டி.என்.பி.எஸ்.சி. குரூப் II A தேர்வு



இலக்கியத்தில் அதிக மதிப்பெண் பெறுவது ஈஸி!

குரூப் II A தேர்வுக்கு விண்ணப்ப நடைமுறைகளை முடித்துவிட்டு தீவிரமாக தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள். மொத்தமுள்ள 1927 பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதவிருக்கிறார்கள். போட்டி கடுமையாக இருக்கும். பதற்றமும் கவனச்சிதறலும் இல்லாமல் நிதானமாக தயாராகுங்கள். இருக்கும் காலம் குறைவு. ஒரு நொடியைக் கூட வீண் செய்யாதீர்கள். திட்டமிட்டுத் தயாரானால் நிச்சயம் இத்தேர்வில் வெற்றி உறுதி. கடந்த இதழில் மொழிப்பாடம் (பகுதி-அ) பற்றி விரிவாக பார்த்தோம். இந்த இதழில், ‘இலக்கியம்’ (பகுதி-ஆ) பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி பார்க்கலாம்.

‘இலக்கியம்’ பாடத்தில் 10 தலைப்புகள் உண்டு. அவற்றை முழுமையான புரிதலோடு தெளிவாகப் படித்து உள்வாங்கினால் கண்டிப்பாக அதிக மதிப்பெண்களை பெறலாம்.  இலக்கியம் பகுதியில் உள்ள 10 தலைப்புகள் பற்றிப் பார்க்கலாம்.

1) திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (10 அதிகாரம் மட்டும்).
2) அறநூல்கள்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அமைந்த 11 நீதி நூல்கள், அகநூல்கள் ஆறு, ஒரு புறநூல்... இவற்றோடு ஒளவையார் பாடல்கள்.
3) கம்ப ராமாயணம் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், பாவகை மற்றும் சிறந்த தொடர்கள், முக்கிய வரிகள், அவ்வரிகள் எவரைக் குறிக்கிறது மற்றும் அவற்றில் அமைந்த பாவினம் எது?
4) புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பானவை, மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிறசெய்திகள்.
5) சிலப்பதிகாரம், மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள், உட்பிரிவுகள் மற்றும்
ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள்
6) பக்தி இலக்கியம்; பெரிய புராணம் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - திருவிளையாடற்புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்
7) சிற்றிலக்கியங்கள் - திருக்குற்றாலக் குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ் விடு தூது, நந்திக் கலம்பகம், விக்கிரமசோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளை விடு தூது, இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்
8)மனோன்மணியம், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்)
9) நாட்டுப்புறப் பாட்டு- சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
10) சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

இத்தலைப்புகளில் பெரும்பாலானவை 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை உள்ளடக்கியே இருக்கும். அது தவிர, குறிப்பிட்ட மூலநூல்கள், அவை தொடர்பான விளக்கவுரைகளைப் படித்து தயாராக வேண்டும். மு.வரதராசனார் மற்றும் நா.பாக்கியமேரி ஆகியோர் எழுதிய ‘இலக்கிய வரலாறு’ நூல்களைப் படித்து குறிப்பெடுத்துக்கொள்வதும் பயன் தரும்.
 


இலக்கியப் பகுதியில் கேள்விகள் அமையும் முறை

1. திருக்குறள்: திருக்குறளில் குறைந்தது 5 கேள்விகள் வரை கேட்கப்படும். திருக்குறள் பற்றிய கேள்விகள் இலக்கணப் பகுதியிலும் (பிரிவு-அ) கேட்கப்படலாம்.

உதாரணம்: இலக்கியப் பகுதியில்;
 
1. ‘தமிழ் மாதின் உயர்நிலை’ என்று அழைக்கப்படும் நூல் எது? - திருக்குறள்
2. ‘திருக்குறளின் பெருமையை’ உயர்த்திக் கூறும் நூல் எது? - திருவள்ளுவமாலை

இலக்கணப் பகுதியில்;

‘கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.’
-இக்குறட்பாவில் இடம்பெற்ற தொடை எது/எவை?

இவற்றில் எதுகை, மோனை, இயைபு மற்றும் முரண் ஆகியவற்றைக் காண வேண்டும். திருக்குறளில் அணியிலக்கணம் சார்ந்த கேள்விகளும் கேட்கப்படலாம். எதிர்ச்சொல், பிரித்து எழுதுதல் மற்றும் இலக்கணக் குறிப்பு ஆகியவை பெரும்பாலும் திருக்குறளில்தான் அமையும்.

2. அறநூல்கள்

இத்தலைப்பில், அடைமொழியால் குறிக்கப்படும் நூல்களின் வரிசை, நூலும் நூலாசிரியரும், நூலின் அடிவரையறை மற்றும் சிறப்புப்பெயர்கள் ஆகியவற்றில் கேள்விகள் கேட்கப்படும்.

உதாரணம்:

1. மருந்து நூலுக்கெல்லாம் அருமருந்து என்று அழைக்கப்படும் நூல் எது? - ஏலாதி
2. ‘உலக வசனம்’, ‘மூதுரை’ என்று அழைக்கப்படும் நூல்? - பழமொழி 400
3. ‘அறவுரைக்கோவை’ என்று அழைக்கப்படும் நூல்? - முதுமொழிக்காஞ்சி
4. போர்க்களம் பற்றிப் பாடும் நூல்? - களவழி நாற்பது

3. கம்பராமாயணம்  

கம்பராமாயணத்தின் முக்கிய வரிகள், இவ்வரிகள் யாரைக் குறிக்கிறது, இவற்றில் அமைந்த பாவினம் எது போன்றவை
கேட்கப்படும்.

உதாரணம்:

1. வடமொழியில் ஆதிகாவியம் என்று அழைக்கப்படும் நூல்? - கம்பராமாயணம்
2. கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர்? - ராமகாதை
3. ‘கங்கை வேடன்’ என்று அழைக்கப்படுபவர் யார்? - குகன்

4. புறநானூறு உள்ளிட்டவை

இத்தலைப்பில் 5 கேள்விகள் வரை கேட்கப்படும். புறநானூறு, அகநானூறு ஆகிய தலைப்புகளில் தலா 2 கேள்விகளும் மற்ற எட்டுத்தொகை நூல்களின் அடிவரையறை, முக்கிய வரிகள் சிறப்புப்பெயர்கள் பற்றியும் கேட்கப்படலாம்.

உதாரணம்:

1. ‘காப்பியப் பாட்டு’ என்று அழைக்கப்
படும் நூல்? - குறிஞ்சிப் பாட்டு
2. தமிழின் முதல் இசைப் பாட்டு எது? - பரிபாடல்
3. வஞ்சிநெடும் பாட்டு என்று அழைக்கப்படுவது? - பட்டினப்பாலை
4. தமிழர் வரலாற்றுக்களஞ்சியம் என்று அழைக்கும் நூல்? - புறநானூறு

5.சிலப்பதிகாரம் உள்ளிட்டவை

இத்தலைப்பிலும் 5 கேள்விகள் வரை கேட்கப்படும். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தலைப்பில் தலா 2 கேள்விகளும், ஐம்பெருங்காப்பியங்கள் மற்றும் ஐஞ்சிறுங்காப்பியங்கள் ஆகிய நூல்களின் முக்கிய வரிகள், சிறப்புப்பெயர்கள் ஆகியவை கேட்கப்படும்.

உதாரணம்:

1. முதல் சமயக் காப்பியம் எது? - சீவக சிந்தாமணி
2. பசு போற்றும் காப்பியம் எது? - மணிமேகலை
3. முதல் பௌத்த காப்பியம் எது? -மணிமேகலை
4. தமிழின் ‘இலியட்,’ ‘ஒடிசி’ என்று அழைக்கப்படும் நூல் எது? - சீவக சிந்தாமணி

6.பக்தி இலக்கியம்

பக்தி இலக்கியத்தில் 6 கேள்விகள் வரை கேட்கப்படும்.

உதாரணம்:

1. ‘உத்தமசோழப் பல்லவராயன்’ என்று அழைக்கப்பட்டவர்? - சேக்கிழார்
2. நபிகளின் வாழ்வு முழுவதையும் பாடி முடித்தவர் யார்? - பனூ அகமது மரக்காயர்

7.சிற்றிலக்கியங்கள்

இத்தலைப்பிலும் 5 கேள்விகள் வரை கேட்கப்படலாம். பரணி, உலா, பிள்ளைத் தமிழ், குறவஞ்சி, பள்ளு முதலியவை முக்கியத் தலைப்புகள் ஆகும்.

உதாரணம்:

1. தமிழில் தோன்றிய முதல் பரணி? - கலிங்கத்துப்பரணி
2. அறம் வைத்து பாடும் சிற்றிலக்கியம் எது? -கலம்பகம்

8.மனோன்மணியம் உள்ளிட்டவை

குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் பற்றி இரு கேள்விகள் கேட்கப்படும். பாத்திரப் படைப்புகள் பற்றிய கேள்விகளே இத்தலைப்பில் அதிகம் கேட்கப்படும்.  

உதாரணம்:
1. பாரதியின் படைப்புகளில் இசையின் பெருமையைக் கூறும் நூல்? - குயில்பாட்டு.
2. ‘சருக்கம்’ வைத்து பாரதி பாடியது? - பாஞ்சாலி சபதம்

9.நாட்டுப்புறப்பாட்டு

காதல், வீரம், தாலாட்டு, தொழில்பாட்டு, கடவுள் வழிபாடு சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். எதில் இருந்து வேண்டுமானாலும் கேள்விகள் வரலாம்.

உதாரணம்;

1. நாட்டுப்புற இலக்கியத்தின் தந்தை யார்? - வானமாமலை
2. ஏற்றம் இறைப்பதை புகழ்ந்து பாடும் நாட்டுப்புறப் பாடல் வகை?- தொழில்பாட்டு

10.சமய முன்னோடிகள்

அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் பற்றி 4 கேள்வி வரை கேட்கப்படும்.

உதாரணம்:

1. அழுது அடியடைந்த அன்பர் என்று அழைக்கப்படுபவர்? - மாணிக்கவாசகர்
2. ‘தாண்டக வேந்தர்’ என்று அழைக்கப்படுபவர்? - அப்பர்
3. ‘ஆளுடை நம்பி’ என்று அழைக்கப்படுபவர்? - சுந்தரர்

டிஎன்பிஎஸ்சி தேர்வைப் பொறுத்தவரை ‘இலக்கியம்’ பகுதியே தேர்ச்சியை தீர்மானிக்கும் பகுதி. எனவே இதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அடுத்த இதழில், ‘தமிழறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு’ பற்றிப் பார்க்கலாம்.