பதற்றத்தைத் தவிர்த்தால் வெற்றி நிச்சயம்!



நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.


சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வின் இரண்டாம் தாள் ஆட்சிமுறை (Govermance), அரசியல் சாசனம், அரசியல், சமூக நீதி மற்றும் பன்னாட்டு உறவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இத்தாளை திறம்பட எழுத துணை நிற்கும் சில நூல்களைப் பார்க்கலாம்.  லட்சுமிகாந்த் எழுதிய Indian Polity, ரமேஷ் கே.அரோரா மற்றும் ரஜனி கோயல் எழுதிய இந்திய நிர்வாகம், எஸ்.பி.வர்மா மற்றும் எஸ்.கே.சர்மா எழுதிய ஒப்பீட்டு பொது நிர்வாகம், நமது பாராளுமன்றம். சுபாஷ் சுஷ்யாப் எழுதிய வில், மற்றும் உமா கபிலா எழுதிய நூல்கள் பயனளிக்கும்.

தாள் - 3 தொழில்நுட்பம், பொருளாதார மேம்பாடு, பல்லுயிரியல், சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் இடர் மேலாண்மை போன்ற பகுதி களை உள்ளடக்கியது. இந்தியப் பொருளாதாரம் சார்ந்த நூல்களை மிஸ்ரா மற்றும் புரி, உமாகபிலா தத் மற்றும் சுந்தரம் போன்றோர் எழுதியுள்ளனர். அவற்றை ஆதார நூல்களாக கொள்ளலாம். திட்டம், குருஷேத்ரா போன்ற மாத இதழ்களும் பயனளிப்பதாக இருக்கும். டி.ஆர்.குல்லர் எழுதிய புவியியல் சார்ந்த ஆதார நூல், N.C.R.T. வெளியீடுகள் மற்றும் Economic Survey போன்றவை உதவிகரமாக இருக்கும்.

தாள் - 4 Ethics, Integrity, Aptude. அடிப்படை உண்மைகளை புரிந்துகொண்டு முரண்பாடுகளை தாண்டி பல்வேறு பரிமாணங்களில் ஆலோசனை செய்து முடிவெடுக்கும் ஆற்றலை அறிவதே தாள்- 4ன் நோக்கம். பல்வேறு  நிர்வாகம் சார்ந்த சவால்களை case study முறையில் கொடுத்து அவற்றிற்கு எவ்வாறு தீர்வு காண்பது போன்ற நிர்வாக அனுபவம் சார்ந்த கேள்விகள் தாள்-4ல் கேட்கப்படுகின்றது. பொதுவாக, நடைமுறையில் உள்ள சட்டவிதிமுறைகளையும் மனித நேயத்துடனும் நன்கு ஆராய்ந்து சுமூகமாக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆற்றலையும் மதிப்பீடு செய்யும் முயற்சியே இந்த தாள்.



கட்டுரைத்தாள்

Essay paper கட்டுரைக்கென்று தனித்தாள் உள்ளது. அதற்கு 250 மதிப்பெண்கள். இரண்டு பிரிவுகளாக கொடுக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒரு கட்டுரை என்ற வகையில் மொத்தம் 2 கட்டுரைகள் எழுத வேண்டும். கட்டுரையின் தலைப்பை சரியாக புரிந்து உள்வாங்கிக்கொண்டு கருத்துக்களை கோர்வையாக எளிமையான நடையில் எழுத வேண–்டும். 1000 முதல் 1200 சொற்களுக்கு மிகாமல் அமையும் வகையில் எழுத வேண்டும். ஒரு வகையில் கட்டுரை எழுதுபவரின் மனோபாவத்தையும், ஆளுமைத்திறனையும் மதிப்பீடு செய்வதற்கும் இது உதவும். இதற்கும் முறையான பயிற்சி தேவை.

விருப்பப்பாடம்

ஒரு விருப்பப்பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில் இரண்டு தாள்கள் இருக்கும். ஒவ்வொன்றிற்கும் 250 மதிப்பெண்கள் என்ற வகையில் மொத்தம் 500 மதிப்பெண்கள். விருப்பப்பாடத்தை தேர்வு செய்யும்போதும் தங்களது விருப்பம், தேர்வு செய்த பாடத்திற்கு தேவையான ஆதார நூல்களின் இருப்பு, வழிகாட்டுதல் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு ஒரு பாடப்பிரிவை தெரிவு செய்து தேர்விற்கு தயாராக வேண்டும். நேர்முகத் தேர்விற்கு 275 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  எழுத்துத் தேர்விற்கு 1,750 மதிப்பெண்கள். மொத்த மதிப்பெண்கள் 2025 ஆகும். நேர்முகத் தேர்வின் கேள்விகள் முதன்மைத் தேர்வில் தகுதி அடைந்தவர்களின் Bio-Data  அடிப்படையில் அமையும். படித்த கல்வித்தகுதி, சிவில் சர்வீசஸ் பணியை தேர்வு செய்வதற்கான காரணம், ஒரு மொத்த ஆளுமைத்திறன், தொடர்புபடுத்தி சிந்திக்கும் ஆற்றல், சமயோசிதமாக யோசித்து விடையளிக்கும் திறன் ஆகியவற்றை அறியும் வகையில் நேர்க்காணல் இருக்கும்.

மாதிரி நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு பயிற்சி பெற்று தவறுகளை திருத்திக்கொண்டால் நேர்முகத் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள முடியும். எத்தகைய குடும்பப் பின்னணியாக இருந்தாலும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது என்பது அனைவருக்கும் சாத்தியமே. தன்முனைப்பு, விடாமுயற்சி, கடின உழைப்பு, காலம் கருதி செயல்படும் திறன் போன்றவை தனித்திறன்கள் அல்ல... எல்லோருக்கும் பொதுவானவை தான். இதுநாள் வரையிலான வெற்றியாளர்களை தொகுத்துப் பார்த்தோமானால் பல்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள் நிறைந்திருக்கிறார்கள். எனவே, தைரியமாகவும், பதற்றமின்றியும் தேர்வை எதிர்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

(நிறைவுற்றது)