூடாது; ‘விளக்கமாகச் சொல்ல  வேண்டும்’ என்பதற்காக தங்கள் தலைவர் சொல்லாத எதையும் சேர்த்து விடக்கூடாது. பிரதமர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும், அவர்  மனதில் என்ன நினைக்கிறார் என்பதையும் உணர்ந்துகொண்டு மொழிபெயர்க்க வேண்டும். ஒரு மோசமான மொழிபெயர்ப்பாளர் செய்யும்  தவறால், இரண்டு நாடுகளுக்கு இடையே நிரந்தரப் பகையே ஏற்பட்டுவிடும் ஆபத்து இருக்கிறது. இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, இரண்டு தலைவர்கள் பேசுவதில் பல விஷயங்கள் ரகசியமாகக் காக்கப்பட வேண்டியவை. அதனால்  அவற்றை அந்த அறையைத் தாண்டியதும் மறந்துவிட வேண்டும்.

நிலாக்‌ஷிக்கு ஆங்கிலம், இந்தி, பெங்காலி, பிரெஞ்சு என எல்லா மொழிகளும் சரளமாகவும் இங்கிதமாகவும் பேசத் தெரியும். அதனால்தான்  மோடி இவரை விரும்பி அழைத்துச் செல்கிறார். இதற்குமுன் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் எப்போதும் ஆங்கிலத்தில்  உரையாடத் தயங்கியதில்லை. எனவே அவர் காலத்தில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இவ்வளவு அவசியம் இருக்கவில்லை. ஆங்கிலம்  தெரியாத நாடுகளின் தலைவர்களோடு உரையாட மட்டும் இவர்கள் தேவை.
 
நமது வெளியுறவுத் துறையில் மொழிபெயர்ப்பாளர்கள் என்ற பதவியை உருவாக்கியவர் இந்திரா காந்தி. உருது, ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு  என பல மொழிகள் பேசத் தெரிந்த இந்திரா, இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தத் துறை முக்கியம் எனக் கருதினார். கடந்த 84ம் ஆண்டு  இதற்கென அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு டெல்லியில் இருக்கும் வெளிநாட்டு மொழிகள் பள்ளியில் தனிப் பயிற்சி  தரப்பட்டது. இவர்களில் ஏழு பேர் டெல்லியில் இருக்க, மற்ற 26 பேர் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகங்களில்  பணியாற்றுகிறார்கள். உருதுவும் அரபி மொழியும் நன்கு அறிந்தவர் வளைகுடா நாடுகளில் ஏதாவது ஒன்றில் இருப்பார்; பல ஐரோப்பிய  மொழிகளில் பரிச்சயம் உள்ளவர் பிரான்ஸ் போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருப்பார். நம் தலைவர்கள் அங்கு செல்லும்போதோ, அந்த  நாட்டுத் தலைவர்கள் இந்தியா வரும்போதோ, இவர்கள் கூடவே இருந்து உரையாடலை வசதியாக்குவார்கள்.

இதுதவிர, ஆபத்துக் காலங்களிலும் இவர்கள் தேவைப்படுகிறார்கள். ஏதாவது ஒரு நாட்டில் இந்தியர்களுக்கு ஆபத்து நேர்ந்தால், அரசின்  சார்பில் அவர்களோடு உள்ளூர் மொழியில் பேசுவது இவர்கள்தான். கடந்த 2004ம் ஆண்டு இராக்கில் நான்கு இந்திய டிரைவர்களை  தீவிரவாதிகள் கடத்தியபோது, அவர்களோடு சாதுர்யமாகப் பேச்சுவார்த்தை நடத்தியவர், ஜிக்ருர் ரஹ்மான் என்ற மொழிபெயர்ப்பாளர்தான்! 

ஆனால் இந்திரா காலத்துக்குப் பிறகு இந்த மொழி பெயர்ப்பாளர்கள் என்ற இனத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. வழக்கமான தூதரக  அதிகாரிகளுக்கே மொழிப்பயிற்சி கொடுத்து, அவர்களையே பயன்படுத்திக் கொள்ளும் யோசனை வந்தது. ஆனால் நம்மிடம் இதனால்  திறமையான ஆட்கள் குறைந்துபோனதுதான் மிச்சம். சில மாதங்களுக்கு முன்பு மோடி பூடான் போனார். அந்த மொழியும் இந்தியும் தெரிந்த  ஆட்கள் வெளியுறவுத் துறையில் இல்லை என்பதால், நாடாளுமன்ற அலுவலகத்திலிருந்து ஒருவரை அழைத்துப் போனார்கள். அவருக்கு  பூடானி மொழி நன்கு தெரிந்தது. ஆனால் நம் பிரதமர் பேசிய இந்தி அவருக்குப் புரியவில்லை; அவர் பேசிய இந்தி மோடிக்குப்  புரியவில்லை. எல்லோருக்கும் டென்ஷன் ஆகிவிட்டது.

நம் தமிழிலேயே சென்னைத் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ் போல எல்லா மொழிகளிலும் பேச்சு வழக்கு வித்தியாசம் உண்டு.  அதோடு அலங்காரமான வார்த்தைகளில் தலைவர்கள் சொல்வதும் புரிய வேண்டும். மொழிப் பயிற்சி இல்லாமல் அது சாத்தியமில்லை.  வல்லரசு கனவு காணும் இந்தியா, அதை மொழிப்பயிற்சியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

வாடகை மொழிபெயர்ப்பாளர்!

அமெரிக்கா போன்ற நாடுகளில் மொழிபெயர்ப்பு சேவை தரும் தனியார் நிறுவனங்கள் உண்டு. ரகசியம் காக்கப்படுமா என்ற கவலை  இல்லாமல் இந்த சேவையைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டுமுறை இந்தியா வந்தபோதும், அவரோடு  வந்து மொழிபெயர்ப்பு செய்தவர், குர்தீப் சாவ்லா என்ற இந்தியப் பெண். அமெரிக்க அதிகாரிகள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் என யார்  இந்தியா வந்தாலும் குர்தீப்புக்கு ஒரு டிக்கெட் சேர்த்துப் போடுகிறார்கள். மொழிபெயர்ப்பிலேயே லட்சங்களில் சம்பாதிக்கும் இவர் மோடி  உட்பட பலரின் கவனம் ஈர்த்திருக்கிறார்.

- அகஸ்டஸ்