கடலில் தொலைந்த பொக்கிஷங்கள்




உலகம் முழுவதும் கடலில் சுமார் முப்பதாயிரம் கப்பல் விபத்துகள் அரங்கேறி உள்ளன. இந்த கப்பல்களில் இருந்த பொக்கிஷங்களின் மதிப்பு நூற்றுக்கணக்கான கோடி டாலர்கள் இருக்குமாம். ‘‘இவற்றைத் தோண்டி எடுக்க 400 ஆண்டுகள் பிடிக்கும்’’ என்று யுனெஸ்கோ ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடலில் புதைந்த, மீட்க முடியாத பொக்கிஷங்கள் பற்றிய ருசிகரத் தகவல்கள் இதோ:

எல் டொராடோ:

1502ல் ‘எல் டொராடோ’ என்ற கப்பல் ‘மோனா பாஸேஜ்’ என்னும் இடத்தில் சின்னாபின்னமானது. ‘சாண்டோ டொமிங்கோ’விலிருந்து ஸ்பெயினுக்கு புறப்பட்ட இந்தக் கப்பலில் ஒன்றரை டன் எடையுள்ள தங்க மேஜை ஒன்று இருந்தது. இத்துடன் முப்பதாயிரம் டாலர் (1962ல் மதிப்பீடு செய்யப்பட்டது ) மதிப்புள்ள பொன்னும் முத்தும் மூழ்கின. பாபடில்லா என்ற கவர்னர், தன்னைப் பதவியில் அமர்த்தியமைக்காக கத்தோலிக்க மன்னர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, இந்தப் பொக்கிஷங்களை அனுப்பினார்.

ஃப்ளார் டி லா மார்:

பதினாறாம் நூற்றாண்டில் தொலைந்த பொக்கிஷங்களில் மிக மிகப் பெரியது இதுதான். 1511ம் ஆண்டில் மலாக்கா (தற்போதைய மலேசியா) ராஜ்ஜியத்தில் இருந்து கொள்ளையடித்து வந்த போர்த்துக்கீசிய கப்பல், சுமத்ராவின் வடக்குக் கடற்கரையில் மூழ்கியது. அதில் 60 டன் எடையுள்ள பொன், சுல்தானின் சிம்மாசனம், 200 பெட்டிகளில் வைரம், பவளம், வைடூரியம், நீலக்கல் ஆகியவை அடைக்கப்பட்டு இருந்தன. இதன் மதிப்பு 300 கோடி ரூபாயைத் தாண்டுமாம்.

மெர்ச்சன்ட் ராயல்:

இந்தக் கப்பல், ஸ்பெயின் நாட்டுப் பொக்கிஷங்களை சுமந்து கொண்டு இங்கிலாந்தை நோக்கி வந்தது. இதில் 36 பித்தளை பீரங்கிகளுடன் 80 ஊழியர்கள் மற்றும் சில பயணிகளும் இருந்தனர். மரப்பெட்டகங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்பானிய வெள்ளி நாணயங்கள், 500 மெகா சைஸ் தங்கப் பாளங்கள், வெள்ளிப் பாளங்கள், பவளம், வைரம், வைடூரியம், மரகதம், முத்து மற்றும் கனமான நகைகளும் நிறைந்திருந்தன. இவை எல்லாம் இன்னும் கடலுக்குள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

நௌ சாகஸ்:

போர்த்துக்கீசிய வணிகக் கப்பலான ‘நௌ சாகஸ்’, 1594ல் கடல் அன்னையின் வயிற்றுக்குள் சென்றது. இரண்டு உடைந்த கப்பல்களின் சரக்குகளுடன் கிழக்கிந்தியத் தீவுகளில் இருந்து தாயகத்திற்கு திரும்பும் பாதையில் இது மூழ்கியது. 35 லட்சம் க்ரூஸடோக்கள் (அப்போதைய போர்த்துக்கீசிய தங்க நாணயம்), எண்ணிலடங்காத பெட்டிகளில் வைரம், முத்து, மாணிக்கங்களும் இருந்தன. இதன் மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமாம்.

டு பான் போர்ட்:

கடலில் தொலைந்து கண்டு பிடிக்க முடியாமல் போன வளமான பிரெஞ்சு கலங்களில் ஒன்று இது. 1666ல் தன் பயணத்தை முடித்துத் திரும்பியபோது, ஒரு ஆங்கில கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கியது. ஒரு பெட்டியில் மட்டுமே 40 ஆயிரம் பவுண்ட் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருந்ததாம். மற்ற பொக்கிஷ பெட்டகங்களின் மதிப்பு நான்கு லட்சம் பவுண்டுகள் இருக்குமாம்.

லா டெலிவரன்ஸ்:

1755ல் ஸ்பானிய ‘டெலிவரன்ஸ்’ கப்பல், மெக்ஸிகோ, பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளின் சுரங்கங்களில் இருந்து பொன்னையும், வெள்ளியையும் அள்ளிக் கொண்டு, ஹவானாவிலிருந்து புறப்பட்டது. அடுத்த நாளே சூறாவளிப் புயலில் சிக்கி மூழ்கியது. அங்கே தொலைந்த தங்கம், வெள்ளியின் மதிப்பு 200 கோடி ரூபாயைத் தாண்டுமாம். கடலில் தொலைந்து போன பழங்கால பொக்கிஷங்களை இதுவரை மீட்க இயலவில்லை. வருங்காலத்திலாவது மீட்கமுடியுமா? பார்க்கலாம்!  

 தஸ்மிலா, கீழக்கரை.