நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.



உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு, மேலே மேலே பறந்து செல்லுங்கள்.

சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு  ஆகஸ்ட் 23ம் தேதியன்று நடக்கவிருக்கிறது. அத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் இளைஞர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். தீவிரமாகத் தயாராகி இருப்பீர்கள். கூடுதலாக சில அடிப்படைகளை மட்டும் தெரிந்துகொண்டால் நல்லது. முதன்மைத் தேர்வு (Main) ஒட்டுமொத்தமாக அறிவுக்கூர்மையையும், ஆழமான புரிதலையும் கொண்ட நிர்வாகத் திறமை உடையவர்களை இனங்காணும் தேர்வு. அன்றாட நிகழ்வுகளை வெறும் தகவல்களாகப் புரிந்துகொள்ளுதல், மேலோட்டமாக வாசித்தல், மனப்பாடம் செய்தல் போன்றவை இந்த தேர்வுக்கு உதவாது. ஆழமான புரிதல் அவசியம்.

பொது அறிவுத் திறனை அறியும் வகையில், தாள் IIலிருந்து தாள் V வரை மொத்தம் நான்கு தாள்களை (Four Papers) உள்ளடக்கியதாக சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. அன்றாட நிகழ்வுகள் மற்றும்  பொது அறிவு சார்ந்த செய்திகளை நன்கு புரிந்து, பகுத்தறியும் தன்மை கொண்டவர்கள் இந்த நான்கு தாள்களிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு வெகு எளிதாக விடை அளிக்க முடியும். எந்த ஒரு பாடப் பிரிவிலும் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நிர்வாகத்தை திறம்பட மேற்கொள்ள தேவையான பொதுஅறிவுத் தகவல்களை ஒருவர் பெற்றிருக்க வேண்டும் என்பதை அறியும் வகையிலேயே இத்தேர்வின் கேள்விகள் அமையும்.

சமூக அமைப்பில் உள்ள பல்வேறு பிரிவுகள், பொருளாதாரக் கட்டமைப்பு, அவற்றின் குறிக்கோள், முரண்பாடுகள் போன்றவற்றின் அடிப்படைக் காரணங்களை நன்கு ஆராய்ந்து சரியான தீர்வுகளை எடுத்து நிர்வகிக்கும் திறன் உள்ளதா என்பதை அறியும் வகையிலேயே கேள்விகள் கேட்கப்படும். போட்டியாளர்கள் கேள்விகளின் உட்கருத்தைப் புரிந்துகொண்டு பல கோணங்களிலும் ஆராய்ந்து தாங்கள் எடுக்கும் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் பதில்களைத் தரவேண்டும்.

தாள் VI மற்றும் VII என்பவை ஒரு விருப்பப் பாடத்திற்கான (Optional Papers) தாள்கள் ஆகும். இந்தப் பிரிவில் கேட்கப்படும் கேள்விகள்  பட்டப்படிப்பை விட தரம் உயர்ந்ததாக, அதே சமயம் முதுகலைப் பட்டப் படிப்பின் தரத்தைவிட சற்று குறைவானதாக  வடிவமைக்கப்பட்டுள்ளன. பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற விருப்பப் பாடங்களின் தரம் அப்பிரிவுகளின் பட்டப் படிப்புகளுக்கு இணையாக இருக்கும்.

இந்திய மொழிகளில் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு மொழியிலும், ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்கப்படும். கருத்துக்களை தெளிவாகவும், எளிமையாகவும் ஆங்கிலத்திலும், ஏதாவது ஒரு இந்திய மொழியிலும் வெளிப்படுத்தும் ஆற்றல் உள்ளதா என்பதை அறிவதே இதன் நோக்கமாகும். ஒவ்வொரு தாளுக்கும் வரையறுக்கப்பட்ட மதிப்பெண்கள் 300 ஆகும்,

ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 25 சதவீதம் எடுத்து இருந்தால்தான் தகுதி உடையவர்களாகக் கருதப்பட்டு அவர்களின் கட்டுரை (Essay), பொதுஅறிவு (GS), மற்றும் விருப்பப் பாடத்தில் (Option) பெற்ற மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தர வரிசை நிர்ணயம் செய்ய எடுத்துக்கொள்ளப்படும்.
அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களிலிருந்து தேர்வு எழுதுபவர்களுக்கு மொழிப்பாடப் பிரிவில் தேர்வெழுத வேண்டியதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்ட பகுதியை புரிந்துகொண்டு விடையளித்தல், சுருக்கி எழுதுதல், சிறிய கட்டுரைகள், சொற்களை சரியாக பயன்படுத்துதல்,
ஆங்கிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் மொழிபெயர்த்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் போன்றவை இந்தத் தாள்களில் இடம்பெறும். இந்த இரண்டு தாள்களில் பெறும் மதிப்பெண்கள் தகுதித் தேர்வுக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.

முதல் தாள் (Paper -1) கட்டுரைகள் எழுதவேண்டிய ஒன்று. பல்வேறு தலைப்புகளில் பல்வேறு பிரிவுகளிலிருந்து கட்டுரைகள் கேட்கப்
படும். அவற்றிலிருந்து வரையறுக்கப்பட்ட விதத்தில் கட்டுரைகளை எழுத வேண்டும். கட்டுரையின் தலைப்பை சரியாகப் புரிந்துகொண்டு கருத்துகளை கோர்வையாக ஏற்புடைய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எழுத வேண்டும். கட்டுரைகள் அடங்கிய தாளின் மொத்த மதிப்பெண்கள் 250 ஆகும்.

தாள் II என்பது பொது அறிவு முதல் பிரிவை குறிக்கும். இது, இந்திய பாரம்பரியம், கலாசாரம், வரலாறு, உலகப் புவியியல் மற்றும் சமுதாயம் ஆகியவை அடங்கியது. இதற்கான மதிப்பெண்கள் 250 ஆகும்.

இப்பிரிவின் உட்பிரிவுகள்

*கலைகளின் முக்கிய பரிணாமங்கள், பண்டைக்கால, இடைப்பட்ட, தற்கால இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகள்
*பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்திலுள்ள நவீன இந்திய வரலாறு முதல் நிகழ்காலம் வரையுள்ள முக்கியமான சம்பவங்கள், பிரமுகர்கள் (Personalities) மற்றும் விளைவுகள்(Issues)
* சுதந்திரப் போராட்டம் - அதன் பல்வேறு கட்டங்கள், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து
பங்கெடுத்துக் கொண்டவர்களின் முக்கிய பங்கு*சுதந்திரத்திற்குப் பின் ஒருங்கிணைத்தல் மற்றும் நாட்டின் மறுசீரமைப்பு
*18ம் நூற்றாண்டின் உலக வரலாறு, தொழில்புரட்சி, உலகப்போர்கள், நாடுகளின்
எல்லைக்கோடுகளை மறுசீரமைத்தல், காலனி ஆதிக்கம், குடியேற்றத்திலிருந்து வெளியேறுதல் (Decolonisation). கம்யூனிசம், முதலாளித்துவம், பொதுவுைடமை கோட்
பாடுகள், அவற்றின் அமைப்பு, சமுதாயத்தில் நிகழ்ந்த தாக்கம்.
* இந்திய சமுதாயத்தின் குறிப்பிடத்தகுந்த பன்முகத் தன்மை.
* பெண்கள் அமைப்புகள் மற்றும் பெண்களின் பங்கு, ஜனத்தொகை மற்றும் அவை சார்ந்த பிரச்னைகள், வறுமை, வளர்ச்சி சார்ந்த தீர்வுகள், நகர்மயமாதல், அதற்கான தீர்வுகள்.
*இந்தியாவின் மீது உலகமயமாகுதலின் தாக்கம்
*சமூக மேம்பாடு, சாதிமனப்பான்மை, ரீஜினலிசம், மதசார்பற்ற நிலை
*உலக அளவில் பூகோள அமைப்பின் முக்கிய அம்சங்கள்
*உலகளவில் பரவிக் கிடக்கும் இயற்கை வளங்கள் (தெற்காசியா மற்றும் இந்திய துணைக்கண்டத்தை உள்ளடக்கியது) விவசாயம், தொழில், சேவைப்பிரிவு சார்ந்த தொழில்கள் இந்தியா மற்றும் உலகு தழுவியது.
*பூகம்பம், சுனாமி, சூறாவளி, புயல் போன்ற புவி சார்ந்த இடர்ப்பாடுகள் மற்றும் அவை தோன்றும் இடங்கள், நீர் ஆதாரங்கள் மற்றும் குளிர்ப் பிரதேசம்.
*குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள், தாவர இனம் மற்றும் விலங்கினங்கள், சூழல் மற்றும் மாற்றங்கள் ஆகிய பாடப்பிரிவுகள் பொது அறிவு முதல் தாளில் கொடுக்கப்பட்டுள்ளது. பொது அறிவு இரண்டாம் தாள் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்...

முனைவர் ப.சுரேஷ்குமார்
மண்டல வேலை வாய்ப்புத்துறை
துணை இயக்குநர் (ஓய்வு)