வாசிப்பு என்றைக்கும் அழியாது!



2005ம் ஆண்டு ஒரு சாதாரண திருமண மண்டபத்தில் 75 அரங்குகளோடு துவங்கப்பட்ட ஒரு புத்தகக் கண்காட்சி, இன்றைக்கு 235  அரங்குகளைக் கொண்டு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய புத்தகக் கண்காட்சியாய் வளர்ந்திருக்கிறது. ‘புத்தகமே விற்காது’ என்று  கருதப்பட்ட ஈரோடு எனும் தொழில் நகரத்தில் நடக்கும் இந்தப் புத்தகக் கண்காட்சிதான் இந்த ஆண்டு 7 கோடி ரூபாய் விற்பனையை  எட்டியிருக்கிறது. இந்த வெற்றியை சாத்தியப்படுத்திக் காட்டியதில் இக்கண்காட்சியை நடத்துகிற ‘மக்கள் சிந்தனைப் பேரவை’யின் நிறுவனர்  ஸ்டாலின் குணசேகரனின் பங்கு முக்கியமானது.

‘‘ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அறிவு சார் உற்பத்தி மிகவும் அவசியம். புத்தக வாசிப்பு மட்டுமே அதனைச் சாத்தியப்படுத்தும் என  நம்புகிறோம். ஆகவேதான், ‘கடந்த கால இந்தியாவைப் படிப்போம்... எதிர்கால இந்தியாவைப் படைப்போம்!’ என்கிற வார்த்தைகளை  எங்களது தாரக மந்திரமாக வைத்திருக்கிறோம்’’ எனத் துவங்குகிறார் ஸ்டாலின் குணசேகரன் நம்பிக்கையாக!



‘‘தொழில் நகரமான ஈரோட்டில் புத்தகம் விற்கும் என்கிற நம்பிக்கை எப்படி வந்தது?’’

‘‘இதே கேள்வியைத்தான் துவக்கத்தில் பதிப்பாளர்களும் கேட்டார்கள். இதனால்தான் தமிழகத்தின் முக்கிய புத்தக நிறுவனங்கள் கூட தங்கள்  கிளையை ஈரோட்டில் துவங்கவில்லை. இந்நிலையை மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்துப்  பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்கள் மத்தியில் நூல் வாசிப்பின் தேவை குறித்து உரை நிகழ்த்தினேன். தொடர்ச்சியாக வணிகர்  சங்கங்கள், தொழிற்சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், மாணவர் கூட்டமைப்புகளில் எல்லாம் பேசி, புத்தகக் கண்காட்சிக்கான ஆதரவைத்  திரட்டினோம். முதல் ஆண்டிலேயே விற்பனை இரண்டு கோடியை எட்டியதும்தான் ஈரோட்டின் மீது பதிப்பாளர்களின் பார்வை திரும்பியது!’’

‘‘இந்த வெற்றியும் வளர்ச்சியும் எப்படி சாத்தியமானது?’’

‘‘முதலில் மக்களை வரவழைப்பது பெரிய சவாலாக இருந்தது. அதனால்தான் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணமே இல்லை என  அறிவித்தோம். பொருளாதாரம் என்பது அடுத்த சவால். நுழைவுக்கட்டணம் இல்லை, அரங்குகளுக்கு குறைந்த வாடகைதான் வசூலிக்கிறோம்.  அதனால் கிடைக்கும் வருவாய் 30 சதவீதம்தான். மற்றபடி செலவுகளுக்கு இப்போது விளம்பரதாரர்கள் முன் வருகிறார்கள். ஆரம்பத்தில்  எங்கள் கையிருப்பையே செலவழித்தோம். இங்கே வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த, ‘ஈரோடு வாசிக்கிறது’ என்கிற முழக்கத்தை  முன்னெடுத்து, 2012ம் ஆண்டு 12 ஆயிரத்து 500 கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட மராத்தான் ஒன்றை நடத்தினோம்.  கடந்த ஆண்டு  ஈரோடு வ.உ.சி மைதானத்தில் 15 ஆயிரம் பேர் கலந்துகொண்டு ஒரு மணி நேரம் வாசிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினோம்.  நூல்  வெளியீட்டுக்கெனவே சிறப்பு அரங்கம் ஒன்றையும் அமைத்துள்ளோம்.

உலகத்தமிழர்களின் படைப்புகளை விற்பதற்காக ‘உலகத்தமிழர் படைப்பரங்கம்’, படைப்பாளர்களுடன் வாசகர்கள் கலந்துரையாடுவதற்காக  ‘படைப்பாளர் மேடை’ ஆகியவற்றை அமைத்துள்ளோம். புத்தகம் வாங்குவதற்கான சேகரிப்புக்கென ‘உண்டியல்’ திட்டத்தை துவங்கி அதனை  வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். அதிக நூல்களை வாங்குபவர்களுக்கு ‘நல்வாசகர்’ சான்றிதழ் வழங்கி வாசிப்பை ஊக்குவிக்கிறோம்.
இப்போது இங்கே ஆண்டுக்கு சராசரியாக ஆறு லட்சம் மக்கள் வருகிறார்கள். இந்தக் கண்காட்சியின் இன்னொரு முக்கிய அம்சம், ஒவ்வொரு  நாளும் மாலை நடைபெறும் சிந்தனை அரங்கம்தான். அரசியல், அறிவியல், வரலாறு எனப் பல துறை சார்ந்த சிந்தனையாளர்களின்  பேச்சுகளைக் கேட்பதற்காக பல ஊர்களிலிருந்தும் மக்கள் வருகின்றனர். 2009 மற்றும் 2014ம் ஆண்டில் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்  வந்திருந்தபோது ஒரு லட்சம் பேர் பெரும் திரளாக வந்திருந்தனர். மயில்சாமி அண்ணாதுரை, இறையன்பு, நடிகர் சிவகுமார், தமிழருவி  மணியன், தா.பாண்டியன் என பலரும் கலந்துகொண்டு பேசியுள்ளனர்!’’  

‘‘ஈரோட்டில் அதிகம் விற்பனையாவது எது?’’

 ‘‘பொதுவாகவே இலக்கியம், வரலாறு மற்றும் அறிவியல் தொடர்புடைய நூல்கள் அதிகம் விற்கின்றன. பள்ளி மாணவர்கள் அதிகம்  வருவதால் அவர்களுக்கான கதை மற்றும் பொது அறிவு நூல்கள் விற்கின்றன. குறிப்பாக இந்த ஆண்டு அப்துல் கலாம் அவர்களின்  ‘அக்னிச்சிறகுகள்’, ‘எழுச்சி தீபங்கள்’, ‘இந்தியா 2020’ போன்ற நூல்களும் அவரது பேச்சுகள் அடங்கிய குறுந்தகடுகளும் அதிகம்  விற்பனையாகியுள்ளன!’’

‘‘உங்களின் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ என்பது என்ன மாதிரியான அமைப்பு?’’

‘‘ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான அறிவுசார் வளர்ச்சியே எங்களது நோக்கம். இன்று தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. நமக்குத்  தேவையான தகவல்களை புத்தகங்களில் தேடுவதைவிடவும் இணையத்தில் தேடுவது எளிதானதாக மாறிவிட்டது. இப்படி வாசிப்பின்  வடிவங்கள் மாறலாமே தவிர, வாசிப்பு என்றைக்கும் ஒழியவே ஒழியாது. மக்கள் சிந்தனைப் பேரவை சார்பாக தமிழ்நாடு முழுவதிலும்  இதுவரை 200க்கும் மேற்பட்ட வாசகர் வட்டங்கள் துவங்கப்பட்டு, செயல்படுகின்றன. ‘ஈரோடு வாசிக்கிறது’ என்கிற முழக்கத்தை விரைவில்  ‘தமிழ்நாடு வாசிக்கிறது’ எனும் முழக்கமாய் முன்னெடுக்கப் போகிறோம்!’’

- கி.ச.திலீபன்
படங்கள்: ஆர்.ஜெய்.ராஜா