தோல்வியை மறக்காதே..!



நீயின்றி அமையாது உலகு
முகில்

ஒட்டப்பட்டிருந்த பட்டியலை மீண்டும் ஒருமுறை நிதானமாகப் படித்தான் அவன். மேலிருந்து கீழாக ஒருமுறை. கீழிருந்து மேலாக ஒருமுறை. கடகடவென ஒருமுறை. நிறுத்தி நிதானமாக இன்னொரு முறை. ம்ஹூம். அவன் பெயர் அதில் இல்லை. அதிர்ச்சியாக இருந்தது. ‘ஒருவேளை, தெரியாமல் விடுபட்டுப் போயிருக்கலாம்’ என்றும் தோன்றியது. வேகவேகமாக கோச்சைத் தேடிச் சென்றான்.

“கோச், என் பெயர் பட்டியலில் இல்லையே?”
“உன் பெயர் எப்படி இருக்கும்?” என்றார் கோச்.

தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு. காரணம் அந்த சம்மர் கேம்ப் பாஸ்கட் பால் கோச்சிங்கில் அவனது துறுதுறு ஆட்டத்தை, வேகமாகப் பந்தைக் கடத்தும் லாகவத்தை லைக் செய்யாதவர்களே இல்லை. நிச்சயம், அவனுக்கு பல்கலைக்கழக அணியில் இடம் கிடைத்துவிடும் என்றுதான் காட் பிராமிஸாக நம்பிக் கொண்டிருந்தான். ஆனால், ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை?

“தம்பி, உனக்கு உயரம் குறைவா இருக்குது. நீ போய் ஜூனியர் அணியில விளையாடு” - சாதாரணமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார் கோச். அவன், முழுமையாக சார்ஜ் இறங்கிய ஐபோனாக அணைந்து போனான். என் வயது நண்பர்கள் அனைவருமே சீனியர் டீமில். நான் மட்டும் ஜூனியர் டீமிலா? அவமானம் குத்திக் கிழித்தது. அழுது கொண்டிருந்த அவனிடம் அம்மா வந்தாள்.

“எதற்கு அழுகிறாய்? அய்யோ, இவனைப் போய் தேர்ந்தெடுக்காமல் விட்டுவிட்டோமே என்று அந்த கோச் வருத்தப்படும் அளவுக்கு வருங்காலத்தில் உன் முன்னேற்றம் இருக்கவேண்டும். அதற்காக உழை!” - ஊக்கமருந்தைவிட வீரியமான வார்த்தைகளால் தன் மகனை உசுப்பினாள். அதற்குப்பின் அவன் அழவே இல்லை.

தினமும் காலையில் கோச் வருவதற்கு முன்பாகவே அவன் பேஸ்கட் பால் ஆடிக் கொண்டிருப்பான். மாலையில் அவர், ‘போதும் கிளம்பு’ என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளினால் மட்டுமே கிளம்புவான். நினைவில், கனவில், உணர்வில், எண்ணத்தில் எப்போதும் கூடைப்பந்தே துள்ளிக் கொண்டிருந்தது. அந்தத் தீவிரப் பயிற்சி, இடை விடாமுயற்சி அவனை ஜூனியர் அணியின் நட்சத்திர வீரர் ஆக்கியது. அவன் விளையாடும் ஆட்டங்களுக்கென தனிக் கூட்டமும் கூட ஆரம்பித்தது. மேட்ச் வின்னராக மிளிர்ந்தான். ஆட்டத்திறனால் அவன் புகழும் வளர்ந்தது, அப்படியே அந்த ஒரு வருடத்தில் அவனும் (10செமீ கூடுதலாக) வளர்ந்திருந்தான். அம்மா, சொன்ன வார்த்தைகளை 100 சதவீதம் உண்மையாக்கினான். அவனை நிராகரித்த கோச், வாரியணைத்து பல்கலைக்கழக அணியில் சேர்த்துக்கொண்டார். பின் அவன் பேஸ்கட் பால் உலகின் சூப்பர் ஸ்டார் ஆக உச்சம் தொட்டதெல்லாம் வரலாறு.



அவனது... இல்லையில்லை, அவரது பெயர் - மைக்கேல் ஜோர்டன். “தோல்வியடைவது என்பது எப்போதுமே வருத்தத்திற்குரியதே அல்ல. ஆனால், தோல்வியடைந்து விடுவோம் என்ற நினைப்பில் முயற்சியே செய்யாமல் ஒதுங்குவது மன்னிக்கவே முடியாத குற்றம். நான் தோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்” - ஜோர்டனின் சக்ஸஸ் மந்திரம் இதுவே. அமெரிக்காவின் ‘நேஷனல் பாஸ்கட்பால் அசோஸியேஷன்’ (NBA) வருடந்தோறும் புதிய, திறமையான கூடைப்பந்து வீரர்களைத் தேர்ந்தெடுக்கும். அதில் 1984ல் சிகோகோ புல்ஸ் அணிக்காக, ஜோர்டான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் பத்திரிகை, ‘ஒரு நாயகன் உதயமாகிறான்...’ என்று கொண்டாடியது. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஜோர்டனின் ஆரம்ப கால சாதனைகளும் ஜோராகவே இருந்தன.

1986ல் ஒரு போட்டியில் விளையாடும்போது, ஜோர்டனின் கால் உடைந்துவிட, அடுத்த 64 போட்டிகளில் விளையாட இயலாமல் போனது. ஒரு நட்சத்திர வீரருக்கு மிகவும் மோசமான சூழல் என்பது காயத்தால் முடங்கும் காலகட்டமே. காயத்திலிருந்து மீண்டு வந்தாலும், பழைய வேகத்தைத் தொலைத்து காணாமல் போனவர்கள் பலர் உண்டு. ‘இந்த மாதிரியான சோதனைகளும் தோல்விகளுமே தன்னை முழுவீச்சில் இயக்கும் எரிபொருள்’ என்று இயங்கிய அவர், நம்பிக்கை வற்றாத பயிற்சியால், ‘பழைய மைக்கேல் ஜோர்டனாக’ உடலால், மனதால் மீண்டு வந்தார். பந்து, கூடைக்குள் ஓய்வின்றி விழ ஆரம்பித்தது.

பலமுறை வருடத்தின் சிறந்த பிளேயர் பட்டம், பல்வேறு விளையாட்டு விருதுகள், ஒலிம்பிக்கில் தங்கம், சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த கூடைப்பந்து வீரர்களில் ஒருவர் என மிச்ச சொச்சமின்றி கூடைப்பந்தால் உச்சம் தொட்ட ஜோர்டன், சந்தித்த சறுக்கல்களும் அநேகம். அந்தச் சமயத்தில் ஜோர்டன் செய்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ‘ஒரு பெரிய வெற்றிக்குப் பின் சிறு சலிப்பும், ஒருவித மிதப்பும் தோன்றும். அல்லது சில சமயங்களில் விட்டுவிடலாம் என்ற மனநிலையும் ஏற்படும். அப்போதெல்லாம் நான் என் கண்களை மூடுவேன். என் பெயர் இடம்பெறாமல் போன அந்தப் பட்டியலை நினைத்துப் பார்ப்பேன். அதுபோதும். பழைய உத்வேகம் மீண்டும் எனக்குள் உருப்பெற்றுவிடும்.’

தன் வெற்றிகளை எல்லாம் எப்போதுமே ஜோர்டன் தன் இதயத்தில் ஏற்றிக் கொண்டதே இல்லை. அதேபோல தன் தோல்விகள் ஒன்றைக்கூட ஒருபோதும் மறந்து போனதும் இல்லை. தன் வெற்றிகளைப் பற்றி சிலாகித்ததைவிட, தன் தோல்விகளைப் பற்றியே அழுத்தமாகப் பேசியிருக்கிறார் ஜோர்டன். “9000க்கும் மேற்பட்ட முறை நான் பந்தைக் கூடையில் போடத் தவறியிருக்கிறேன். 300 போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்திருக்கிறேன். 26 முறை போட்டியை வெல்வதற்கான கடைசிப் புள்ளியை ஸ்கோர் செய்ய தவறியிருக்கிறேன். இப்படி மீண்டும் மீண்டும் தோல்விகளைச் சந்தித்தே வந்திருக்கிறேன். அதனால்தான் நான் ஜெயித்திருக்கிறேன். உலகால் அறியப்பட்டிருக்கிறேன்.”

1993 சமயத்தில் ஜோர்டன் பேஸ்கட் பாலிலிருந்து விலகி, பேஸ் பால் ஆடக் கிளம்பிவிட்டார். ‘ஜோர்டனின் காலம் முடிந்துவிட்டது’ என்றெல்லாம் பேசித் தீர்த்தார்கள். 1995ல் மீண்டும் சிகோகா புல் அணிக்குத் திரும்பினார். அப்போது அவர் விட்ட அறிக்கை, மூன்றே மூன்று வார்த்தைகள் கொண்டதே. ‘I am Back!’ அந்த அறிவிப்பை உலக ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடினர். தோல்வி, பயம், விரக்தி, நிராகரிப்பு, ஏமாற்றம், துரோகம் என எதிர்மறை விஷயங்கள் ஒவ்வொன்றும் நம்மைப் பிடித்து அழுத்தி, திணறடித்து, புதைத்து அடையாளமின்றி அழிக்கவே முயலும். அத்தனையையும் நம்பிக்கையால் அடித்து நொறுக்கி, மீண்டு, மீண்டும் எழுந்து நின்று எவன் ஒருவன் நெஞ்சை நிமிர்த்தி ‘I am Back’ என்று கம்பீரமாக நிற்கிறானோ, அவனையே வாழ்க்கை உச்சத்தில் கொண்டு வைக்கும்.

"தோல்வியடைவது என்பது எப்போதுமே வருத்தத்திற்குரியதே அல்ல. ஆனால், தோல்வியடைந்து விடுவோம் என்ற நினைப்பில் முயற்சியே செய்யாமல் ஒதுங்குவது மன்னிக்கவே முடியாத குற்றம். "

(வளர்வோம்.)