நீங்கள் குருவா..? ஆசிரியரா?



விழிப்புணர்வுத் தொடர்
‘ஆயிஷா’  இரா. நடராசன்

“நீங்கள் வகுப்பில் ‘ராம்’ என்பவருக்கு அறிவியல் போதிக்கும் ஆசிரியர் என்றால் உங்களுக்கு அறிவியல் மட்டும் தெரிந்தால் போதாது. ‘ராம்’ பற்றியும் தெரிய வேண்டும்.
- பேராசிரியர் யஷ்பால் (யஷ்பால் குழு அறிக்கையில்)

‘குழந்தைகளுக்கு பயமே இல்லை’ என்பது இன்று ஒரு பொது அபிப்ராயம். “பாருங்க சார்... உங்களை பார்த்து ஏதாவது பயம் இருக்கா..? தெனாவட்டு சார்... ஒரு விஷ் (வணக்கம் வைப்பது) பண்ணினா என்ன..? மரியாதையே போச்சு...” - இப்படி ஒரு வாசகம் அடிக்கடி கேட்கிறது. ஆசிரியர் குமைந்து போகிறார். “நாங்கள் எல்லாம் எப்படி படிச்சோம்..? குருன்னா நடுங்க வேணாமா..?” என வெந்த புண்ணில் ஆசிட் வீச்சு நடக்கும் காலம் இது. ஆசிரியர்கள் மனம் குமுறி பல்லைக் கடிக்கிறார்கள்.

* “உங்க கண் முன்னாடி வளவளனு பேசறான்... என்ன ஒரு சத்தம்... பயமே இல்லை சார்”
* “நீங்கள் நிற்கிறீர்கள்... சைக்கிள்ல இருந்து இறங்கினானா..? என்ன ஒரு திமிரு பாருங்க சார்”
* “உங்க பர்மிஷன் இல்லாமலே பாட்டில் எடுத்து தண்ணி குடிக்கிறான்... நாங்க படிக்கும்போது நடக்குமா.. எலும்பை எண்ணிருவார்...”

இப்படியான குரல்கள். இவை ஆசிரியர்களை நெளிய வைக்கின்றன. இந்தியா மாதிரி ஒரு நாட்டில், குழந்தைகள் உரிமை பற்றி உரத்த குரல்கள் பதிவாகும் ஒரு காலகட்டத்தில், ஆசிரியராகப் பணிபுரிய நீங்கள் நிறைய இழக்க வேண்டியிருக்கிறது. உங்கள் மனம், விதியை நினைத்து அழுகிறது; `Have I become a teacher.... at wrong times?’ குருவிடம் எப்படிக் கல்வி கற்க வேண்டும்? திருவள்ளுவரின் கூற்று என்ன?
‘உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும்
கற்றார் கடையரே கல்லாதவர்.’
- என்கிறார் வள்ளுவர்.

‘செல்வம் நிறைந்த  ஒரு இடத்தில்  வறியவர் - அதாவது உதவி கேட்கச் சென்றவர் எப்படி காலில் விழுந்து மன்றாடி உதவி கேட்பாரோ அதுபோலக் குருவிடம் பணிந்து கற்க வேண்டும். நமது குருகுலப் பார்வை இது. குருவானவர் பாதங்களைத் தொழுதால் மட்டுமே கல்வி சாத்தியம் என்கிறது நமது மரபு. நன்னூல் பாயிரத்தில் குரு என்பவர் யார் என்பதற்கு ஒரு இலக்கணம் இருக்கிறது.

‘குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலைமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்
அமைபவன்...’

என குருவுக்கு இலக்கணம் சொல்கிறது நன்னூல். குரு, தெய்வத்திற்கு ஒப்பானவர். மலைபோல் நிறைவானவர். மலர்போல் மாட்சிமை மிக்கவர். உயர்குணம் கொண்டவர் என்றெல்லாம் குருவுக்கு ஒரு ‘பில்டப்’ கொடுக்கும் நன்னூல், அவர் நம் குலத்தைக் காக்கும் தெய்வம் என குருவின் குலத்தை அடிக்கோடிட தவறவில்லை என்பதை  நாம் பார்க்க வேண்டும்; பல தமிழாசிரியர்களுக்கு கோபம் வரும். அதே நன்னூல் ஆசிரியர், மாணாக்கர் என்பவர் யார் என விளக்கும் இடத்தில்,

“தன் மகன் ஆசான் மகனே என் மகன்
பொருள் நனி கொடுப்போன் வழிபடுவோனே!”
- என்று சொல்லி விடுகிறார். ‘குருவுக்கு வழிபாடுகளைச் செலுத்தாமல் கற்றல்
சாத்தியமில்லை’ என்று பொருள்.
“பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
குணத்தொடு பழகி அவர் குறிப்பிற்சார்ந்து
இரு என இருந்து சொல்லெனச் சொல்லி
பருகுவன்...”

- என்று சொல்லும் நமது நன்னூல், ‘குரு எதைக் கட்டளை இட்டாலும் அதை மறுக்காது, முகம்கூட மாறாது செய்து, இருக்கச் சொன்னால் இருந்து, சொல்லச் சொன்னால் சொல்லி, வழிபட்டுப் படி’ என விளக்கம் தருகிறது. நமது மரபு, குருகுலக் கல்வியை உயர்த்திப் பிடித்த மரபாக உள்ளது. இங்கே நீங்கள் மனதார ஒருவரை குருவாக நினைத்து கற்றால்கூட  உங்கள் கட்டை விரலைக் காவு கேட்கும் உரிமை - வானளாவிய அதிகாரம்- குருவானவருக்கு உண்டு. அதனால் இந்த பரம்பரைக் கல்வி, ஜனநாயகத்திற்கு, மனிதநேயத்திற்கு, சமத்துவம் சகோதரத்துவத்திற்கு எதிரான கல்வி அமைப்பாக உள்ளதைக் காண்கிறோம். அர்ச்சுனனோடு ஒரு ஏகலைவனையும் உருவாக்கி, ஏகலைவனுக்குத் தர்மத்தை மறுக்கும் பலவீனத்தோடு அந்தக் கல்வி இருக்கிறது.



இதை உள்வாங்கிக் கொண்டு இன்றைய நமது வகுப்பறைக்குத் திரும்புவோம். இந்த வகுப்பறைக்குள் இருக்கும் சூழல் வேறு மாதிரியாக உள்ளதை நாம் காணலாம். இந்த வகுப்பறை, நமது மரபு எது எனப் பொதுவாக எல்லாரும்் சொல்லும் குருகுல மரபில், வர்ணாசிரம வழி வந்தது அல்ல. இது சமத்துவம் பேணும் வகுப்பறையாக உள்ளது. இங்கே...

* குலத்தை வைத்து மாணவர் பாகுபாடு இல்லை. யாவரும் குழந்தைகளே!
* வர்க்கத்தை சொல்லிப் பாகுபாடு இல்லை. எல்லாரும் மாணவரே!
* பிறந்த மரபு சார்ந்த கல்வி அல்ல... எல்லாருக்கும் ஒரே சிலபஸ்!
* ஆண்-பெண் வேற்றுமை இல்லை... இருவருக்கும் சம அந்தஸ்து!

இதில் சற்றே நிறை-குறைகள் இருக்கலாம். பிரிட்டிஷார் தனது அதிகாரத்தின் மூலம் துப்பாக்கி முனையில் இந்த வகுப்பறையை அறிமுகம் செய்தார்கள். குடுமி, பஞ்சகச்சம், வேட்டி,  இடுப்புத் துண்டு, மேலுக்கு சட்டை இல்லாமை, தீண்டாமை, இடுப்பில் துடைப்பம் கட்டுதல்... எல்லாவற்றையும் இந்த வகுப்பறைகள் துறந்து சீருடையோடு பொதுமேடையாக ஆனது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமக்குத் தன்னையும் அறியாமல் செய்த ஒரு பிரமாண்ட ேசவை, வரம் - இந்த வகுப்பறை! இது எங்கிருந்து வந்தது..? இங்கே 40 மாணவர்கள் இருக்கிறார்கள். ஒரு டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவாகலாம். ஒரு பண்டித ஜவஹர்லால் நேரு உருவாகலாம். இவர்களோடு ஒரு அண்ணல் அம்பேத்கர்; ஒரு மருத்துவர் முத்துலட்சுமி; ஒரு காப்டன் லட்சுமி உருவாகலாம். இந்த நாற்பது மாணவர்கள் முன் குரு இல்லை.

ஒரு ஆசிரியர் நிற்கிறார், யார் அவர்? இது எங்கிருந்து வந்தது..? ஐரோப்பாவிலிருந்து நமது ஆக்கிரமிப்பாளர்களால் அறிமுகமாக இந்த வகுப்பறையின் வேர்கள் கிரேக்கத்தில் உள்ளன. சோஃபிஸ்டுகள் எனும் வகை நாடோடி அறிவுஜீவிகள் அறிமுகம் செய்த கல்வி முறை இது. ‘இருப்பதைத் தேடித் திரட்டு... ஆனால் அப்படியே ஏற்காதே..! எதையும் கேள்விகளுக்கு உட்படுத்து’ எனும் சாக்ரடீசு வழிவந்த வகுப்பறை இது. குரு சொல்வதை அப்படியே குருட்டுத்தனமாக ஏற்பது இந்த கல்வியில் இல்லை. இங்கே பகுத்தறிவுக்கே சிம்மாசனம். பார்த்தல், கேட்டல், நுகர்தல், தொடு உணர்வு, சுவைத்தல், பரிசீலித்தல் எனப் புலன்வழி, தான் தன் மட்டில் ஆய்ந்தறிதலே சோஃபிஸ்ட் வழிமுறை!

* ‘சாக்ரடீசு ஒரு முட்டாள்’ என அவரது மாணவர் பிளாட்டோ தனது குடியரசு எனும் நூலில் பிரகடனம் செய்கிறார்!
* பிளாட்டோவின் வரைபட ஆக்கம் ரொம்ப கேலிக்குரியது என அவரது மாணவர் பிதாகரஸ் முழங்குவதைக் காணலாம்
* இவர்கள் அர்த்தம் கெட்டவர்கள் என இவர்களிடம் பயின்ற அரிஸ்டாட்டில் தனது ‘எத்திக்ஸ்’ நூலில் பதிவு செய்கிறார்.

இந்த கிரேக்க கல்வி முறையில் மனித அறிவின் தொகுப்பே பிரதான கதாநாயகன். ஒரு மாணவர் அறிவுத்தேடலில் தனது ஆசிரியரைக் கடந்து செல்கிறார். ஆசிரியரைத் தன் சகாவாக க் கருதி, தனது தேடலில் ஆய்ந்தறிதலில் ஒரு வழிகாட்டியாகக்  கொண்டு, அதேசமயம் அவரால் நுழையமுடியாத பாதையை தனதாக்கும் தைரியத்தை பெற்று மனித அறிவை அடுத்த படிநிலைக்கு உயர்த்துதல், கிரேக்க வகுப்பறையின் இயல்பு, கேள்விகளுக்கே இங்கே பிரதான மரியாதை.

* ஒரு விவேகானந்தர், ராமகிருஷ்ணரின் சீடர்
* ஒரு பிளாட்டோ சாக்ரடீசின் மாணவர்.

குருவிடம் சீடர் தீட்சை பெற்று அவரது கொள்கையை (முடிவடைந்த வடிவத்தை) பரப்புகிறவர். அவரைப் போலவே  வாழ்பவர். குருவின் பாதையை அட்சரம் பிசகாமல் பின்பற்றும் பலரை உருவாக்குவதே அவரது நோக்கம். அறிவு, தயாராக இருக்கிறது, அதை எடுத்துப் பரிமாறினால் போதும். குரு இட்ட கட்டளை அதுதான். இந்தப் பணிக்காக அடிபணிதல் முக்கியம். ஆனால், மாணவர் அப்படி அல்ல. ஆசிரியரோடு சேர்ந்து அறிவுத்தேடலில் ஈடுபட வேண்டும். அத்தேடலை விரிவாக்கிட புதிய புதிய கல்வி ஆராய்ச்சி  உத்திகளைக் கண்டடைந்து ஒரு கட்டத்தில் ஆசிரியரையே கடந்து செல்ல வேண்டும். இங்கே, அறிவு முடிந்த, மூடிய வடிவமல்ல... விரிவாகிக்கொண்டே போகும் தொடர்ச்சி... இங்கே அதை அப்படியே மனப்பாடமாக திரும்பச் சொல்லிப் பாராயணம் செய்வது கேலித்தனமானது. அதை  மாணவர் புரிந்துகொண்டு ஆய்வுக்கு உட்படுத்தி, பரிசீலித்து, சோதித்து மேலும் அதில் தான் புதிதாக கண்டுபிடிப்பதை சேர்த்து ஊக்கம் பெறவே கல்வி. எனவே, அவர் ஆசிரியரை மதிப்பார்.

அதேசமயம் அவரைத் துதிபாட வழிபட வேண்டிய அவசியம் இல்லை. நமது வகுப்பறையின் பிரமாண்ட சிக்கல் இங்கேதான் இருக்கிறது. வகுப்பறை, ஐரோப்பிய வழிவந்த கிரேக்கத்தின் ஆசிரியர்- மாணவர் வகுப்பறை. ஆனால் நமது மரபோ குரு-சீடர் மரபு. இது ஒரு ஆசிரியரை நிலைகுலைய வைக்கிறது. “நீங்க குரு... உங்ககிட்ட மாணவர்கள் பணிவா இருக்கணும்” என்று யாரோ குத்திக் காட்டும்போது நம் கண்களை இருள் சூழ்கிறது.  நம் அதிகாரத்தை நினைவூட்டுவது போல இருக்கிறது. ஆனால் இந்த (கிரேக்க) வகுப்பறையில் ஒரு மாணவருக்கு ஆசிரியர் பற்றி அச்சம் இருந்தால் அறிவுத் தேடல் சாத்தியமற்றுப் போகும். எனவே நமது வகுப்பறைகளில் அமைதி தவழ, வன்முறை ஓடிட நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நாமும், ஒரு மாணவரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் ஆத்திரத்தோடு எதிர்படும் சூழலில் நமக்குநாமே  எழுப்பிக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான்! நான் குருவா..? ஆசிரியரா?

(நான்காம் பாடவேளை முடிந்தது)