அதிர்வு..! விழிப்புணர்வு..!



இணையத்தில் தகவல்களைத் திரட்டி, கல்வி நிறுவனங்களிடம் விளம்பரம் பெறுவதே நோக்கமாகக் கருதி நடத்தப்படும் இதழ்கள் போல இல்லாமல் கல்வித்துறையின் செயல்பாடு, எதிர்காலம் குறித்தெல்லாம் கவலைப்படும் நோக்கில் வெளிவருகிறது ‘குங்குமச்சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி’. ‘ஆயிஷா’ நடராசனின் எழுத்துக்கள் அதிர்வை உருவாக்குகின்றன. ‘நல்ல விஷயம் 4’ அருமை.
-நா.​வெங்க​டேசன், ​பேராவூரணி.

கண்கள் தான் மனித வாழ்க்கைக்கு அடிப்படை. பெரும்பாலான பிள்ளைகள் படிக்கும் ஆர்வத்தில் கண்களைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. ‘கண்கள் பத்திரம் கண்மணிகளே...’ கட்டுரையின் மூலம் சரியான நேரத்தில் விழிப்புணர்வை உருவாக்கிவிட்டீர்கள்.
- ஜான் வில்லியம், சேலம்.



செல்போனைப் பற்றி எதிர்மறை எண்ணங்களே நிறைந்திருக்கும் நிலையில், ஒரு ஆசிரியர் நினைத்தால் எதையும் கற்றல் கருவியாக பயன்படுத்த முடியும் என்று நிரூபித்திருக்கிறார் திலீப். அவருக்கும், அவருக்கு வெளிச்சம் தந்த கல்விவேலை வழிகாட்டிக்கும் நன்றிகள்!
- எஸ்.கோமதி சுந்தர், தஞ்சாவூர்.

‘வெர்ப்’, ‘டென்ஸ்’, ‘வாய்ஸ்’ என்றெல்லாம் மிரட்டாமல், இயல்பான உரையாடல் வடிவில் சேலம் ப.சுந்தர்ராஜ் சொல்லித்தரும் ஆங்கிலம் சுவாரஸ்யமாக இருக்கிறது. நம்மையறியாமல் நமக்குள் இருந்து வந்துவிழும் ஆங்கில வார்த்தைகளை முறைப்படுத்தி பேசினாலே அம்மொழி நமக்கு கைவந்துவிடும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது ‘அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா’ பகுதி.
- எஸ்.சுகுணா கோபால், வந்தவாசி.

குரூப்-II A தேர்வுக்கான வழிகாட்டல்கள் அருமை. கேள்விகள் எப்படி அமையும் என்பதை உதாரணத்தோடு விளக்கிய விதமும் நன்று.
- செ.இளையநிலா, காங்கேயம்.

‘ஆயிஷா’ நடராசன் எழுதும் வன்முறையில்லா வகுப்பறை கட்டுரையை தொடர்ந்து வாசித்து வருகிறேன். வகுப்பறைக்குள் வெளியில் தெரியாமல் நடக்கும் அத்துமீறல்களையும், அடக்குமுறைகளையும் அற்புதமாக ஆவணப்படுத்துகிறார். யுனிசெஃப் ஆய்வு முடிவுகள் இதயத்தை உலுக்குகின்றன.
- கே.வி.ரங்கநாதன், புதுச்சேரி.