பதற்றமின்றி படியுங்கள் +2 உயிரி-விலங்கியலில் சென்டம் அள்ளுங்கள்!



+2 டிப்ஸ்


+2 உயிரியல் பாடம் தாவரவியல், விலங்கியல் ஆகிய  இரு பிரிவுகளை உள்ளடக்கியது. தாவரவியலில்  முழு மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறைகளை கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில் விலங்கியல் பாடம். “விலங்கியலில் மொத்தமே ஏழு பாடங்கள்தான். பாடங்கள் குறைவாக இருந்தாலும்கூட, இது மாணவர்களின் சென்டம் கனவை ரொம்பவே அசைத்துப் பார்க்கும். காரணம், இதில் வரிக்கு வரி முக்கியமான பாயின்ட்கள் உள்ளன. புத்தகத்தின் எல்லா பக்கங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். மாணவர்கள் திட்டமிட்டு தயாராக வேண்டும். நிதானமாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும்...” என்கிறார், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முதுகலை விலங்கியல் ஆசிரியர் கே.கே.தேவதாஸ். விலங்கியலில் முழு மதிப்பெண் பெறுவதற்கு அவர் தரும் ஆலோசனைகள்...

* உயிரியலைப் பொறுத்தவரை, தாவரவியலுக்கு 75 மதிப்பெண்கள். விலங்கியலுக்கு 75 மதிப்பெண்கள். விலங்கியல் பிரிவு பலவிதங்களில் முக்கியமானது. மனிதனின் உடற்செயலியலில் தொடங்கி நுண்ணுயிரியல், நோய்த்தடைக் காப்பியல், தற்கால மரபியல், பயன்பாட்டு உயிரியல், பரிணாமக் கோட்பாடுகள் என மருத்துவப் படிப்பிற்கான அடிப்படைப் பாடங்களில் பெரும்பாலானவை இப்பிரிவில் உள்ளன. எனவே தேர்வை மட்டும் மனதில் கொள்ளாமல் எதிர்காலத்தையும் கருதி, புரிந்து படித்து உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.  

* பெரும்பாலான மாணவர்களின் சென்டம் கனவுக்கு உலை வைப்பது ஒரு மார்க் கேள்விகளே! 100 பக்கங்கள் கொண்ட முதல் பாடத்திலிருந்து நான்கு ஒரு மார்க் கேள்விகள் வரும். 2, 6வது பாடங்களிலிருந்து தலா 3 கேள்விகளும், 4, 5வது பாடங்களிலிருந்து தலா 2 கேள்விகளும், 3, 7வது பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வியும் கேட்கப்படும். பழைய பொதுத்தேர்வுகளின் கேள்வித்தாள்களை புரட்டுவது உதவியாக இருக்கும். புத்தகத்தின் பின்பக்கம் உள்ள ஒரு மார்க் கேள்விகள் அனைத்தையும் படித்து வைத்துக் கொள்ளுங்கள்.

* மூன்று மார்க் கேள்விகள் 12ல் எட்டிற்கு விடையளிக்க வேண்டும். 4வது பாடமான தற்கால மரபியலில் மூன்று கேள்விகள் வரும். அதேபோல், 1, 3, 6வது பாடங்களிலிருந்து தலா 2 கேள்விகள் கேட்பார்கள். 2, 5, 7வது பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வி கேட்கப்படும். ஒருமுறை கேட்கப்படும் கேள்வியை அடுத்த முறை அப்படியே கேட்காவிட்டாலும் அதனோடு தொடர்புள்ள கேள்வியை கேட்பார்கள். அதனால் பழைய கேள்வித்தாள்களை வைத்து படிப்பது நல்லது. மேலும், 1,3,4,6,7வது பாடங்களை முழுமையாக  படித்தால் கூடுதல் நம்பிக்கையோடு தேர்வறைக்குச் செல்லலாம்.

* ஐந்து மார்க் கேள்விகள் 5ல் மூன்றுக்கு விடையளிக்க வேண்டும். கேள்வி எண் 31 கட்டாயக் கேள்வி. இந்தக் கேள்வி 3வது பாடமான நோய்த் தடைக் காப்பியலில் இருந்து கேட்கப்படும். இந்த பாடம் மிகவும் சிறியது. அதனால் முழுப் பாடத்தையும் படித்துவிடுங்கள். எப்படி கேள்வி வந்தாலும் விடை எழுதி விடலாம். 1, 2, 4, 7 ஆகிய பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வி கேட்கப்படும். இந்த நான்கு கேள்விகளில் இரண்டுக்கு பதில் எழுதவேண்டும். இதில் 2வது பாடமான நுண்ணுயிரியல் எளிமையானது. அடுத்ததாக, 4வது பாடத்தை படித்துவிட்டால்  ஐந்து மார்க் கேள்விகளில் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிடலாம்.



* பத்து மார்க் கேள்விகள் 4 கேட்கப்படும். இரண்டிற்கு விடையளிக்க வேண்டும். முதல் பாடத்திலிருந்து மட்டுமே இரண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அடுத்து 5, 6வது பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.

* முதல் பாடத்தில் அதிக பக்கங்கள் இருக்கின்றன. எனவே, ‘குருதி சுழற்சி’ என்னும் தலைப்பு வரை, அதாவது, முதல் 43 பக்கங்களை தெளிவாக படித்துக்கொண்டால் ஒரு பத்து மார்க் கேள்விக்கு எளிதாக பதில் எழுதிவிடலாம். மீதமுள்ள பக்கங்களைப் படித்தால் இரண்டாவது பத்து மதிப்பெண் கேள்விக்கும் பதில் எழுதிவிடலாம்.

* சுற்றுச்சூழல் அறிவியல் என்கிற 5வது பாடத்தில் 12 பத்து மார்க் கேள்விகள் இருக்கின்றன. எளிமையான பாடம். எழுதுவதும் சுலபம். 6வது பாடமான பயன்பாட்டு உயிரியலில் உள்ள முக்கியமான கேள்விகளையும்  முழுமையாக படித்துக்கொண்டால் இரு பத்து
மதிப்பெண் கேள்விகளை இப்பகுதியிலிருந்தும் எழுதலாம்.

* ப்ளூ பிரின்ட்டை நன்கு பார்த்து அதனடிப்படையில் படிப்பது நல்லது. பழைய கேள்வித்தாள்கள், புக்பேக் கேள்விகளையும் நன்கு படித்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். 10 மார்க் கேள்விகளை எழுதும்போது குறுந்தலைப்புகளை அடிக்கோடிட்டு எழுதுங்கள். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். நிதானமாக, தைரியமாக தேர்வறைக்குச் செல்லுங்கள். சென்டம் அள்ளுங்கள்.