தமிழின் முதல் கிராஃபிக் நாவல்!



நந்தினி with ‘சிவப்புக்கல் மூக்குத்தி’

இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர்மேன், சூப்பர்மேன்... தமிழில் கொடிகட்டிப் பறந்த இந்த காமிக்ஸ் கேரக்டர்களை மறக்க முடியுமா? அந்த  காமிக்ஸ் காலம் முடிந்து விட்டது என யார் சொன்னது? இப்போது காமிக்ஸ் எடுத்துவிட்டது கிராஃபிக்ஸ் அவதாரம். இதோ, ‘தமிழின் முதல்  டிஜிட்டல் கிராஃபிக்ஸ் நாவல்’ எனப் பெருமை பெற்றிருக்கிறது ‘சிவப்புக்கல் மூக்குத்தி’. ‘திருதிரு துறுதுறு’வென சினிமாவில் வலம் வந்த  இயக்குநர் நந்தினியின் சிந்தனைக் குழந்தை இது!

‘‘படிக்கிற பழக்கம் குறைஞ்சு போச்சுன்னு யாருங்க சொன்னது. புத்தகத்தைப் படிக்கலையே தவிர வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர்னு  எல்லாவற்றிலும் தமிழை நம்ம இளைஞர்கள் நிறைய படிக்கிறாங்க. எக்கச்சக்கமா ஷேர் பண்றாங்க. நாவல்ங்கறது எழுத்து மீடியம்... நான்  சினிமா மீடியாவில் இருந்து இந்த முயற்சியில் இறங்கினதிலேயே இது தெரியலையா?’’ எனச் சொல்லிச் சிரிக்கிறார் நந்தினி. விறுவிறு  சுறுசுறு என இந்த நாவலை 132 பக்கங்களில் உருவாக்கி அமேசான் கிண்டில் புத்தகப் பதிப்பாக வெளியிட்டிருக்கிறார் நந்தினி. இதன் விலை  249 ரூபாய்!



‘‘தமிழில் சக்கை போடு போட்ட காமிக்ஸ்கள் பெரும்பாலும் மேல்நாட்டு தழுவல்களாதான் இருக்கும். தமிழுக்கே தமிழுக்கான காமிக்ஸ்  படைப்பாளர்கள் இல்லாததால அதற்கான வாசகர்களும் இல்லாமல் இருந்தாங்க. ஆனா, இந்த ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ அப்படியில்ல. முழுக்க  தமிழ்ப் பாத்திரங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரிஜினல் தமிழ் கிராஃபிக் நாவல். ஒரு இளம் தம்பதி. அவங்க வெளியூர் போகும்போது  ஓரிடத்துல அந்தப் பெண்ணுக்கு சிவப்புக்கல் மூக்குத்தி ஒண்ணு கிடைக்குது. இந்த மூக்குத்தி கிடைச்சதும் அவங்களைச் சுத்தியிருக்கும் சில  நபர்கள் கொல்லப்படுறாங்க. இந்தக் கொலைகளைக் கண்டுபிடிக்கிறான் அவ கணவன். த்ரில்லர், மிஸ்ட்ரி, ஹாரர், ரொமான்ஸ் எல்லாம்  கலந்த கதை இது.



பொதுவா காமிக்ஸ் தயாரிக்கிறவங்க அவங்களே படம் வரையக்கூடியவங்களா இருப்பாங்க. அதனால காமிக்ஸ் புத்தகங்கள்  வெளியிடும்போது செலவு குறைவா இருக்கும். ஆனா, எனக்கு வரையத் தெரியாது. கதையை மட்டும் உருவாக்கி மகேஷ், சாய்நாத்னு  ரெண்டு ஓவியர்கள்கிட்ட ஒப்படைச்சேன். ஓவியங்கள் ரியலா வந்தாதான் காமிக்ஸ் கதைகளுக்கு ஒரு மதிப்பு வரும். இதுக்கான  பயிற்சிகளையும் இந்த காமிக்ஸ்ல வேலை செஞ்சவங்க எடுத்துக்கிட்டாங்க. இதனால புத்தக வடிவில் வெளியிடுற செலவைவிட கொஞ்சம்  கூடுதலாதான் ஆச்சு!’’ என்கிற நந்தினி, டிஜிட்டல் இ புக் எனும் இந்த வகைப் புத்தகங்களின் எதிர்காலம் பற்றியும் பெரும் நம்பிக்கை  கொண்டிருக்கிறார்.

‘‘விஷுவல் மீடியா வளர்ந்துக்கிட்டே இருக்குங்க. காட்சிகள் மூலமா ஒரு கதையைச் சொல்லும்போது அது நிச்சயம் ஆடியன்ஸுக்குப்  பிடிக்கும். இங்கே ஒரு காலத்தில் சக்கை போடு போட்ட காமிக்ஸ் புத்தகங்களே இதுக்கு சாட்சி. திரைப்படங்களாலதான் காமிக்ஸ்  புத்தகங்கள் அழிஞ்சுடுச்சுன்னு சொல்றதுக்கில்ல. ஒரிஜினல் காமிக்ஸ் புத்தகங்களும், காட்சி ரீதியா விரியும் சினிமாக்களும் இங்க பெரிய  அளவுல உருவாகாததாலதான் ரெண்டுமே வளர முடியாம இருக்குன்னு நினைக்கிறேன். நாம் சினிமா பண்ணும்போது கூட காட்சிக்கு  முக்கியத்துவம் கொடுத்து ஒரு சீன் பண்ணினா, அதைப் புரிஞ்சுக்காம ‘வசனத்தில் என்ன பன்ச் இருக்கு’ன்னு கேப்பாங்க. உலக அளவுல  பாருங்க... சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஆண்ட்மேன்னு காமிக்ஸா வந்த கதைகளை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள்தான் பெரிய  ஹிட் அடிச்சிருக்கு. தமிழ் சினிமாவும் அப்படி மாறுறதுக்கான முன் முயற்சிதான் இது. ஒருவேளை இந்தக் கதை எல்லோருக்கும்  பிடிச்சிருந்தா சினிமாவா எடுக்கும் முயற்சியிலும் இறங்குவேன்!’’ - நம்பிக்கையாய் முடிக்கிறார் நந்தினி

- டி.ரஞ்சித்