இனி விமானங்கள் தொலையாது!



மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு

கடலில் விழுந்த ஒரு விமானம்... நம் மானத்தையே கப்பல் ஏற்றிவிட்டது சமீபத்தில். அதையெல்லாம் கண்டுபிடித்து மீட்கும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்றே ஒரு கட்டத்தில் பேசப்பட்டது உண்மை.

அது பொறுக்காமல்தான் இப்படியொரு கருவியை உருவாக்கியிருக்க வேண்டும் மயிலம் பொறியியல் கல்லூரி மாணவிகளான வி.சிவப்பிரியாவும் சி.பாண்டி மீனாட்சியும். இவர்கள் உருவாக்கியுள்ள இச்சிறு கருவியை மட்டும் விமானத்தின் கறுப்புப் பெட்டியோடு இணைத்துவிட்டால், அந்த விமானம் தொலைந்து போக வாய்ப்பே இல்லை என்கிறார்கள்!

‘‘பொதுவா ஒரு விமானம் விபத்துக்குள்ளானதில் இருந்து ஒரு மாசத்துக்குள்ள அதன் கறுப்புப் பெட்டியில் இருந்து தகவலை சேகரிக்கலைன்னா அதுக்கு அப்புறம் அதைக் கண்டுபிடிக்கிறது கஷ்டம். மாயமான மலேசிய விமானம் முதல் நம்ம ஊர்ல காணாம போன கடற்படை விமானம் வரை இதுதான் பிரச்னை.

அந்தக் கறுப்புப் பெட்டியை சுலபமா கண்டுபிடிக்கத்தான் இந்தக் கருவி உதவுது!’’ என அறிமுகம் தருகிறார் இதற்கு வழிகாட்டியாக இருந்த ஆய்வு பொறியாளர் ம.ராஜபார்த்திபன். ‘‘இது ஒரு தனித்த கருவி இல்ல. விமானத்தோட கறுப்புப் பெட்டியையே கொஞ்சம் திருத்தி அமைக்கிற செட்டப் இது.

இந்த கான்செப்ட்படி விமானத்துல ரெண்டு கறுப்புப் பெட்டி பொருத்தப்படணும். விமானத்தில் கோளாறு ஏற்பட்டு கன்ட்ரோல் ரூமுக்கும் அதுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டா, உடனே ஒரு கறுப்புப் பெட்டி மட்டும் தானா விமானத்திலிருந்து விடுவிக்கப்பட்டு பாராசூட் மூலமா கீழே இறங்கிடும்!’’ என்கிற சிவப்ரியாவும் பாண்டி மீனாட்சியும் எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இறுதி ஆண்டு மாணவிகள்.

‘‘கீழே இறங்கும்போதே அந்தக் கறுப்புப் பெட்டி லேசர் ஒளி எழுப்பிக்கிட்டு இறங்கும். தண்ணியில விழுந்தாலும் மிதக்கும். அது கூடவே ஜிக்பீ மற்றும் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட சென்சார் பால்ஸ் ஒரு கிலோமீட்டருக்கு ஒண்ணுங்கற விகிதத்துல விமானத்துல இருந்து விழுந்துக்கிட்டே இருக்கும். இந்த சென்சார் பந்துகள் எந்த திசையில் எவ்வளவு தொலைவில் இருக்குனு துல்லியமா ட்ராக் பண்ணிப் பார்த்துட முடியும். இதை ஃபாலோ பண்ணினா விமானத்தைக் கண்டுபிடிக்கிறது ஈஸி!’’ என்கிறார் பாண்டி மீனாட்சி உற்சாகமாக!

இரு வித சர்கியூட் போர்டு கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கருவி சோலார் பவர் மூலம் இயங்கக் கூடியது. சூரிய ஒளியே இல்லாவிட்டாலும் ஒரு வருடம் வரை பேட்டரி மூலம் இயங்குமாம். 1 கி.மீ வரை சிக்னலை அனுப்பவும் பெறவும் முடிகிற இந்தக் கருவியை வடிவமைக்க இவர்களுக்கு செலவான தொகை... வெறும் 2,500 ருபாய்!இது இல்லாமலா பெரிய பெரிய விமானங்களைத் தொலைக்கிறோம்!

- எம்.நாகமணி