கபாலி ரகசியம்!



ரஜினி 40 கொண்டாட்டம்

தனது ரசிகர்கள் மட்டுமில்லை... யாருமே எதிர்பார்க்காத ஒரு டைட்டிலோடு வந்திருக்கிறார் ‘கபாலி’ ரஜினி. கடந்த ஆகஸ்ட் 18ம் தேதியோடு  அவர் திரையுலகில் தடம் பதித்து 40 ஆண்டுகள் நிறைவு. கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ஸ்பெஷல் போட்டோஷூட்... அடுத்த மாதம்  மலேஷியாவில் ஷூட்டிங்... என ஒரு ஃப்ரெஷ் ஹீரோ போல பரபரக்கிறார் சூப்பர் ஸ்டார். ரஜினிக்குப் பிடித்த அந்த கபாலி கேரக்டர்  யார்? அதன் பின்னணி என்ன? என விசாரித்தால் ஆச்சரியங்கள் கொட்டுகின்றன...

* ‘லிங்கா’விற்குப் பிறகு ரஜினியின் அடுத்த படம் ‘காளி’ அல்லது ‘கண்ணபிரான்’ எனத் தகவல்கள் கசிந்தன. நீடித்த சஸ்பென்ஸுக்கு  முற்றுப்புள்ளியாக, டைட்டில் முடிவான உடனே இயக்குநர் ரஞ்சித், ட்விட்டரில் ‘கபாலி -மகிழ்ச்சி’ என அதிகாரபூர்வமாக  அறிவித்திருக்கிறார்.



* இது ஒரு கேங்ஸ்டர் கதை என்பதை ரஞ்சித் சொல்லியிருக்கிறார். மயிலாப்பூரில் வாழ்ந்த நேர்மையான தாதா ஒருவர்தான் இந்தக் ‘கபாலி’  என தகவல்கள் கசிகின்றன. அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி, கற்பழிப்பு என்று அநீதியின் எந்தப் பக்கமும் சாயாத கபாலி,  பிழைப்பிற்காக மலேசியா செல்கிறான். அங்கே உள்ள மலாய் மக்களின் மனதில் கபாலி எப்படி தலைவனாய் உயர்கிறான் என்பதே படத்தின்  கதை என்கிறது கோலிவுட்.

* மன நிம்மதிக்காக அடிக்கடி இமயமலை செல்லும் ரஜினி, இயல்பிலேயே சிவபக்தர். ‘அருணாசலம்’, ‘படையப்பா’, ‘லிங்கா’ வரிசையில்  ‘கபாலி’யும் சிவநாமமாக அமைந்ததில் ரஜினிக்கு செம குஷி.



* படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயர் கபாலீஸ்வரன் என்பதால், ‘கபாலீஸ்வரன்’ என்றே டைட்டில் வைக்க நினைத்திருக்கிறார்கள். ஆனால்,  ‘பாபா’ போல ஆன்மிகக் கதையாக யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த சுருக் நறுக் கபாலி!

* மிகவும் பக்குவப்பட்ட கேங் லீடராக ரஜினியும், அவர் மனைவியாக ராதிகா ஆப்தேவும், மகளாக தன்ஷிகாவும் நடிக்கின்றனர்.  ‘அட்டகத்தி’ தினேஷ், ‘மெட்ராஸ்’ கலையரசன் ஆகிய தெரிந்த முகங்கள் தவிர புதுமுகங்கள், மலேஷிய நடிகர்கள் நிறைய பேர்  அறிமுகமாகின்றனர்.

* முதல் போட்டோ ஷூட்டில் ரஜினியை பல கெட்டப்களில் ட்ரையல் பார்த்துவிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட கெட்டப்போடு இன்னொரு  ஃபைனல் ஷூட் நடத்த இருக்கிறார்கள். அதன் பிறகே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும்!

* செப்டம்பர் இரண்டாம் வாரம் மலேசியாவில் தொடங்கும் படப்பிடிப்பு, கேரளாவில் நிறைவடைகிறது.

* கமலின் ‘நாயகன்’ மாதிரி ஒரு படம் பண்ணுவது ரஜினியின் நெடுநாள் ஆசை. மணிரத்னத்துடன் ‘தளபதி’ செய்ததும் நாயகன் போலவே  டான் கதையோடு ‘பாட்ஷா’ செய்ததும் அந்த ஆவலில்தான். ரஜினிக்கு தொட்டதெல்லாம் கமர்ஷியல் ஹிட்தான் என்றாலும் நல்ல படம்  என்ற விதத்தில் ‘நாயகன்’ உயரம் தொடவில்லை. ‘கபாலி’ அந்தக் குறையை நீக்கும் என்பதே ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

* பக்கா ஆக்‌ஷன் கதையான ‘கபாலி’யில் பாடல்கள் குறைவுதான். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை அந்தக் குறையே தெரியாமல்  செய்யும் என்கிறார்கள்.

* மலேஷியாவின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழர்களின் துயரம் தோய்ந்த வரலாறும் படத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் என்றும் ஒரு  தகவல் உலவுகிறது.

* ஆயிரம்தான் இருந்தாலும் ‘கபாலி’ எனும் தலைப்பில் ரஜினி ரசிகர்கள் பலருக்கும் அதிருப்தி. ஆனால், டைட்டில் உறுதியான அடுத்த  விநாடியே வைரல் ஹிட் அடித்து பெரிய அளவில் ரீச் ஆகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

* ரஜினிக்கு இதில் இளமை கெட்டப் கிடையாது. எல்லாமே மிடில் ஏஜ் பருவம்தான். ஒரிஜினல் தாடியும் வயதுக்கேற்ற விக்கும் உண்டு.

* ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷனில் நான் தலையிட மாட்டேன் என ரஜினி ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார். ரஞ்சித் தனக்கு வேண்டிய  ஆட்களை மட்டும் தேர்ந்தெடுக்கிறார் என குற்றச்சாட்டுகள் எழ, ‘‘அவர் கதைக்கும் கேரக்டருக்கும் பொருத்தமாத்தான் தேர்ந்தெடுத்திருக்கார்’’  என ஃபுல்ஸ்டாப் வைத்துவிட்டாராம் ரஜினி!

(‘கபாலி’ என பெயர் உறுதியானதுமே, டைரக்டருக்கு முன்பாக ரஜினி ரசிகர்கள் பிஸியாகி இணையத்தில் உருவாக்கிக் கொட்டிய  போஸ்டர்களில் சில இந்தக் கட்டுரைப் பக்கங்களில்...)

சூப்பர் ஸ்டாரின் 40 ஆண்டு சினிமா வாழ்வை நடிகர் சங்கமே விழா எடுத்துக் கொண்டாட வேண்டியது. ஆனால் தேர்தல் பிஸியில்  இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது சங்கம். இதனால் சத்தமில்லாமல் விழா எடுத்து கொண்டாடித் தீர்த்திருக்கிறது `தலைவர் ரஜினியின் முரட்டு  பக்தர்கள்’ என்கிற ஃபேஸ்புக் குழு. சிதம்பரம் நகரில் களைகட்டிய இந்த பிரமாண்ட விழாவில் ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜபகதூர்  கலந்துகொண்டது ஹைலைட்!

வெறும், ‘ஸ்வீட் எடு; கொண்டாடு’ என்பதோடு நிற்கவில்லை இந்த விழா. நாலாயிரம் பேருக்கு அன்னதானம், நாற்பது விவசாயிகளுக்கு  பட்டம் சூட்டுதல், நாற்பது பேர் கண்தானம், நாற்பது பேர் உறுப்புதானம், நாற்பது பேர் ரத்ததானம் என பிரமாண்டப்படுத்திவிட்டார்கள்.  முதல்முறையாக சூப்பர் ஸ்டார் பற்றி பேராசிரியர்கள் ஒன்று கூடி ஒரு கருத்தரங்கமும் நடத்தி பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். ரஜினி  நடித்த ‘அபூர்வ ராகங்கள்’ தொடங்கி ‘லிங்கா’ வரை எல்லாப் படங்களின் முக்கிய காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பு ஒன்றும் இதே  விழாவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘‘2013ம் வருஷம் இருபது ரசிகர்கள் சேர்ந்து ஆரம்பிச்ச குழு இது. எல்லாருமே இருபத்தஞ்சு வருஷமா ரசிகர்கள். அரசியல், ஆன்மிகம்னு  சூப்பர் ஸ்டார் எங்க போனாலும் அவர்கூட நடக்க ரெடியா இருக்கிற பக்தர்கள் நாங்க! அதனாலதான் `தலைவர் ரஜினியின் முரட்டு  பக்தர்கள்’னு பேர் வச்சோம்!’’ என்கிறார் இதன் நிர்வாகிகளில் ஒருவரான திருவள்ளூர் வெங்கட்.

‘‘கடந்த ரெண்டு வருஷமா அவர் போற ரூட்லயே நாங்க இமயமலைக்கு போறோம். அவர் உடம்புக்கு முடியாம இருந்தப்பவும்,  ‘கோச்சடையான்’ படம் ரிலீசானப்பவும் நாங்க பாபா குகையில போய் வேண்டிக்கிட்ேடாம். முரட்டு பக்தர்கள்னு சொன்னாலே தலைவருக்கு  நல்லா தெரியும். எப்பவுமே ஒரு புன்சிரிப்போடு எங்களை வரவேற்பார்!’’ என்கிறார் மதுரையைச் சேர்ந்த காமாட்சி நாதன் உற்சாகமாக!

‘‘இந்த நிகழ்ச்சிக்கு சுமார், ஆயிரத்து ஐந்நூறுக்கும் அதிகமான ரசிகர்கள் குவிவாங்கன்னு நாங்களே எதிர்பார்க்கல. ரஜினிக்கு விழான்னதும்  நினைவுக்கு வந்தது அவர் நண்பர் ராஜபகதூர்தான். இன்னைக்கு நினைச்சாலும் அவர் கோடீஸ்வரன்தான். ஆனா, ‘எனக்கு பணம்  முக்கியமில்ல. அவரோட நட்பு மட்டும் போதும்’னு வாழுறவர். ‘மறுபடியும் ஒரு தடவை நாங்க இரண்டு பேரும் சேர்ந்து டிரைவராவும்,  கண்டக்டராவும் வேலை பார்க்கணும்னு பேசி வச்சிருக்கோம். அது எப்போ நடக்குமோ’ன்னு அவர் மேடையில் பேசினப்போ  கண்கலங்கிட்டோம்!’’ என நெகிழ்கிறார் சிதம்பரத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார்.

- பேராச்சி கண்ணன்
- மை.பாரதிராஜா